ஞாயிறு, மார்ச் 11, 2012

நலம் தரும் சொல்....

நாராயணாவென்னும் நாமம்!! திருமங்கையாழ்வார் கண்டு கொண்டது!! இன்பம், செல்வம், புகழ், மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலான மோக்ஷத்தையும் தரவல்லது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே நாராயண நாமம் வருகிறது. இதற்கு வியாக்யானம் கூறும் ஸ்ரீ பராசர பட்டர் இது ஒரு குஹ்ய (ரகசிய) நாமம் என்று கூறுகிறார். இந்த நாமத்தின் அர்த்தத்தை குரு முகமாக அறிய வேண்டும் என்கிறார். அர்த்தம் தெரியாவிட்டாலும் உள்ளன்போடு செய்யும் நாம சங்கீர்த்தனம் நமக்கு உரிய பலனை அளிக்கும். அதற்கு அஜாமிளன் சரித்திரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.


ஸ்ரீமத் பாகவதத்தில் 6வது காண்டத்தில் அஜாமிளோபாக்யனம் கூறப்பட்டுள்ளது. அஜாமிளன் பிறப்பால் அந்தணர் குலத்தை சார்ந்தவர். ஒரு முறை யாக யக்ஞங்களுக்காக தர்ப்பை முதலியவைகளை சேகரிக்க வேண்டி அஜாமிளன் காட்டுக்கு சென்றார். அங்கே ஒரு தாசியை கண்டு அவளை மோகித்து, தன்னிலை மறந்து, அவளுடனேயே வாழ்கிறார். அந்த தாசிக்கும் அஜாமிளனுக்கும் 10 பிள்ளைகள் பிறக்கிறார்கள்.


முன் வினை பயனால் தனது கடைசி பிள்ளைக்கு நாராயணன் என்று பெயரிட்டார்.  கடைசி பிள்ளையின் மேல் பாசம் வைத்த அஜாமிளன் தன்னை அறியாமல் நாராயணா என்று பல முறை கூறுகிறார். கடைசி காலத்தில் அஜாமிளனின் உயிரை கொண்டு செல்ல யம தூதர்கள் வருகிறார்கள். யம தூதர்களை கண்ட பயத்தில் அஜாமிளன் தனது கடைசி மகனை நினைத்து நாராயணா என்று அழைக்கிறார். நாராயணா நாமத்தை சொன்னவுடன் வைகுண்டத்திலிருந்து பகவான் விஷ்ணுவின் தூதர்கள் வந்து யம தூதர்களை தடுத்தார்கள். யம தூதர்கள் அஜாமிளன் செய்த பாவத்தின் பட்டியலை எடுத்து கூறினார்கள். அதற்கு விஷ்ணு தூதர்கள் அனைத்து பாவங்களையும் ஸ்ரீ நாராயண நாம ஜபம் போக்கி விட்டதை எடுத்துரைத்து அஜாமிளன் உயிரை காக்கிறார்கள்.


இதை கேட்ட அஜாமிளன், பகவான் நாமத்தின் மகிமையை உணர்ந்து, தனது மீதி நாட்களை ஹரித்வாரில் பகவன் நாம சங்கீர்த்தனத்தில் கழித்து பிறகு வைகுண்ட பதவி அடைகிறார். விஷ்ணு தூதர்கள் தங்களை தடுத்த விஷயத்தை யமதர்மராஜனிடம் யம தூதர்கள் கூற, அதற்கு யமன் "பகவான் விஷ்ணுவிற்கு தான் கட்டு பட்டவர் என்றும், பகவானின் பக்தர்களையும் பகவானின் நாமத்தை கூறுபவர்களையும் ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று தனது யம தூதர்களுக்கு உரைக்கிறார்.


ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில் "சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து" என்று வருகிறது. இதன் பொருள், அது பகவானின் நாமம் என்று தெரிந்து கூட சொல்ல வேண்டாம். நாரயணா என்ற சப்தமே நமது துயரங்களை போக்க வல்லது. எப்படி ஒரு குழந்தை தனது மழலை சொல்லால் கூறுவதை (அது தவறாக இருந்தாலும்) தாய் புரிந்து கொள்கிறாளோ, அது போல அவனது பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார்.


"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
  நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
  வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்
  நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"

நித்தியம் நாராயண நாமம் சொல்வோம்! நமது துன்பம் நீங்கி இன்பமும் வீடும் அடைவோம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக