வெள்ளி, டிசம்பர் 17, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 199

52. கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோ பூதமஹேஶ்வர: |

ஆதிதேவோ மஹாதேவோ தேவேஶோ தேவப்ருத்குரு: ||

இந்த ஐம்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

486. கபஸ்திநேமி:, 487. ஸத்வஸ்த:, 488. ஸிம்ஹ:, 489. பூதமஹேஶ்வர: |

490. ஆதிதேவ:, 491. மஹாதேவ:, 492. தேவேஶ:, 493. தேவப்ருத்குரு: ||

486. ஓம் கபஸ்திநேமயே நம:

கபஸ்திசக்ரஸ்ய மத்யே 'கபஸ்தி' என்றழைக்கப்படும் சூரியமண்டலத்தின் நடுவே 

ஸூர்யாத்மனா கதிரவனின் உள்ளுறை ஆத்மாவாக (அந்த கதிரவனே உருவாக) 

ஸ்தித இதி வீற்றிருப்பதால் 

கபஸ்திநேமி: பகவான் 'கபஸ்திநேமி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சூரியமண்டலத்தின் நடுவே அந்த கதிரவனாக (கதிரவனின் உள்ளுறை ஆத்மாவாக) வீற்றிருப்பதால் பகவான் 'கபஸ்திநேமி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பொதுவாக சூரியனை சூரியநாராயணராக வழிபடுவது நம் வழக்கத்தில் உள்ளது.

487. ஓம் ஸத்வஸ்தாய நம:

ஸத்வம் குணம் சத்வ குணம் 

ப்ரகாஶகம் ஒளிமயமான 

ப்ராதான்யேன மேலோங்க 

அதிதிஶ்டதி விளங்குவதால் 

ஸத்வஸ்த: பகவான் 'ஸத்வஸ்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒளிமயமான சத்வ குணம் மேலோங்க விளங்குவதால் பகவான் 'ஸத்வஸ்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

ஸர்வப்ராணிஶு அனைத்து உயிரினங்களுக்குள்ளும் 

திஶ்டதீதி வா (உள்ளுறைந்து) வசிப்பதால் 

ஸத்வஸ்த: பகவான் 'ஸத்வஸ்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் (உள்ளுறைந்து) வசிப்பதால் பகவான் 'ஸத்வஸ்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

488. ஓம் ஸிம்ஹாய நம:

விக்ரமஶாலித்வாத் வீரம் பொருந்தியவராதலால் 

ஸிம்ஹவத் (காட்டுக்கு அரசனான) சிங்கத்தைப் போன்று 

ஸிம்ஹ: பகவான் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காட்டிற்கு அரசனான சிங்கத்தைப் போன்று வீரம் பொருந்தியவராதலால் பகவான் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ந்ருஶப்தலோபேன ‘ந்ருஸிம்ஹ’ என்ற பெயரில் 'ந்ரு' என்ற சொல் மறைந்து 

'ஸத்யபாமா பாமா' இதிவத்வா சத்யபாமாவை (சத்ய என்பதை விடுத்து) பொதுவாக பாமா என்றழைப்பது போல 

ஸிம்ஹ: பகவான் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சத்யபாமா என்ற பெயரை, ‘சத்ய’ என்ற சப்தத்தை மறைத்து பொதுவாக பாமா என்று அழைப்பதைப் போல, ‘ந்ருஸிம்ஹ’ என்ற பெயருடைய பகவான் 'ந்ரு' என்ற சப்தம் மறைந்து 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

489. ஓம் பூதமஹேஶ்வராய நம:

பூதானாம் அனைத்து உயிரினங்களின் 

மஹான் ஒப்புயர்வற்ற 

ஈஶ்வர: இறைவன் (ஆள்பவர்) ஆனபடியால் 

பூதமஹேஶ்வர: பகவான் 'பூதமஹேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒருவரே அனைவரின் (அனைத்து உயிரினங்களின்) ஒப்புயர்வற்ற இறைவனாவார். எனவே, அவர் 'பூதமஹேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பூதேன ஸத்யேன 'பூ' என்றால் ஸத்யம் அதாவது என்றும் உள்ளவர் 

ஸ ஏவ பரமோ அவர் ஒருவரே மேலான 

மஹான் ஒப்புயர்வற்ற 

ஈஶ்வர தனிப்பெரும் தெய்வம் 

இதி வா பூதமஹேஶ்வர: எனவே, பகவான் 'பூதமஹேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உண்மையே உருவானவர், என்றும் உள்ளவர். ஒப்புயர்வற்ற தனிப்பெரும் தெய்வம் பகவான் ஒருவரே. எனவே, அவர் 'பூதமஹேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூ ஸத்தாயாம்’. ‘பூ’ என்ற தாதுவிற்கு (வேர்ச்சொல்லிற்கு) 'ஸத்' என்று ஒரு பொருள் உள்ளது. ஸத் என்றால் இருப்பது. எனவேதான் என்றும் மாறாத உண்மையை 'ஸத்யம்' என்று கூறுகிறோம். இதன் அடிப்படையில், என்றும் இருப்பவரான பகவான் ஒருவரே மேலான பரம்பொருள். எனவே, அவரே 'பூதமஹேஶ்வரன்' என்று ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.

490. ஓம் ஆதிதேவாய நம:

ஸர்வபூதானி அனைத்து உயிரினங்களுக்கும் 

ஆதீயந்தேனேன மூல காரணமாய் இருப்பதால் 

இதி ஆதி: பகவான் 'ஆதி' என்று அழைக்கப்படுகிறார். 

ஆதிஸ்சாஸௌ இவ்வாறு 'ஆதியாகவும்' 

தேவஸ்ச இதி 'தேவனாகவும்' இருப்பதால் 

ஆதிதேவ: பகவான் 'ஆதிதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து உயிரினங்களுக்கும் மூல காரணமாய் இருக்கிறார். எனவே, அவர் 'ஆதியாவார்'. இவ்வாறு ஆதியாகவும் தேவனாகவும் இருப்பதால் பகவான் 'ஆதிதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

491. ஓம் மஹாதேவாய நம:

ஸர்வான் அனைத்து 

பாவான் பற்றுதல்களையும் 

பரித்யஜ்ய விடுத்து 

ஆத்மஞானயோக தனது ஆத்மஞான யோகமென்னும் 

ஐஶ்வர்யே செல்வத்தால் 

மஹதி தனது பெருமை 

மஹியதே மென்மேலும் வளரப் பெற்றவராதலால் 

தஸ்மாத் உச்யதே அவரை (பகவானை) அழைக்கின்றனர் 

மஹாதேவ: 'மஹாதேவ' என்ற திருநாமத்தால்.

பகவான் அனைத்து பற்றுதல்களையும் விடுத்து தன்னைப் பற்றிய ஆத்மஞானயோகமென்னும் செல்வத்தால் தனது பெருமை மென்மேலும் வளரப் பெற்றவர். எனவே அவரை 'மஹாதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

492. ஓம் தேவேஶாய நம:

ப்ராதான்யேன அனைத்து தேவர்களைக் காட்டிலும் விஞ்சிய நிலையில் இருப்பதால் 

தேவானாம் பகவான் அனைத்து தேவர்களுக்கும் 

ஈஶோ தலைவராவார் 

தேவேஶ: எனவே அவர் 'தேவேஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து தேவர்களைக் காட்டிலும் விஞ்சிய (உயர்ந்த) நிலையில் இருப்பதால் பகவான் அனைத்து தேவர்களுக்கும் தலைவராவார். எனவே அவர் 'தேவேஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

493. ஓம் தேவப்ருத்குரவே நம:

தேவான் அனைத்து தேவர்களையும் 

பிபர்தீதி பாதுகாப்பதால் 

தேவப்ருத் ஶக்ர: 'ஶக்ரனான' இந்திரன் 'தேவப்ருத்' என்று அழைக்கப்படுகிறார். 

தஸ்யாபி அந்த இந்திரனையும் 

ஶாஸிதேதி கட்டளையிட்டு வழிநடுத்தவதால் 

தேவப்ருத்குரு: பகவான் 'தேவப்ருத்குரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவர்களைப் பாதுகாக்கும் இந்திரன் 'தேவப்ருத்' என்று அழைக்கப்படுகிறார். அந்த இந்திரனையும் ஒரு குருவைப்போல கட்டளையிட்டு, வழிநடுத்துவதால் பகவான் 'தேவப்ருத்குரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானே தேவகுரு ப்ருஹஸ்பதியின் வடிவில் இந்திரனை வழிநடத்துகிறார் என்றும் கொள்ளலாம் 

தேவானாம் தேவர்களைக் பரனாத் தாங்குகிறார் (காக்கிறார்) 

ஸர்வவித்யானாம் அனைத்து வித்தைகளையும் 

நிகரணாத்வா அறிந்துள்ளார் ஆதலால் 

தேவப்ருத்குரு: பகவான் 'தேவப்ருத்குரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் தேவர்களைக் காக்கிறார் (தேவப்ருத்) . மற்றும் அனைத்து வித்தைகளையும் அறிந்துள்ளார் (குரு). எனவே அவர்  'தேவப்ருத்குரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நிகரணாத் என்றால் விழுங்குதல் குடித்தல் என்று பொருள். இங்கு அனைத்து வித்தைகளையும் கரைத்துக் குடித்தவர் என்று பொருள் கொள்ளலாம்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக