திங்கள், ஜூலை 22, 2013

ஆண்டாள் அருளிய திருப்பாவை!!!

 ஆண்டாள், திருப்பாவை தந்த சுடர்க்கொடி. பூமி பிராட்டி, வராஹ அவதாரத்தில் பகவான் தன்னிடம் முக்திக்கு உரைத்த எளிய வழிகளை (வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, தூமலர்த் தூவித் தொழுது) அழகிய தமிழில் நாமும் அறியும் வண்ணம் நமக்கு கொடுக்க நினைத்தாள். எனவே, விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாக, ஆண்டாளாகத், தோன்றி நமக்கு திருப்பாவையை உரைத்தாள். திருப்பாவை முப்பது பாசுரங்களும் ஒரு ஜீவாத்மா தன்னிலை உணர்ந்து, கண்ணனைப் பணிந்து, அவன் கழலினை அடையும் பயணத்தை விளக்கும்.

முதல் சில பாசுரங்களில் ஆண்டாள் கண்ணனின் (நாராயணனின்) பெருமைகளை கூறி ஜீவாத்மாவின் மனதில் பக்தியை விதைக்கிறாள் (நாராயணனே நமக்கே பறை தருவான்). ஆரம்ப நிலையில், ஒருவர் தனது உலகியல் பலன்களுக்காக கடவுளைத் துதிக்கிறார். அதையொட்டி, ஆண்டாளும் முதலில், நாராயணனைத் துதித்தால், உலகியல் பலன்களான மழை பெய்தல் (தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து), பயிர் விளைதல் (நெல்லோடு கயல் உகள), பசுக்கள் (குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்) போன்ற செல்வ செழிப்புக்கள் நமக்குக் கிட்டும் என்று கூறுகிறாள்.

பகவானை தான் மட்டும் அனுபவியாது, அனைவரும் அனுபவித்துப் பேறு பெற வேண்டும் என்பது ஒவ்வொரு ஆசார்யரின் தீராத அவா. அதையொட்டியே, இவ்வாறு (உலகியல்) நற்பலன்களைக்  கூறியும் பக்தி தோன்றாத ஆத்மாக்களை பின்னர் துயில் எழுப்புகிறாள் (எல்லே இலங்கிளியே! இன்னும் உறங்குதியோ!, எழுந்தேலோர் எம்பாவாய்...). இவ்வாறு கூறியபின் பக்தி தோன்றிவிட்டால் மட்டும் போதுமா? அத்தகைய, ஜீவர்களை பகவானிடம் அழைத்துச் செல்வதும் ஒரு ஆசார்யனின் கடமை அல்லவா? எனவே, பின்னர் சில பாசுரங்களில், அந்த பக்தி தோன்றிய ஆயர்குல பெண்களை (அதாவது ஜீவாத்மாக்களை) அழைத்துக் கொண்டு கண்ணனின் மாளிகைக்குச் செல்கிறாள்.

அங்கே, பகவான் உடனே கிடைத்துவிடுவானா என்ன? பல (தீய) கருமங்களை செய்துவிட்டு வரும் ஜீவர்களுக்கு அவன் உடனே தரிசனம் தந்து விடுவதில்லை. அவனையும், துயில் எழுப்புகிறாள். வெறுமே எழுந்திரு என்று சொல்லாமல், அவனது பெருமைகளை சொல்லி எழுப்புகிறாள் (முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே...). அதாவது, என்னை முன்னிட்டு உன்னை சரணடைந்திருக்கும் இந்த ஜீவர்களின் குறைகளை நோக்காமல், நீ கருணை முகமாக கடாக்ஷிக்க வேண்டும் என்பது இதன் உட்பொருள்.ஆண்டாள் சரணடைந்திருப்பது கண்ணனையாகையால், நப்பின்னை பிராட்டியை துணை கொண்டு அவனது அருள் வேண்டுகிறாள் (நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்...).

 இவ்வாறு கண்ணனின் கடைக்கண் அருள் கிடைத்ததும், அனைவருக்காகவும் மீண்டும் சில உலகியல் பலன்களை வேண்டுகிறாள் (தோடே, செவிப்பூவே.... பால்சோறு மூட நெய் பெய்து...). கடைசியாக தானும், தனது ஆயர் பெண்களும் (அதாவது, ஆண்டாளாகிய இந்த ஆசார்யரை சரணடைந்த ஜீவர்களும்) உண்மையில் கண்ணனை சரணடைந்த காரணத்தை சிற்றஞ்சிறுகாலே பாசுரத்தில் கூறுகிறாள். உன்னை நாங்கள் வந்தடைந்தது இந்த அற்ப உலக பயன்களுகாக அல்ல (இற்றை பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா...). உன்னையே எங்கள் ஸ்வாமியாகப் பெற்று, உனக்கே அடிமை செய்து, உனது அடியவனாக வேண்டியே நாங்கள் இங்கு வந்தோம். இன்று மட்டுமல்ல, எற்றைக்கும், எழேழ் பிறவிக்கும் உனது அடியவனாகவே நாங்கள் இருக்கும்படி அருள் செய்வாய் என்று வேண்டிக்கொள்கிறாள்.

திருப்பாவை என்ற இந்த அமிர்த ஸாகரம் நம்மை நல்வழிபடுத்தட்டும்!!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக