செவ்வாய், நவம்பர் 16, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 197

50. ஸ்வாபனஸ்ஸ்வவஶோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத் |

வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேஶ்வர: ||

இந்த ஐம்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

465. ஸ்வாபன:, 466. ஸ்வவஶ:, 467. வ்யாபீ, 468. நைகாத்மா, 469. நைககர்மக்ருத் |

470. வத்ஸர:, 471. வத்ஸல:, 472. வத்ஸீ, 473. ரத்னகர்ப்ப:, 474. தனேஶ்வர: ||

465. ஓம் ஸ்வாபனாய நம:

ப்ராணின: அனைத்து உயிரினங்களையும் 

ஸ்வாபயன் கனவில் உழல வைக்கிறார் 

ஆத்மஸம்போதி ஆத்மாவைப் பற்றிய அறிவிலிருந்து (ஆத்மஞானத்திலிருந்து) அவைகளை 

விதுரான் விலக்கி வைக்கிறார் 

மாயயா குர்வன் மாயையின் மூலமாக 

ஸ்வாபன: எனவே பகவான் 'ஸ்வாபன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மாயையின் மூலம் அனைத்து உயிரினங்களையும் அவற்றின் ஆத்மஞானத்திலிருந்து விலக்கி வைத்து கனவினில் (கனவைப் போன்ற இந்த பிறவிப்பெருங்கடலில்) உழலவைக்கிறார். எனவே அவர் 'ஸ்வாபன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

466. ஓம் ஸ்வவஶாய நம:

ஸ்வதந்த்ர: இந்த சுதந்திரமாக இருக்கிறார் 

ஸ்வவஶ: பகவான் 'ஸ்வவஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

ஜகதுத்பத்தி இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்து 

ஸ்திதி காத்து 

லயஹேதுத்வாத் அழித்தல் ஆகியவற்றிற்கு காரணமாய் இருப்பதால்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பதற்குக் காரணமாய் இருக்கிறார். எனவே அவர் சுதந்திரமானவர் (அவருக்கு எவரது உதவியும் தேவையில்லை). எனவே அவர் 'ஸ்வவஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வவஶ: என்றால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று பொருள். அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கும் பகவான் சுதந்திரமானவர். தனக்கு ஒரு காரணமற்றவர். எனவே, அவர் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் (ஸ்வவஶ:). 

467. ஓம் வ்யாபினே நம:

ஆகாஶவத் ஆகாயத்தைப் போன்று 

ஸர்வகதத்வாத் அனைத்தையும் பரந்து, சூழ்ந்து வ்யாபிப்பதால் 

வ்யாபீ பகவான் 'வ்யாபீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆகாயம் எவ்வாறு இந்த உலகத்தை சூழ்ந்து வ்யாபிக்கிறதோ, அவ்வாறே பகவான் (அந்த ஆகாயம் உட்பட) அனைத்தையும் பரந்து, சூழ்ந்து வ்யாபிக்கிறார். எனவே, அவர் 'வ்யாபீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஆகாஶவத்ஸர்வகதஸ்ச நித்ய:'

(அந்தப் பரப்ரஹ்மமானது) ஆகாயத்தைப் போன்று வ்யாபிக்கிறது, என்றும் உள்ளது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதால் 

ஸர்வகார்யனாம் அனைத்து காரியங்களையும் 

வ்யாபனாத்வா வ்யாபிப்பதால் 

வ்யாபீ பகவான் 'வ்யாபீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மூலகாரணமாய் இருப்பதன் மூலம் பகவான் (காரியங்களாக) அனைத்தையும் வ்யாபிக்கிறார். எனவே அவர் 'வ்யாபீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

468. ஓம் நைகாத்மனே நம:

ஜகதுத்பத்யாதிஶு இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் முதலான செயல்களை ஆற்றும்பொழுது 

ஆவீர்பூத தோன்றி 

நிமித்தஶக்திபிர் குறிப்பிட்ட சக்திகளுடன் 

விபூதிபிர் தனது அதிசய சக்தியால் உருவங்களை தரித்து 

அநேகதா பற்பல 

திஶ்டன் விளங்குவதால் 

நைகாத்மா பகவான் 'நைகாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் ஆகிய செயல்களை ஆற்றும்பொழுது, அந்தந்த காரியங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட சக்திகளுடன் பற்பல உருவங்களை தமது அதிசய சக்தியால் தரிக்கிறார். எனவே, அவர் 'நைகாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைகாத்மா என்றால் ந+ஏக+ஆத்மா, அதாவது பற்பல ஆத்மாக்கள் என்று பொருள்படும். பகவானே இவ்வாறு பற்பல ஆத்மாக்களாக உருவம் தரிக்கிறார். 

469. ஓம் நைககர்மக்ருதே நம:

ஜகதுத்பத்தி இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் 

ஸம்பத்தி பாதுகாத்து வளர்த்தல் 

விபத்தி ஸம்ஹாரம் செய்தல் 

ப்ரப்ருதே முதலான பற்பல 

கர்மாணி செயல்களை 

கரோதீதி செய்வதால் 

நைககர்மக்ருத் பகவான் 'நைககர்மக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்து வளர்த்தல், (தகுந்த சமயத்தில்) அழித்தல் ஆகிய பற்பல செயல்களை செய்கிறார். எனவே அவர் 'நைககர்மக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைககர்மக்ருத் என்ற சொல் ந+ஏக+கர்ம+க்ருத் என்று பிரிந்து, பற்பல செயல்களை செய்பவர் என்று பொருள் தரும். 

470. ஓம் வத்ஸராய நம:

வஸதி வசிக்கின்றன (இருக்கின்றன) 

அத்ர இங்கு (காணப்படும்) 

அகிலமிதி அனைத்து உலகங்களும் (ப்ரபஞ்சம்) 

வத்ஸர: எனவே பகவான் 'வத்ஸர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு காணப்படும் ப்ரபஞ்சம் அனைத்தும் அவருக்குள்ளே வசிக்கின்றன (இருக்கின்றன). எனவே பகவான் 'வத்ஸர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

471. ஓம் வத்ஸலாய நம:

பக்த தனது அடியவர்களிடம் 

ஸ்னேஹித்வாத் அளவுகடந்த அன்போடு இருக்கிறார் 

வத்ஸல: எனவே பகவான் 'வத்ஸல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஒரு தாய்ப் பசு எவ்வாறு தன் கன்றிடம் அன்பு காட்டுமோ அவ்வாறே) பகவான் தனது அடியவர்களிடம் அளவுகடந்த அன்போடு இருக்கிறார். எனவே அவர் 'வத்ஸல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாய்ப் பசுவின் அன்பு: பசுவானது தூய்மையை விரும்பும் பிராணியாகும். புல்லில் அசுத்தம் இருப்பின் பசியிருந்தாலும் அந்த புல்லை பசுவானது உண்ணாது. ஆனால், அதே பசுவானது தனது கன்றுக்குட்டி ஒரு அசுத்தத்தில் வீழ்ந்தால் தனது நாவால் நக்கி அதை தூய்மையாக்கும். அவ்வாறே, பகவானும் சுயநலமின்றி, இந்த அசுத்தமான ஸம்ஸாரத்தில் மீண்டும் மீண்டும் அவதரித்து நம்மைத் தூய்மைப் படுத்துகிறார்.

'வத்ஸாம்ஸாப்யாம் காமபலே' (பாணினி ஸூத்ரம் 5.2.98)

இதி லச்ப்ரத்யய: | இந்த பாணினி ஸூத்ரத்தின் படி 'வத்ஸ' என்ற சொல்லிற்கு 'ல' எனும் விகுதி சேர்ந்து 'வத்ஸல' என்ற வார்த்தை உண்டாகிறது.

472. ஓம் வத்ஸினே நம:

வத்ஸானாம் கன்றுகளை 

பாலனாத் மேய்ப்பவராதலால் 

வத்ஸீ பகவான் 'வத்ஸீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கன்றுகளை மேய்த்துப் பாதுகாப்பவராதலால் பகவான் 'வத்ஸீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஜகத்பிதுஸ்தஸ்ய இந்தப் ப்ரபஞ்சத்தின் தந்தையானபடியால் 

வத்ஸபூதா: ப்ரஜா அனைத்து உயிரினங்களும் அவரின் பிள்ளைகளாவோம் 

இதி வா வத்ஸீ பகவான் 'வத்ஸீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானே இந்தப் ப்ரபஞ்சத்தின் தந்தையாவார். அனைத்து உயிரினங்களும் அவரது பிள்ளைகள். எனவே அவர் 'வத்ஸீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வத்ஸ என்ற சொல்லிற்கு கன்றுகள், குழந்தைகள் ஆகிய பொருள்கள் உண்டு. இவை இரண்டைக் கொண்டும் ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார். 

473. ஓம் ரத்னகர்ப்பாய நம:

ரத்னானி வைரம் முதலான அனைத்து வகை விலைமதிப்பில்லா கற்களையும் 

கர்பபூதாநி அஸ்யேதி தனது கர்ப்பத்தில் (தன்னுள்ளே) தாங்கியுள்ள 

ஸமுத்ரோ கடல் (கடலின் வடிவாக இருப்பதால்) 

ரத்னகர்ப்ப: பகவான் 'ரத்னகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வைரம் முதலான அனைத்து வகை விலைமதிப்பில்லா கற்களையும் தனது கர்ப்பத்தில் (தன்னுள்ளே) தாங்கியுள்ள கடலின் வடிவாக இருப்பதால் பகவான் 'ரத்னகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

474. ஓம் தனேஶ்வராய நம:

தனானாம் அனைத்து செல்வங்களுக்கும் 

ஈஶ்வர: உரிமையாளராக (ஸ்வாமியாக) இருப்பதால் 

தனேஶ்வர: பகவான் 'தனேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து செல்வங்களுக்கும் உரிமையாளர் பகவானே. எனவே அவர் 'தனேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடலில் காணப்படும் வைரம் முதலானவை மட்டுமல்ல. அனைத்து செல்வங்களும் பகவானுடையதுதான்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக