செவ்வாய், நவம்பர் 13, 2012

தீபாவளித் திருநாள் !!!

அனைவருக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!! இந்த நன்னாளில் நம் அனைவருக்கும் தூய மனமும், ஆரோக்யமான உடலும், குடும்பத்தில் குதூகலமும் அமைய பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ண பகவானை வேண்டி கொள்கிறேன்!!!

தீபாவளியின் கதை நாம் அனைவரும் அறிந்ததே!! பகவான் வராஹ அவதாரம் எடுத்த பொழுது அவரது ஸ்பரிசத்தால் பூமாதேவிக்கு பிறந்தவன் நரகாசுரன். தனது அசுர நண்பர்கள் மந்திரிகளுடன் ப்ராக்ஜ்யோதிஷ புரத்தை (இன்றைய அஸாம் மாநிலம்) ஆண்டுவந்தான். தவம் செய்து தனது தாய் மூலமாக மட்டுமே மரணம் என்ற வரத்தை பெற்று, அதனால் கர்வம் கொண்டு தேவர்களின் தாயான அதிதியின் குண்டலங்களை கவர்ந்து விட்டான். இந்திரன் கிருஷ்ணரிடம் சரணடைய, பகவான் சத்யபாமையுடன் கருட வாஹனம் ஏறி ப்ராக்ஜ்யோதிஷ புரத்தை அடைந்தார். அனைவரையும் வென்ற  பகவான் நரகாசுரனுடன் போர் புரியும்போது மயங்குவது போல் நடிக்க, பூமிதேவியின் அவதாரமான சத்யபாமா கோபம் கொண்டு நரகாசுரனை தாக்கி அழிக்கிறாள். அவன் இறக்கும் தருவாயில் தனது இந்த மரண நாளை மக்கள் இனிய நாளாக கொண்டாட வேண்டும் என்று வரம் பெற்றான். அந்த நாளை நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம்.

இந்த புராணத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல நல்ல கருத்துக்கள் உண்டு:

1. நரகாசுரன் பெற்ற வரத்தை நினைக்கும் நாம், அவனது தாய் அவனை வதம் செய்தாள் என்று மட்டும் நினைக்கிறோம். உண்மையில் அவனது தந்தை பகவான் விஷ்ணுவே!! நமது முதல் பாடம், தவறு செய்தால் தனது பிள்ளை என்று கூட பகவான் பார்ப்பதில்லை. செய்த தவறுக்கு தண்டனை நிச்சயம். கிருஷ்ணர் என்றால் ஏதோ ராஸ லீலையை செய்தவர் என்று மட்டும் நினைப்பவர்கள், சற்று இதையும் நினைத்து பார்க்கவேண்டும்.

2. பகவானின் மாயைக்கு எவரும் விதிவிலக்கல்ல - பூமாதேவி உட்பட. எனவே தான் கீதையில் கண்ணன் கூறுகிறார் "தைவி ஹ்யேஷா குண மயி மம  மாயா துரத்யயா " - எனது தெய்வீக மாயை கடற்தர்க்கரியது. ஆனால் தன்னை சரணடைந்தால் தான் அந்த மாயையை தாண்டுவிக்கிறான் இறைவன்.

3. தவமும், வரமும் மட்டுமே நம்மை காப்பாற்றிவிடாது. நல்ல ஒழுக்கமும் நற்செயலுமே நம்மை காக்கும்.

நமக்குள்ளேயும் நரகாசுரன் இருக்கிறான். நமது பாவ செயல்களும், தவறான எண்ணங்களுமே நமது நரகாசுரன். அந்த நரகாசுரன் நம்மை துன்புறுத்தாமல் இருக்க கடவுள் மட்டுமே நமக்கு துணை புரிவார். நமது இந்த நரகாசுரனை அறிவை மயக்கும் இருட்டாக உருவக படுத்திய நமது முன்னோர்கள் அவனை வெல்லும் இறை பக்தியை இருளை விரட்டும் விளக்காக உருவாக படுத்தினர். எனவே தீபாவளி என்றால் வெடி வெடித்தல், பலகாரம் சாப்பிடுதல் என்று மட்டும் எண்ணாமல், நமது உள்ளே இருக்கும் நரகாசுரனை அழிக்க, பக்தி என்னும் விளக்கையும் நமக்குள்ளே ஏற்றுவோம். இறைவனின் அருள் பெறுவோம்!!

பின்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் இந்த கால கட்டத்தில் தீபம் ஏற்றி திருவிழா கொண்டாடுவது நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கிறது. அமெரிக்காவில் ஒரு காலத்தில் பழங்குடியினரால் கொண்டாடப்பட்ட பண்டிகையை இன்று ஹாலோவீன் என்ற பெயரில் விளக்கு ஏற்றி, பேய்களை (அசுரர்களை??) விரட்டும் விழாவாக அக்டோபர் மாதத்தில் கொண்டாடுகிறார்கள். நமது சனாதன தர்மம் ஒரு காலத்தில் உலகம் முழுதும் பரவி இருந்திருக்கலாம்!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக