ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

நம்பிக்கை வேண்டும்!!!

பூரி ஜகந்நாதர் கோயிலும் அதன் ரத யாத்திரையும் உலக புகழ் பெற்றவை. இந்த ஜகந்நாதர் சிலை உருவானது ஒரு சுவையான புராணம். இந்திரத்யும்னன் என்பவன் கலிங்க தேசத்து அரசன். அவன் மகாவிஷ்ணுவிற்கு ஒரு கோயில் அமைக்க நினைத்தான். தேவ சிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு பகவானுக்கு ஒரு அழகான சிலை வடிக்கும்படி வேண்டினான். விஸ்வகர்மா ஒரு நிபந்தனையின் பெயரில் அதை ஒத்துக்கொண்டார். அதாவது, தான் சிலையை வடித்து முடிக்கும் வரையிலும் யாரும் தனது அறைக்குள் நுழையக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.
பூரி ஸ்ரீ ஜகன்னாதஸ்வாமி, பலராமர்,  சுபத்ரா 

அரசனும் பல நாள் பொறுமையாய் இருந்தான். ஆனால் முடிவில்   பொறுக்க முடியாமல் கதவை திறந்தான் (சில புராணங்களில் அவன் மனைவியின் தூண்டுதலால் கதவை திறந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது) . விஸ்வகர்மா அவனிடம் பாதி உருவான சிலையை கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார். மன்னனின் நம்பிக்கை இன்மையால் அவனுக்கு வேண்டிய சிலை கிடைக்காமல் போயிற்று.

நாரத முனிவர் 
சில நாட்கள் முன்பு நான் படித்த மற்றொரு கதை. ஒரு முனிவர் பல வருடங்கள் பகவான் விஷ்ணுவை நோக்கி தவம் இருந்தார். ஒரு நாள் அவர் நாரத முனிவரை சந்தித்தார். அவர் நாரதரிடம் பகவானை பார்க்கும்பொழுது தனக்கு எப்பொழுது முக்தி கிடைக்கும் என்று கேட்க சொன்னார். அப்பொழுது அருகே இருந்த ஒரு மரவெட்டியும் தனக்கு எப்பொழுது முக்தி கிடைக்கும் என்று கேட்டு வர சொன்னான். நாரதரும் சில நாள் கழித்து அங்கே வந்தார் அப்பொழுது உங்கள் இருவருக்கும் ஊசியின் காதில் யானை நுழையும் பொழுது முக்தி கிடைக்கும் என்றார். உடனே அந்த முனிவர் கோபம் கொண்டு "ஊசியின் காதில் எப்படி யானை நுழையும்!  எனக்கு முக்தியே கிடையாதா?" என்றார். அந்த மரவேட்டியோ உடனே மகிழ்ச்சியில் புரண்டான். "எனக்கு நிச்சயம் முக்தி உண்டு" என்றான். முனிவரோ "நான் பல வருடம் தவம் செய்தவன். எனக்கே முக்தி கிடையாது. நீ ஏனடா குதிக்கிறாய்?" என்றார். அதற்க்கு அந்த மரவெட்டி "ஸ்வாமி!! கடவுளால் முடியாதது என்று ஒன்று உண்டா? அவர் நினைத்தால் ஊசியின் காதில் யானை என்ன, உலகமே நுழைய முடியும்" என்றான். உடனே ஒரு விமானம் வந்து அவனை வைகுண்டம் அழைத்து  சென்றது. வானில் ஒரு அசரீரி "முனிவரே! எவ்வளவு நாள் தவம் இருந்தாலும் கடவுளால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். உம்மிடம் அது இல்லை. தவம், த்யானம் எதுவும் செய்யாத அந்த மரவேட்டியோ, கடவுளால் எதுவும் முடியும் என்று பரிபூரணமாக நம்பினான். எனவே அவனுக்கு முக்தி கிடைத்தது" என்று கூறியது. தன் தவறை உணர்ந்த முனிவரும் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் பகவானை தொழுது பின்னர் முக்தி அடைந்தார்.

நாம் கேட்பதை கடவுள் தந்தால் அவர் நம் பக்தியை சோதிக்கிறார் என்று பொருள் - கேட்டது கிடைத்தவுடன் இவன் நம்மை மறந்துவிடுவானா என்று பார்க்கிறார்

நாம் கேட்பது கிடைக்க தாமதமானால் அவர் நம் நம்பிக்கையை சோதிக்கிறார் என்று பொருள் - இந்த மன்னனை போலவும், முனிவரை போலவும் நாம் மாறாமல் உள்ளோமா என்று பார்க்கிறார்

நாம் கேட்பது கிடைக்கவில்லை என்றால் அவர் நமக்கு நாம் கேட்டதை விட பல மடங்கு உயர்ந்த பொருளை தருகிறார் என்று பொருள் - நாம் கிடைக்காத ஒன்றை நினைக்காமல் நமக்கு கிடைத்த நன்மையை காண்கிறோமா என்று பார்க்கிறார்

நாம் பல முறை இந்த மன்னனை போலவும் முனிவரை போலவும் உள்ளோம். கடவுளை தொழுகிறோம் - நாம் விரும்பும் பலன் கிடைத்தால் மகிழ்கிறோம். இல்லையேல் அவநம்பிக்கை கொள்கிறோம். இது தவறு. கேட்பது கிடைக்க தாமதமானால் அவநம்பிக்கை கொள்ளாமல் இருக்க பழக வேண்டும். நாம் கேட்டதை மட்டுமே நோக்காமல் கிடைத்ததை பார்த்து மகிழ வேண்டும். இதுவே நாம் செய்ய தகுந்தது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக