செவ்வாய், ஜூலை 23, 2013

அரங்கநாதரின் தவம்!!!


இரு காவிரி மத்தியில், அரங்கத்தீவின் மிசை ஒரு இனிய காலைப் பொழுது. காவிரி அன்னை தன் இரு கரங்களாலும் மலர்களையும், அகில், சந்தனம் முதலிய நறுமண திரவியங்களையும் சமர்ப்பித்து அரங்கனின் அடிகளை தொழுதபடி ஓடிக்கொண்டிருக்கும் வேளை. வழக்கம் போல திருப்பாணர் உறையூரிலிருந்து காவிரிக்கரைக்கு வந்து நீராடி அரங்கனை நினைத்துப் பாக்களை தொடுக்கத் துவங்கிவிட்டார். அவருக்கு அரங்கனைக் காண வேண்டுமென்று நெடுநாள் ஆசை. ஆனால், அவரோ சாதி சதிராடிய நாளிலே, அன்று பலரும் கீழ் சாதி என்று நினைத்துக் கொண்டிருந்த பாணர் சாதியில் பிறந்தவர். கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்க எல்லையையே அணுக அவரால் முடியாது. பின்னர் அரங்கனை எங்ஙனம் காண!!

உள்ளே அரங்கனுக்கோ பல நாட்களாக, ஏன் பல வருடங்களாக ஒரே தவிப்பும் ஏக்கமும். இருக்காதா பின்னே! தன் அடியவனான திருப்பாணர் தினமும் தனக்குத் தொடுக்கும் பாமாலையை அணிந்து கொண்டு, அவருக்கு தன் திருமேனி அழகைக் காட்டி அருள வேண்டும் என்று அவா. ஆனால், சாதி பார்க்கும் கூட்டமோ திருப்பாணரைக் கோயில் எல்லையைக் கூடத் தொட விட மறுக்கிறது. அவர் என்று தனது கோயிலுக்குள் வருவார் என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார். அந்த நாள் வரும்வரை, தினமும் தன் மனதாலேயே பாணர் சூடும் பாமாலைகளை அணிந்து தன்னைத் தானே அழகு பார்த்துக் கொள்கிறான் அரங்கன். இதெல்லாம் லோகஸாரங்க முனிவருக்கு எப்படித் தெரியும். அவர் தினமும் அரங்கனுக்குக் கைங்கர்யம் பண்ணுமவர். அவருக்குத் தெரிந்ததெல்லாம் அன்றைய நடைமுறை வழக்கங்கள் தான்.

இன்று ஒரு இனிய காலைப் பொழுது என்று சொன்னேன் அல்லவா. ஆம்! இன்று திருப்பாணரும், அரங்கனும் காத்துக்கொண்டிருந்த தருணம் வரப்போகின்ற நன்னாள். என்றைக்கும் இல்லாமல் இன்றைய தினம் என்னவோ தெரியவில்லை திருப்பாணருக்கு அரங்கனின் பாடல்களில் ஒரு இனம் புரியாத மோகம். அவர் அரங்கனின் அழகை மற்றவர் சொல்லித் தான் கேட்டிருக்கிறார். அதை வைத்தேதான் பாக்களையும் இயற்றுவார். இன்றோ அவர் பாக்களில் தன்னை மறந்துவிட்டார். லோகஸாரங்கர் அரங்கனின் திருமஞ்சனத்திற்காக காவிரி நீரைக் கொணர அதன் கரைக்கு வந்தார்.

லோகஸாரங்கர் தனது வழியை மறைத்துக் கொண்டு திருப்பாணர் நிற்பதைக் கண்டார். பல முறை திருப்பாணரை நகரச் சொல்லிப் பார்த்தார். திருப்பாணர் அதையெல்லாம் எங்கே கவனித்தார். திருப்பாணர் இந்த உலகில் இருந்தால் அல்லவா இதையெல்லாம் கேட்க. அவர் மனம் அரங்கனிடமும், அவன் மனம் திருப்பாணரிடமும் அல்லவா உள்ளது. லோகஸாரங்கர் முடிவில் கோபம் பொறுக்க முடியாமல் அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து திருப்பாணரின் நெற்றியில் அடித்து விட்டார். அரங்கனும், திருப்பாணரும், அவரது பாமாலைகளுமாய் இருந்த உலகம் கலைந்து விட்டது.

இப்பொழுது அரங்கனுக்குத் தனது ஏகாந்தம் கலைந்ததால் தாங்க முடியாத வருத்தமும், அதை கலைத்த லோகஸாரங்கர் மீது தாங்க முடியாத கோபமும் ஏற்பட்டது . தனது அடியவனை அடித்த லோகஸாரங்கர் கைகளால் தனக்கு எந்த ஆராதனமும் வேண்டாம் என்று தனது கோயில் கதவங்களை சாத்தி விட்டான். லோகஸாரங்கர் திருமஞ்சனத் தீர்த்தத்தைக் கொண்டு வந்து கோயிலின்னுள்ளே நுழைய முயல்கிறார். ஆனால், அரங்கன் ஸன்னதியின் திருக்கதவங்கள் திறக்கவில்லை. அவர் மனமுடைந்து அரங்கனிடம் கதறுகின்றார். நெடுநேரம் கழித்து அரங்கன் அவரது தவறை ஒரு அசரீரியாக உரைக்கிறான். லோகஸாரங்கர், திருப்பாணரின் பெருமையை உணர்ந்து கொள்கிறார். என்னதான் தவறிழைத்தாலும் அவர் தினமும் அரங்கனுக்குக் கைங்கர்யம் புரிந்தவர் அல்லவா. எனவே, நல்லெண்ணம் பிறந்து, அரங்கனிடம் அவனது அடியவனைத் தன் தோளின்மீது கொண்டு வருவதாகவும், அப்படிக் கொண்டு வந்தால் தயை கூர்ந்து கதவங்களைத் திறக்கும்படியும் அரங்கனிடம் வேண்டிக்கொண்டு காவிரிக் கரைக்கு ஓடினார்.

 அங்கே திருப்பாணரோ தான் பெரிய தவறிழைத்து விட்டதாகக் கருதி அச்சம் தோன்ற உறையூரை நோக்கிக் கிளம்பினார். அங்கே அவரது திருப்பாதத்தில் விழுந்த லோகஸாரங்க முனிவர் அவரிடம் தன்னை மன்னிக்குமாறு கூறி தனது தோளின் மீது ஏறச் சொன்னார். தனது சாதி என்ன, அரங்கனுக்குத் தினமும் கைங்கர்யம் புரியும் முனிவரின் சாதி என்ன!! திருப்பாணரோ தனது பிறப்பைக் கருதி அச்சத்துடன் மறுத்து நின்றார். லோகஸாரங்கர் பல முறை வற்புறுத்தி, இது அரங்கனின் உத்தரவு என்று கூறி திருப்பாணரை வலுக்கட்டாயமாக தனது தோளின் மீது ஏற்றிக்கொண்டு அரங்கனின் ஸன்னிதியை நோக்கி வரத் தொடங்கினார்.

இப்பொழுது அரங்கனுக்கு பெருங்கவலை பீடித்தது. திருப்பாணர் தன்னைக் கண்களால் நேரில் காணாத பொழுதே தன் அழகை பாமாலைகளால் தொடுத்தவர். அவர் மனக்கண்களில் கண்ட அதே அழகுடன் நான் அவருக்கு ஸேவை ஸாதிக்க வேண்டுமே! தன் ஒவ்வொறு அவயவத்தின் அழகையும் நோக்கத் தொடங்கினான் அரங்கன். அவற்றை திருப்பாணரின் பாமாலைகளுடன் ஒப்பிட்டு தான் அழகுடையவனா என்று தன்னைத் தானே பல முறைப் பார்த்துக் கொள்கிறான். இதைக் கண்ட பெரிய பிராட்டியான மஹாலக்ஷ்மிக்கு ஒரே ஆச்சரியம். 'நான் பாற்கடலினின்று பிறந்து அவரை ஸ்வயம்வரத்தில் வரித்தபோது கூட இப்படி தன்னை அலங்கரித்துக் கொள்ளவில்லையே!!'. அரங்கன் "தேவி! திருப்பாணரிடமிருந்து பத்தே பாசுரங்கள் பெறப்போகின்றேன். எனது அழகை இதற்கு முன்னர் இவ்வாறு யாரும் உரைத்ததுமில்லை, இனி உரைக்கப்போவதுமில்லை எனும்படியாக இப்பாசுரங்கள் அமையப் போகின்றன. அதற்குத் தக்கவாறு நான் இருக்க வேண்டாமா?" என்று ஆனந்தம் பொங்கக் கூறினான். பெரிய பிராட்டியும் உடனே அந்த பாசுரங்களைத் தானும் கேட்கத் தயாரானாள்.

கோயில் கதவங்கள் திறக்க, முனிவாஹனரான திருப்பாணர், திருப்பாணாழ்வாராக, அரங்கனின் அழகிலே திளைத்துப் பாசுரங்களைப் பொழியத் தொடங்கினார். தனது பிறப்பைக் கருதாது தன்னையும் அடியார் கூட்டத்தில் சேர்த்தருளிய திறத்தைக் கண்டு "அமலன் ஆதிபிரான்" என்று தொடங்கி "பாதாதி கேசமாக" பாமாலை தொடுத்தார். அவனது திருக்கமலப் பாதங்களையும், அரைச்சிவந்த ஆடையையும், எழில் உந்தியையும், உலகையே தன்னுள் அடக்கிய திருஉதரத்தையும் பாடினார் ஆழ்வார். அவனது திருமார்பைப் பாடுங்கால் 'உன்னழகைக்காண நான் என்ன தவம் செய்தனன் கொல்' என்று பாடினார். அப்பொழுது, அரங்கன் திருமார்பை அலங்கரிக்கும் பெரிய பிராட்டியார் "ஆழ்வாரே! அரங்கனைக் காண நீர் தவம் செய்தீரோ இல்லையோ, உம்மைக்காண அவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் சற்று முன் தன்னை அலங்கரித்துக்கொண்ட அவசரத்தை நீர் காணாமல் விட்டீரே"  என்று கூறினார். ஆழ்வாருக்கு அரங்கனின் அழகைப்பாடவா? அவனது எளிமையையும் நீர்மையையும் பாடவா என்று புரியவில்லை. கண்களில் கண்ணீர்த் தாரைப்பெருக அவன் மற்ற அவயவங்களின் அழகைப் பாடியவர் கடைசி பாசுரத்தில் வைகுண்டத்தில் பரவாசுதேவனாக இருப்பதைக் காட்டிலும் தன்னைப்போல் ஒரு எளியவனின் பொருட்டும் நீர்மை காட்டும் அரங்கனின் அர்ச்சாவதாரமே அனைத்திலும் சிறந்தது என்று பொருள் படும்படி "என் அமுதினைக் கண்ட கண்கள் மாற்றொன்றினைக் காணாவே" என்று முடிக்கிறார். ஆக, அமலனாதிபிரான் என்னும் திருப்பாணாழ்வாரின் இப்பத்துப் பாசுரங்களைப் பாடுவோர் ஆழ்வார் கண்டது போலவே அரங்கனின் அழகைக் காண்பார்கள் என்பதே அதன் பலனாக (சொல்லாமல்) சொல்கிறார்.

அமலானிதிபிரானில் ஐந்தாம் பாசுரமாகிய "பாரமாய பழவினைப் பற்றறுத்து.." என தொடங்கும் பாசுரத்தில் "கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்" என்று ஆழ்வார் பாடுகிறார். இதற்கு சாமான்ய அர்த்தம் சொல்லுங்கால் "ஆழ்வார் அரங்கனின் அழகைக் காண தான் என்ன தவம் செய்தேனோ, தெரியவில்லையே" என்று பொருள் கூறுவர். விஷேஷ அர்த்தமாக "தேவர்களும் முனிவர்களும் அவனைக்காண ஊழி ஊழி தோறும் தவம் இருக்க, தனக்கு இப்படி ஒரு பேறு கிடைக்க அரியதொரு தவத்தை தான் செய்திருக்கவேண்டுமென்றும். அதுவும் தன்னடியாக நடக்காமல் அவனருளாலேயே நடந்ததென்றும்" கூறுவர். தூப்புற்பிள்ளை என்ற ஆசார்யரும் இதற்கு வியாக்கியானம் அருளும் பொழுது "இப்படி என் நெஞ்சினுள் புகுவதற்கு எம்பெருமான் உபயகாவேரிமத்தியத்திலே நின்று கொண்டு என்ன கடுந்தவம் புரிந்தானோ?" என்று ஆழ்வார் கூறுவதாக உரைக்கிறார்.

நாம் அவனை அடைய முயற்சிப்பதைவிட, அவன் நம்மை அவனிடம் அடைவித்துக்கொள்ள எடுக்கும் முயற்சியே பல மடங்கு பெரிது என்பது திண்ணம். அரங்கனின் அருட்பார்வை நம்மீது விழட்டும். நமக்கும் நல்வழி பிறக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக