ஞாயிறு, ஜனவரி 15, 2012

கேசவன் தமர்...

கேசவன் தமர் என்று தான் சுவாமி நம்மாழ்வாரின் பன்னிரு திருநாம பாசுரங்கள் தொடங்குகின்றன. பன்னிரு திருநாமங்களில் முதன்மையானது கேசவ நாமம். கேசவ மூர்த்தி தனது நான்கு கரங்களிலும் சக்கரம் ஏந்தி நம்மை கிழக்கு திசையில் காக்கிறார். இவர் நாகப்பழம் போன்ற நிறம் உடையவர் (புரஸ்தாத் கேசவ: பாது சக்ரி ஜாம்பூனத: பிரப:). ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரனாமமே கேசவனது பெருமைகளை சொல்ல வந்தது என்கிறார் பீஷ்மாச்சர்யர் (இதீதம் கீர்தநீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன:). சந்த்யாவந்தன முடிவில் கூட நாம் "ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி" என்று சொல்கிறோம். இதன் பொருள் "எவ்வாறு ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையானது கடலையே சென்று அடைகிறதோ அதை போல அனைத்து தெய்வங்களுக்கு செய்யும் நமஸ்காரமும் கேசவனையே சென்று அடைகிறது.  மற்றொரு பிரபலமான ஸ்லோகம் "சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ஸ்ரிஜ்ய புஜம் உச்யதே, வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்".  (இது உண்மை உண்மை என்று கைகளை உயர்த்தி சொல்லுங்கள் - வேதங்களை காட்டிலும் உயர்ந்த சாஸ்திரம் இல்லை, கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் ஒன்று இல்லை).

வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களின் உபன்யாசத்தில் கேட்டது: ஒரு திருநாமம் என்றால் கீழ்கண்ட நான்கு வகைகளில் தான் பகவானை குறிக்கும்:
1. ரூபம்
2. ஸ்வாபாவிக தன்மை
3. குணம்
4. லீலை (திருவிளையாடல்)

பொதுவாக திருநாமங்களுக்கு பல பொருள்கள் உண்டு. பல திருநாமங்கள் மேற்கண்ட நான்கில் எதாவது ஒரு வகையை மட்டும் சேரும். சில திருநாமங்கள் 2 அல்லது 3 வகைகளில் பகவானது மேன்மையை சொல்லும். கேசவ நாமம் மட்டுமே பகவானது மேன்மையை மேற்கண்ட நான்கு வகைகளிலும் கூற வல்லது.


அழகிய கேசங்களை உடையவன்
1. ரூபம்: அழகிய முடி கற்றைகளை (கேசங்களை) உடையவன் என்பதால் பகவானுக்கு கேசவன் என்று பெயர். ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்படத்தை பார்த்தால் போதும், இந்த அர்த்தம் எளிதில் விளங்கிவிடும்.

2. ஸ்வாபாவிக தன்மை: பகவானே பரம்பொருள்.
"கா இதி ப்ரஹ்மனோ நாம இஷோஹம் சர்வ தேஹினாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான்"

பரமசிவன் கேசவ நாமத்திற்கு அர்த்தமாக இந்த ஸ்லோகத்தை கூறுகிறார். க என்றால் பிரம்மதேவரை குறிக்கும், ஈச என்றால் நான் (சிவபெருமான்). நாங்கள் இருவரும் உங்களது உடலில் இருந்து தோன்றியதால், உங்களுக்கு கேசவன் (க + ஈச = கேசவன்) என்று பெயர்.

3. குணம்: துன்பங்களை அழித்தல்
கேசவ: க்லேஷ நாசன:
கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)

4. லீலை (திருவிளையாடல்):
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை வதம் செய்ததால் கேசவன்.

கஜேந்திர மோக்ஷம்
கேசவ நாமத்தை விளக்கும் ஒரு முக்கிய சரித்திரம் கஜேந்திர மோக்ஷம். இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அகஸ்த்ய மகரிஷியின் சாபத்தினால் அடுத்த பிறவியில் யானையாக பிறக்கிறான். ஒரு நாள் ஒரு பொய்கையில் நீராடும் பொழுது ஒரு முதலை அந்த யானையின் காலை பிடித்தது. ஆயிரம் வருடங்கள் போராடிய பிறகு தனது முற்பிறவி பயனால். பகவானை துதிக்க, அவரும் கருட வாஹனத்தில் எழுந்தருளி முதலையை கொன்று யானையை காக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அட்டபுயக்கரத்தில் பகவானுக்கு ஆதி கேசவன் என்று திருநாமம். பேயாழ்வருக்கு பகவான் இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷ லீலையை காட்டியதாக தல வரலாறு.

திருவட்டாறு என்னும் தலத்திலும் பகவான் ஆதிகேசவனாக அருள்பாலிக்கிறார். பொதுவாக இடமிருந்து வலமாக சயனிக்கும் பெருமாள், இத்தலத்தில் வடமிருந்து இடமாக சயனதிருக்கிறார். நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை நமது பிறப்பு தளையை முக்தி கொடுப்பவனாக பாடியுள்ளார் (வாற்றாட்டான் அடி வணங்கி மாஞால பிறப்பறுப்பான்...). திருமயிலையிலும் பகவான் மயூரவல்லி நாயிகா சமேத ஸ்ரீகேசவஸ்வாமியாக அருள் பாலிக்கிறார். இன்று தை பொங்கல் (15-01-2012). இந்த மகர சங்கராந்தி நன்னாளில் பகவான் கேசவன் நம் அனைவரையும் காக்கட்டும். கேசவனை பாடி அனைவரும் நலம் பெறுவோம்!!!

வாழி கேசவா!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக