ஞாயிறு, மார்ச் 02, 2025

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 226

79. ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கஶ்சந்தனாங்கதி |

வீரஹா விஶம: ஶூன்யோ க்ருதாஶீரசலஶ்சல: || 

இந்த எழுபத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

737. ஸுவர்ணவர்ண:, 738. ஹேமாங்க:, 739. வராங்க:, 740. சந்தனாங்கதி |

741. வீரஹா, 742. விஶம:, 743. ஶூன்யோ:, 744. க்ருதாஶீ:, 745. அசல:, 746. சல: || 

737. ஸுவர்ணவர்ணாய நம:

ஸுவர்ணஸ்யேவ பொன்னை ஒத்த 

வர்ணோSஸ்யேதி நிறமுடையவராதலால் 

ஸுவர்ணவர்ண: பகவான் 'ஸுவர்ணவர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பொன்னையொத்த நிறமுடையவராதலால் 'ஸுவர்ணவர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யதா பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம்' (முண்டக உபநிஶத் 3.1.3)

முண்டக உபநிஶத்தில்  கூறப்பட்டுள்ளது: எப்பொழுது ஸாதகன் தங்கத்தைப் போல் ஒளிர்கின்ற (பரப்ரஹ்மனை) பார்க்கிறானோ...

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

738. ஹேமாங்காய நம:

ஹேமேவ தங்கம் போன்ற 

அங்கம் வபுர் (வபு:) அஸ்யேதி அங்கம் அதாவது உடல் படைத்தவராதலால் 

ஹேமாங்க: பகவான் 'ஹேமாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தங்கம் போன்ற உடல் படைத்தவராதலால் பகவான் 'ஹேமாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ய ஏஶோந்தராதித்யே ஹிரண்மய: புருஶ:' (சாந்தோக்ய உபநிஶத் 1.6.6)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: சூரியமண்டலத்தின் நடுவே தங்கமயமான பரம்பொருள் இருக்கிறார்.

739. வராங்காய நம:

வரானி ஶோபனான்யங்கானி (ஶோபனானி அங்கானி) 'வர', அதாவது அழகிய அங்கங்களை (உடற்பாகங்களை) 

அஸ்யேதி உடையவராதலால் 

வராங்க: பகவான் 'வராங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகிய அங்கங்களை (உடற்பாகங்களை) உடையவராதலால் பகவான் 'வராங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

"ஸ்வங்க:" என்ற 616வது திருநாமத்திற்கும் ஆச்சார்யாள் இதே விளக்கத்தை அளித்திருந்தார். எனினும், திருநாமம் வேறாக (வராங்க: என்று) இருப்பதால், புனருக்தி தோஷம் இல்லை.

740. சந்தனாங்கதினே நம:

சந்தனைர் 'சந்தன' அதாவது 

ஆஹ்லாதனைர் மகிழ்ச்சியை அளிக்கவல்ல 

அங்கதை: கேயூரைர் 'அங்கதம்' என்னும் தோள்வளைகளை 

பூஶித இதி அணிந்திருப்பதால் 

சந்தனாங்கதி: பகவான் 'சந்தனாங்கதி:' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(பார்க்கப் பார்க்க) மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கவல்ல தோள்வளைகளை அணிந்திருப்பதால் பகவான் 'சந்தனாங்கதி:' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

741. வீரக்னே நம:

தர்மத்ராணாய அறத்தை காப்பதற்காக 

வீரான் வீரர்களை 

அஸுரமுக்யான் அசுர தலைவர்களை (அசுர அரசர்களை) 

ஹந்தீதி அழிப்பதால் 

வீரஹா பகவான் 'வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை காப்பதற்காக முக்கியமான அசுர தலைவர்களை (அசுர அரசர்களை) அழிப்பதால் பகவான் 'வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்னர் 166வது திருநாமத்திலும் ஆச்சார்யாள் இதே போன்ற உரையை அளித்திருந்தார். "முக்கிய" என்ற வார்த்தை இங்கு பிரதானமாகக் கொள்ளவேண்டும். முந்தைய திருநாமத்தில் இந்த சொல் இல்லை. எனவே அங்கு பொதுவாக அசுரப்படைகளை அழிப்பவர் என்று பொருள் கொள்ளலாம். இங்கோ முக்கிய அசுரர்களை, அதாவது ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, இராவணன், கம்சன் போன்ற பெரும் அசுரர்களை பகவான் நேரடியாக அழிக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும்.

742. விஶமாய நம:

ஸமோ நாஸ்ய வித்யதே அவருக்கு இணையானவர் இல்லை 

ஸர்வ விலக்ஷணத்வாத் அனைத்தையும் விட வேறானவராக இருப்பதால் 

இதி விஶம: பகவான் 'விஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனக்கு இணையானவர் (சமமானவர்) இல்லாததால் பகவான் 'விஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: க்ருதோSன்ய:' (ஸ்ரீமத் பகவத்கீதை 11.43)

ஸ்ரீமத் பகவத்கீதையில் அர்ஜுனன் பகவானைப் பார்த்துக் கூறுகிறான்: உனக்கு நிகர் யாருமில்லை; எனில் உனக்கு மேல் வேறு யாவர்?

இதி பகவத்வசனாத் | இவ்வாறு ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது. 

743. ஶூன்யாய நம:

ஸர்வவிஶேஶரஹிதத்வாத் எவ்வித வேறுபாடுகளும் இல்லாததால் 

ஶூன்யவத் இல்லாதது போல் இருக்கிறார் 

ஶூன்ய: எனவே பகவான் 'ஶூன்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நிர்குண ப்ரஹ்மமான பகவான் இத்தகையவர் என்று வேறுபடுத்தி கூற இயலாத வகையில் எவ்வித வேறுபாடுகளும் அற்று, அவர் இல்லாதது போலவே இருக்கிறார். எனவே, அவர் 'ஶூன்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

744. க்ருதாஶிஶே நம:

க்ருதா விகலிதா 'க்ருதா' அதாவது அற்றவர் 

ஆஶிஶ: ப்ரார்த்தனா (வேறொருவரிடம்) வேண்டுதல் 

அஸ்யேதி க்ருதாஶீ: பகவான் 'க்ருதாஶீ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேறொருவரிடம் பிரார்திக்க (வேண்டுதல்கள்) இல்லாதவராதலால் பகவான் 'க்ருதாஶீ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (திருக்குறள் எண் 4) 

745. அசலாய நம:

ந ஸ்வரூபான் தன்னுடைய இயற்கையிலோ (உருவம்) 

ந ஸாமர்த்யான் திறனிலோ 

ந ச ஞானாதிகாத்குணாத் அறிவு (ஞானம்) முதலிய குணங்களிலோ 

(ந)சலனம் வித்யதே அவரிடம் எக்காலத்திலும் எவ்வித மாற்றமும் காணப்படுவதில்லை 

அஸ்யேதி அசல: எனவே, பகவான் 'அசல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இயற்கை (உருவம்), திறன் மற்றும் அறிவு (ஞானம்) முதலிய குணங்களில் எக்காலத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை (என்றும் முழுமையாக இருக்கின்றன). எனவே, அவர் 'அசல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘சல’ என்ற மாறுவது (சலனம்). அசல என்றால் மாறாதிருப்பது. பகவானின் குணங்கள் என்றும் மாறுவதில்லை.

745. சலாய நம:

வாயுரூபேண காற்றின் வடிவில் 

சலதீதி அசைகிறார் 

சல: எனவே பகவான் 'சல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாயுதேவனின் உள்ளுறை ஆன்மாவான பகவான் காற்றின் வடிவில் அசைகிறார் (ஓரிடத்தில் நில்லாது எங்கும் செல்கிறார்). எனவே அவர் 'சல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

ஞாயிறு, ஜூன் 30, 2024

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 225

78. ஏகோ நைக: ஸவ: க: கிம் யத்தத்பதமனுத்தமம் |

லோகபந்துர்லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || 

இந்த எழுபத்தெட்டாவது ஸ்லோகத்தில் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

725. ஏக:, 726. நைக:, 727. ஸவ:, 728. க:, 729. கிம், 730. யத், 731. தத், 732. பதமனுத்தமம் |

733. லோகபந்து:, 734. லோகநாத:, 735. மாதவ:, 736. பக்தவத்ஸல: || 

725. ஏகஸ்மை நம:

பரமார்த்தத: வாஸ்தவமாக (உண்மையில்) 

ஸஜாதீய ஒரே வகையைச் சார்ந்த பொருட்களும் 

விஜாதீய வெவ்வேறு வகையைச் சேர்ந்த பொருட்களும் 

ஸ்வகத பேதவிநிர்முக்தத்வாத் தம்மை அன்றி வேறொன்றும் இல்லாத தன்மை உடையவராதலால் 

ஏக: பகவான் 'ஏக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாஸ்தவமாக பகவானை அன்றி வேறொன்றும் இல்லை. இங்கு நமக்கு வெளிப்படையாக, வெவ்வேறாகத் ஸஜாதீய, விஜாதீய வேறுபாடுகளுடன் உள்ள பொருட்கள் கூட பகவானை அன்றி வேறொன்றும் இல்லை. எனவே அவர் 'ஏக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸஜாதீய வேறுபாடுகள்: பூக்கள் என்ற ஒரே வகுப்பைச் சேர்ந்திருந்தாலும் மல்லிகையும், செம்பருத்தியும் உருவம், மணம் போன்ற வெவ்வேறு தன்மைகளை கொண்டுள்ளன. மனிதர்களுக்குள்ளேயும் உருவம் முதலிய வேறுபாடுகள் உள்ளன.

விஜாதீய வேறுபாடுகள்: தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் போன்ற வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தவை தோற்றம் முதலியவற்றில் வேறுபட்டு உள்ளன.

‘ஏகமேவாத்விதீயம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘(அந்த ஆதிமுழுமுதற்கடவுள்) இரண்டற்ற ஒருவராவார் (அத்விதீய)’

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

726. நைகஸ்மை நம:

மாயயா தனது மாயையால் 

பஹுரூபத்வாத் பல்வேறு வடிவங்களாகத் தோன்றுவதால் 

நைக: பகவான் 'நைக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துமே பகவான் என்றால் நமக்கு கண்கூடாக ஏன் இவ்வளவு (ஸஜாதீய, விஜாதீய) வேறுபாடுகள் தெரிகின்றன? அதை இந்தத் திருநாமம் விளக்குகிறது. வாஸ்தவத்தில் பரப்ரஹ்மத்தைத் தவிர வேறொன்றும் இல்லை என்றாலும், வ்யவஹார நிலையில் (அதாவது மாயைக்கு உட்பட்ட உலக வழக்கில்) தனது மாயையால் பகவான் பல்வேறாகத் தோன்றுகிறார். எனவே அவர் 'நைக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைக: = ந + ஏக: என்று பிரிக்கவேண்டும். ஒன்றல்ல (பல) என்று இதற்குப் பொருள். 

'இந்த்ரோ மாயாபி: புருரூப ஈயதே' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.19)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரம்பொருள் மாயையால் பல்வேறு உருவங்களாகத் தெரிகிறார்.

727. ஸவாய நம:

ஸோமோ ஸோமரசத்தை 

யத்ராபிஸூயதே பிழிந்தெடுத்து 

ஸோSத்வர: செய்யப்படும் ஒரு ஸோமயாகத்திற்கு 

ஸவ: 'ஸவ:' என்று பெயர். அந்த ஸோமவேள்வியின் வடிவினராக இருப்பதால் பகவான் 'ஸவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸோமரசத்தை பிழிந்தெடுத்து செய்யப்படும் ஒரு ஸோமயாகத்திற்கு 'ஸவ:' என்று பெயர். அந்த ஸோமவேள்வியின் வடிவினராக இருப்பதால் பகவான் 'ஸவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

728. காய நம:

கஶப்த: 'க' என்ற சொல் 

ஸுகவாசக: சுகத்தைக் (இன்பத்தைக்) குறிக்கும் 

தேன ஸ்தூயத இதி அந்த சொல்லினால் துதிக்கப்படுபவர் ஆதலால் 

க: பகவான் 'க' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சுகத்தைக் (இன்பத்தைக்) குறிக்கும் 'க' என்ற சொல்லினால் துதிக்கப்படுபவர் ஆதலால் பகவான் 'க' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கம் ப்ரஹ்ம' (சாந்தோக்ய உபநிஶத் 4.10.5)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆனந்தமே (க:) பரம்பொருள் (ப்ரஹ்மம்)

729. ஓம் கஸ்மை நம:

ஸர்வபுருஶார்த்தரூபத்வாத் (அறம், பொருள், இன்பம் , வீடு ஆகிய) மனித வாழ்வின் குறிக்கோள்களின் உருவமாக இருப்பதால் 

ப்ரஹ்மைவ பரம்பொருள் ஒன்றே 

விசார்யமிதி ஆராயத் தகுந்தது 

ப்ரஹ்ம கிம் எனவே பரம்பொருளான பகவான் 'கிம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அறம், பொருள், இன்பம் , வீடு ஆகிய) மனித வாழ்வின் குறிக்கோள்களின் உருவமாக இருப்பதால் பரம்பொருள் ஒன்றே ஆராயத் தகுந்தது. எனவே பரம்பொருளான பகவான் 'கிம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கிம்' என்றால் எது, என்ன என்று பொருள். இந்த கேள்விக்கு உரியவர் பரம்பொருள் மட்டுமே. அவர் மட்டுமே இவ்வாறு ஆராயத்தக்கவர். எனவே, பகவானே 'கிம்'

730. யஸ்மை நம:

யச்சப்தேன 'யத்' என்னும் சொல் 

ஸ்வத:ஸித்த தானே விளங்குவதான 

வஸ்து உத்தேஶவாசினா ஒன்றைக் குறிக்கும் 

ப்ரஹ்ம நிர்திஶ்யத (இந்த சொல்லினால்) பரம்பொருளே குறிப்பிடப்படுகிறது 

ப்ரஹ்ம யத் எனவே பரம்பொருளான பகவான் 'யத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யத்' என்னும் சொல் தானே விளங்குவதான ஒன்றைக் குறிக்கும். சுயமாய் தோன்றியவரும், வேறு தன துணையுமின்றி தானே (தன்னை அறியுமாறு) விளங்கும் பரம்பொருளே இந்த சொல்லினால் குறிக்கப்படுகிறார். எனவே பரம்பொருளான பகவான் 'யத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 'யதோ வா இமானி பூதானி ஜாயந்தே' (தைத்ரிய உபநிஶத் 3.1)

தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எதனிடமிருந்து இந்த உயிரினங்கள் தோன்றுகின்றனவோ…

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

731. தஸ்மை நம:

தனோதீதி விரிவடைவதால் 

ப்ரஹ்ம தத் பரம்பொருளான பகவான் 'தத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'தன்' என்றால் விரிவடைவது என்று பொருள். பரந்து, விரிவதால் பரம்பொருளான பகவான் 'தத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'ஓம் தத்ஸதிதி நிர்தேஶோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத: |' (ஸ்ரீமத் பகவத்கீதை 17.23)

இதி பகவத்வசனாத் | 

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: "ஓம் தத் ஸத்" என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தை குறிப்பதென்பர்.

732. பதாயானுத்தமாய நம:

பத்யதே கம்யதே சென்றடையக்கூடிய இடம் 

முமுக்ஷுபிரிதி முக்தியை விழைபவர்களால் 

பதம் 'பதம்' என்று அழைக்கப்படுகிறது. 

யஸ்மாத் உத்க்ருஶ்டம் நாஸ்தி அதைவிட உயர்ந்தது (இடம்) இல்லை 

தத் அனுத்தமம் 'அனுத்தமம்' என்று அழைக்கப்படுகிறது. 

ஸவிஶேஶணம் ஏகம் நாம இவ்வாறு, முக்தியை விழைபவர்களால் அடையப்படுவதும், அதைக்காட்டிலும் வேறொரு உயர்ந்த ஸ்தானம் இல்லாததுமான ஒன்றைக் குறிக்கும் 

பதமனுத்தமம் இதி பரம்பொருளான பகவான் 'பதமனுத்தமம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

முக்தியை விழைபவர்களால் அடையப்படும் இடம் (பதம்) பகவானே. அதைக்காட்டிலும் (அவரைக்காட்டிலும்) வேறொரு உயர்ந்த ஸ்தானம் இல்லை (அனுத்தமம்). எனவே, பரம்பொருளான பகவான் இவ்விரண்டு பொருள்களையும் ஒரு சேர குறிக்கும் 'பதமனுத்தமம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

733. லோகபந்தவே நம:

ஆச்சார்யாள் இந்த திருநாமத்திற்கு மூன்று விளக்கங்கள் அளித்துள்ளார்.

1. முதல் விளக்கம்:

ஆதாரபூதேஸ்மின் அனைத்திற்கும் ஆதாரப் பொருளாய் இருப்பதால் 

சகலா லோகா அனைத்து உலகனைத்தையும் 

பத்யந்த பிணைப்பதால் 

இதி லோகாநாம் பந்து: அவர் அனைத்து உலகத்திற்கும் உறவாகிறார் 

லோகபந்து: எனவே பகவான் 'லோகபந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்திற்கும் ஆதாரப் பொருளாய், பகவான் அனைத்துலகையும் பிணைக்கிறார். இவ்வாறு பகவான் அனைத்து உலகத்திற்கும் உறவாகிறார். எனவே, பகவான் 'லோகபந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

2. இரண்டாவது விளக்கம்: 

லோகாநாம் உலகமக்களுக்கு (அனைவரின்) 

ஜனகத்வாஜ் தந்தையாக இருக்கிறார் 

ஜனகோபமோ தந்தையை விட 

பந்துர் சிறந்த உறவு 

நாஸ்தீதி வா இல்லையாதலால் 

லோகபந்து: பகவான் 'லோகபந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நம் அனைவரின் தந்தையாவார். தந்தையை விட சிறந்து உறவு வேறொன்றுமில்லை. எனவே பகவான் 'லோகபந்து: ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

3. மூன்றாவது விளக்கம்:

லோகாநாம் அனைவரையும் 

பந்துக்ருத்யம் பிணைக்கக்கூடிய ஹு 

ஹிதாஹிதோபதேஶம் நன்மை பயக்கக்கூடிய (ஹித), தீமை பயக்கக்கூடிய (அஹித) அறிவுரைகளை (உபதேசம்) 

ஶ்ருதிஸ்ம்ருதிலக்ஷணம் மறை (வேதம்) மற்றும் ஸ்ம்ருதிகளின் வாயிலாக 

க்ருதவானிதி வா அருளியிருப்பதால் 

லோகபந்து: பகவான் 'லோகபந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைவரையும்  வினையே (கருமமே) பிணைக்கிறது (விடுவிக்கறது). நமக்கு நன்மை, தீமை பயக்கக்கூடிய அறிவுரைகளை மறைகள், மற்றும் ஸ்ம்ருதிகளின் வாயிலாக நமக்கு பகவான் அருளியிருக்கிறார். எனவே அவர் 'லோகபந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

734. லோகநாதாய நம:

ஆச்சார்யாள் இந்த திருநாமத்திற்கு இரண்டு விளக்கங்கள் அளித்துள்ளார்.

1. முதல் விளக்கம்:

லோகைர்நாத்யதே யாச்யதே உலக மக்களால் விண்ணப்பிக்கப்படுகிறார். 

லோகநாத: எனவே பகவான் 'லோகநாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மக்கள் அனைவரும் தமக்கு வேண்டியதை பகவானிடம் விண்ணப்பித்துப் பெறுகின்றனர். இவ்வாறு உலக மக்களால் விண்ணப்பிக்கப்படுபவராதலால், பகவான் 'லோகநாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

2. இரண்டாவது விளக்கம்:

லோகாநாம் உலகமக்கள் அனைவரையும் 

உபதபதி (அவர்களின் தவறுகளுக்காக) பீடிக்கிறார் 

ஆஶாஸ்தே அவர்களை ஆணையிடுகிறார் 

லோகாநாமீஶ்ட இதி (இவ்வாறு) அனைவரையும் ஆள்கிறார் 

லோகநாத: எனவே பகவான் 'லோகநாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உலகமக்கள் அனைவரையும் (அவர்களின் தவறுகளுக்காக துன்பத்தால்) பீடிக்கிறார், அவர்களை ஆணையிடுகிறார், அனைவரையும் ஆள்கிறார். எனவே, அவர் 'லோகநாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

735. மாதவாய நம:

மதுகுலே 'மது' என்ற அரசனின் வம்சத்தில் 

ஜாதத்வாத் (கிருஷ்ணாவதாரத்தில்) அவதரித்ததால் 

மாதவ: பகவான் 'மாதவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தமது கிருஷ்ணாவதாரத்தில் 'மது' என்ற அரசனின் வம்சத்தில் அவதரித்ததால் 'மாதவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மாதவ: என்ற இந்த திருநாமம் ஸஹஸ்ரநாமத்தில் மூன்று முறை வருகிறது. 72வது திருநாமத்தில், திருமகள் கணவர் என்றும், மது வித்யையால் அறியப்படுபவர் என்றும், 167ஆம் திருநாமத்தில், அனைத்து வித்தைகளின் தலைவர் என்றும் ஆச்சார்யாள் விளக்கம் அளித்திருந்தார்.

736. பக்தவத்ஸலாய நம:

பக்த தனது அடியவர்களிடம் 

ஸ்நேஹத்வாத் அன்பு பூண்டவராக இருப்பதால் 

பக்தவத்ஸல: பகவான் 'பக்தவத்ஸல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களிடம் அன்பு பூண்டவராக இருப்பதால் பகவான் 'பக்தவத்ஸல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!




திங்கள், ஏப்ரல் 29, 2024

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 224

77. விஶ்வமூர்த்திர்மஹாமூர்த்திர்தீப்தமூர்த்திர்அமூர்த்திமான் |

அனேகமூர்த்திரவ்யக்த: ஶதமூர்த்தி: ஶதானன: || 

இந்தஎழுபத்தேழாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

717. விஶ்வமூர்த்தி:, 718. மஹாமூர்த்தி:, 719. தீப்தமூர்த்தி:, 720. அமூர்த்திமான் |

721. அனேகமூர்த்தி:, 722. அவ்யக்த:, 723. ஶதமூர்த்தி:, 724. ஶதானன: || 

717. விஶ்வமூர்த்தயே நம:

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சமே 

மூர்த்திரஸ்ய வடிவானவர் 

ஸர்வாத்மகத்வாத் அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் 

இதி விஶ்வமூர்த்தி: எனவே பகவான் 'விஶ்வமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் பகவான் ப்ரபஞ்ச வடிவாக உள்ளார். எனவே அவர் 'விஶ்வமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

718. மஹாமூர்த்தயே நம:

ஶேஶபர்யங்க ஆதிசேடனை படுக்கையாகக் கொண்டு 

ஶயினோஸ்ய பள்ளி கொண்டருளும் 

மஹதீ மூர்த்திரிதி பகவானின் திருமேனி மிகப்பெரியதாகும் 

மஹாமூர்த்தி: எனவே பகவான் 'மஹாமூர்த்தி:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகப்பெரிய திருமேனியுடன் ஆதிசேடனின் மேல், பாம்புப் படுக்கையில்,  பள்ளிகொண்டு அருளுகிறார். எனவே அவர் 'மஹாமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


ஆதிசேடன் மேல் பள்ளிகொண்டருளும் "மஹாமூர்த்தி" திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள்!!!  

719. தீப்தமூர்த்தயே நம:

தீப்தா ஞானமயீ ஞான ஒளிப் பிழம்பான 

மூர்த்திரஸ்யேதி திருமேனி உடையவராதலால் 

தீப்தமூர்த்தி: பகவான் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞான ஒளிப் பிழம்பான (ஞான ஒளி வீசும்) திருமேனி உடையவராதலால் பகவான் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்வேச்சயா தனது சுய விருப்பத்தால் (கர்மத்தினால் அன்று) 

க்ருஹீதா எடுத்துக்கொள்ளும் 

தைஜஸீ மூர்த்திர் தீப்தா சரீரங்கள் ஒளிபொருந்தியவை 

அஸ்யேதி வா தீப்தமூர்த்தி: எனவே, பகவான் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவதாரகாலத்தில், கர்மத்தினால் உந்தப்படாது தனது சுய விருப்பத்தால் பகவான் ஒளி பொருந்திய சரீரங்களை ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் திருமேனி இயற்கையாகவே ஞான ஒளி பொருந்தியது. அவர் தனது இச்சையால் ஏற்றுக்கொள்ளும் அவதார கால திருமேனிகளும் ஒளி பொருந்தியவையே. எவ்வாறு பார்த்தாலும் அவர் 'தீப்தமூர்த்தி' தான்.

720. அமூர்த்திமதே நம:

கர்மாநிபந்தனா கர்மத்தினால் உந்தப்பட்ட (பந்தப்பட்ட) 

மூர்த்திரஸ்ய ந வித்யத உடலைப் பகவான் பெறுவதில்லை 

இதி அமூர்த்திமான் எனவே அவர் 'அமூர்த்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒரு பொழுதும் கர்மத்தினால் உந்தப்பட்டு சரீரங்களை (உடலை) ஏற்பதில்லை. எனவே அவர் 'அமூர்த்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமூர்த்திமான் என்றால் சரீரம் இல்லாதவர். இங்கு, கர்மத்தினால் உந்தப்பட்ட சரீரம் இல்லாதவர் என்று பொருள்.

721. அநேகமூர்த்தயே நம:

அவதாரேஶு அவதார காலத்தில் 

ஸ்வேச்சயா தனது சுய விருப்பத்தால் 

லோகாநாம் உலக மக்களுக்கு 

உபகாரிணீர் உதவும் பொருட்டு 

பஹ்வீர் பல்வேறு 

மூர்த்திர் உடல்களை (உருவங்களை) 

பஜத இதி ஏற்றுக்கொள்வதால் 

அநேகமூர்த்தி: பகவான் 'அநேகமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவதார காலத்தில், உலக மக்களுக்கு உதவும் பொருட்டு , (கர்மத்தினால் உந்தப்படாது) தனது சுய விருப்பத்தால் பல்வேறு உடல்களை (உருவங்களை) பகவான் ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் 'அநேகமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

722. அவ்யக்தாய நம:

யத்யப்யனேக இவ்வாறாக பல்வேறு 

மூர்த்தித்வம் அஸ்ய உருவங்களை ஏற்றுக்கொண்டாலும் 

ததாப்யயம் ஈத்ருஶ ஏவேதி அவர் இவ்வாறானவர் என்று 

ந வ்யஜ்யத இதி அறியமுடியாது 

அவ்யக்த: எனவே பகவான் 'அவ்யக்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இவ்வாறு தனது அவதார காலத்தில் பல்வேறு உருவங்களை ஏற்றுக்கொண்டாலும், நம்மால் அவர் இவ்வாறானவர் என்று அறிந்து கொள்ள இயலாது. எனவே அவர் 'அவ்யக்த:' என்ற  அழைக்கப்படுகிறார்.

723. ஶதமூர்த்தயே நம:

நானாவிகல்பஜா பல்வேறு விதமாக கற்பிக்கப்பட்ட 

மூர்த்தய: உருவங்கள் 

ஸம்விதாக்ருதே ஞானமயமாக 

ஸந்தீதி (பகவானுக்கு) இருப்பதால் 

ஶதமூர்த்தி: பகவான் 'ஶதமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞானமயமாக பகவானுக்கு பல்வேறு உருவங்கள் கற்பிக்கப்படுகின்றன. எனவே அவர் 'ஶதமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

724. ஶதானனாய நம:

விஶ்வாதி ப்ரபஞ்சம் முதலான 

மூர்த்தித்வம் யதோSத ஏவ உருவங்கள் அவருக்கு இருப்பதால் 

ஶதானன: பகவான் 'ஶதானன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரபஞ்சம் முதலான பல்வேறு உருவங்கள் இருப்பதால் பகவானுக்கு பல்வேறு முகங்களும் உள்ளன. எனவே அவர் 'ஶதானன:' (நூற்றுக்கணக்கான முகங்களுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஶ்ணார்ப்பணம்!!!