வியாழன், ஜூலை 28, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 8 (பிறவியென்னும் காட்டுத்தீ)

ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு 
ஜ்வாலா வலீபி ரதிதக்த தனூருஹஸ்ய |
த்வத்பாத பத்ம ஸரஸீ ருஹமாகதஸ்ய 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (8)


ஸம்ஸார - இந்தப் பிறவியென்னும், தாவ - சுட்டெரிக்கும், தஹநாதுர - துன்புறுத்தும் நெருப்பு, பீகரோரு (பீகர உரு) - கொடூரமாக எனது துடைகள், ஜ்வாலா - தீப்பிழம்புகள், வலீபிர் - எனது மேனி, அதிதக்த - மிகவும் துன்புறுத்தப்பட்டு, தனு - உடல், உருஹஸ்ய - துடைகள், த்வத்பாத பத்ம - தங்களுடைய தாமரைப் போன்ற திருப்பாதங்கள், ஸரஸீருஹம் - பொய்கையில் இறங்க, ஆகதஸ்ய - வந்துள்ளேன், லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியானது ஒரு கொடிய காட்டுத்தீப்போல என்னைத் துன்புறுத்துகிறது. தனது தீப்பிழம்புகளால் எனது மேனியையும்,  துடைகளையும் எரிக்கிறது. இதனால் துன்பமடைந்துள்ள நான், தங்களின் தாமரைப் பாதங்களாகியப் பொய்கையை நாடி வந்துள்ளேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

இந்த துதியில், ஆதிசங்கரர் இந்தப் பிறவியை ஒரு கொடிய தீயாக உருவகப் படுத்துகிறார். கொழுந்துவிட்டெரியும் தீப்பிழம்புகள் தமது (நமது) துடைகளையும், சருமத்தையும் பற்றி, தமது (நமது) உடலையும், துடைகளையும் சுட்டெரித்து துன்புறுத்துகின்றன. இந்த துன்பத்திலிருந்து விடுபட ஒரு குளிர்ந்த தடாகம் தேவை. பகவானின் தாமரைப் பாதங்களே அந்த குளிர்ந்த நீருடைய பொய்கையாகும். அந்த குளிர்ந்த திருவடிகளை தமக்குத் தந்தருள வேண்டுமென்று திருமாமகள் கேள்வனாம் லக்ஷ்மி நரசிம்மரை வேண்டுகிறார் ஆதிசங்கரர். 

புதன், ஜூலை 27, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 7 (பிறவியென்னும் நச்சரவம்)

ஸம்ஸார ஸர்ப்ப கன வக்த்ர பயோக்ர தீவ்ர 
தம்ஷ்டிராகரால விஷதக்த விநஷ்ட மூர்த்தே |
நாகாரி வாஹன ஸுதாப்தி நிவாஸ சௌரே 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (7)

ஸம்ஸார - இந்தப் பிறவி, ஸர்ப்ப - அரவம் (பாம்பு), கன - பெரிய, வக்த்ர - வாய், பயோக்ர - மிகுந்த அச்சத்தை விளைவிக்கக் கூடிய, தீவ்ர - கூரிய, தம்ஷ்டிராகரால - பெரிய பற்கள், விஷதக்த - நஞ்சு நிறைந்த, விநஷ்ட - துன்பமுற்ற, மூர்த்தே - வடிவமாய், நாகாரி - அரவங்களின் (பாம்புகளின்) எதிரியான கருடன், வாஹன - (கருடன்) மீதேறி வருவோரே, ஸுதாப்தி -பாற்கடலில், நிவாஸ - வாழும், சௌரே - சௌர எனும் பெயர் பெற்ற, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவி கூறிய நஞ்சு நிறைந்த பற்களை உடைய ஒரு அரவமாகும் (பாம்பாகும்). இந்தப் பிறவியென்னும் அரவம் என்னைத் தன் நச்சுப் பற்களால் தீண்டித் துன்புறுத்துகிறது. (பாம்புகளின் எதிரியான) கருடன் மீதேறி வருபவரே!!! பாற்கடலில் வாழும் சௌரியே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

ஆதிசங்கரர் இந்த  துதியில், இந்தப் பிறவியை ஒரு கொடிய அரவமாக (பாம்பாக) உருவகப்  படுத்துகிறார். இந்தப் பிறவியை அடைந்த அனைவரும்  இருத்தல்,  பிறத்தல், வளர்த்தல், வளர்ச்சி நிறைவுறுதல், தேய்தல் மற்றும் இறத்தலாகிய ஆறுவகைத் துன்பங்களுக்கு மீண்டும், மீண்டும் உட்படுத்தப்படுகிறோம். இந்தப் பிறவித் துன்பத்தை, நஞ்சு நிறைந்த கூறிய பற்களுடனும், அச்சமூட்டும் பெரிய வாயுடனும் கூடிய (பிறவியென்னும்) அரவம் தீண்டியதால் ஏற்படும் துன்பத்தோடு ஒப்புமை கூறுகிறார். 

அரவத்தினால் துன்பமுறும் நம்மை அந்த அரவங்களின் பகைவனான கருடன் மீதேறி வந்து நம்மைக் காக்கவேண்டும் என்று பகவானை வேண்டுகிறார். கருடனைக் கண்டவுடனே அரவங்கள் ஓடிவிடுவது இயற்கையல்லவா? அவ்வாறே, கருடன் மீதேறி வரும் லக்ஷ்மிநரசிம்மரைக் கண்டதும் இந்தப் பிறவியெனும் அரவமும் நம்மை விட்டு ஓடிவிடும்.

அரவம் ஓடிவிட்டாலும் அதனால் தீண்டப்பட்டு துன்புற்றிருக்கிறோமே, அதற்கு மருந்து உண்டா? பரமனின் திருப்பார்வையே அந்தப் பாற்கடலின் அமுதம் போன்றது. அதுவே இந்தப் பிறவியென்னும் பாம்பு தீண்டியதற்கான மருந்து. எனவே தான், பகவான் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பதை நினைவூட்டுகிறார்.

அந்த பகவான் எப்பேர்பட்டவரெனில், இவ்வாறு துன்பமடைந்திருப்போரைக் காப்பதில் வல்லவர் (சூரர்). எனவே, சௌரி என்று பெயர் பெற்றவர். அந்த திருமாமகள் கேள்வன், லக்ஷ்மிநரசிம்மன் தன்னைக் கைக்கொடுத்துக் காக்கவேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டுகிறார்.

சௌரி என்னும் சொல் 'சூர' என்ற வார்த்தையிலிருந்து உருவானது. சௌரி என்றால்  சூரன், சூரத்தன்மை உடையவன் என்று பொருள். துன்பத்திலிருப்போரைக் காப்பதில் சூரன் பகவான்.

பகவான்  ப்ரஹலாதனையும், மீராவையும் நஞ்சிலிருந்து காத்தது:
பக்தர்களில் உத்தமர்களான ப்ரஹலாதனுக்கும், மீராவிற்கும் அவர்களைக் கொல்லும் பொருட்டு அவர்களின் உறவினர்களே உணவில் நஞ்சைக் கலந்து அளித்தனர். அந்த உணவை பகவானுக்கு நிவேதனம் செய்த பின் அவர்கள் உண்டனர். பகவான், தனது அடியவர்களை அந்த நஞ்சிலிருந்துக் காத்தான்.

குருவாயூர் தல வரலாற்றிலிருந்து:
ஒரு அரசனுக்கு அவனது ஜாதகத்தின்படி மரண கண்டம் நெருங்கியது. அவனது, குலகுருவின் அறிவுரைப்படி அன்றைய தினம் முழுவதும் குருவாயூர் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண த்யானத்தில் ஆழ்ந்தான். அன்றைய தினம் முடிந்ததும், தனக்கு கண்டம் ஏதும் நிகழவில்லையே என்று தன் குருவிடம் கேட்க, அதற்கு அவர் அவனது கால்களைக்  காட்டினார். அங்கு, பாம்பு தீண்டிய வடு இருந்தது. அவனது குலகுரு 'அந்த அரசனின் ஜாதகப்படி அவனை அரவம் தீண்டியது  என்றும், குருவாயூரப்பனின் அருளால் அவனுக்கு ஒன்றும் நேரவில்லை' என்பதையும் விளக்கினார்.

திங்கள், ஜூலை 18, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்ரம் - 6 (பிறவியென்னும் பெரும் மரம்)

ஸம்ஸாரவ்ருக்ஷ மகபீஜமனந்த கர்ம
சாகாஸதம் கரணபத்ரமனங்க புஷ்பம் |
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (6)

ஸம்ஸாரவ்ருக்ஷம் - பிறவியென்னும் பெரிய மரம், அக - பாவம், பீஜம் - விதை, அனந்த கர்ம - எண்ணிலடங்கா வினைப்பயன்கள், சாகா - கிளைகள், சதம் - நூற்றுக்கணக்கான, கரண - புலனுறுப்புக்கள், பத்ரம் - இலைகள், அனங்க - (தகாத) காமம், புஷ்பம் - மலர்கள், ஆருஹ்ய - ஏறினேன், துக்க பலிதம் - துன்பமென்னும் பழங்கள், பததோ - விழுந்துக் கொண்டிருக்கிறேன், தயாளோ - கருணையே வடிவானவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

பிறவியென்னும் ஒரு கொடிய விஷ மரத்தினில் ஏறிவிட்டேன். என்னுடைய பாவம் என்னும் விதியினால் முளைத்த இந்த மரத்தில், (என்னுடைய) எண்ணிலடங்கா வினைப்பயன்கள் என்னும் நூற்றுக்கணக்கான கிளைகளும், புலனுறுப்புக்கள் என்னும் இலைகளும், (தகாத) காமம் என்னும் மலர்களும், துன்பங்கள் என்னும் பழங்களும் உள்ளன. காமத்தின் (இந்த மரத்தின் மலர்கள்) வாசனையால் தூண்டப்பட்டு, துன்பங்கள் என்னும் பழங்களை சுவைத்தேன். அதனால், மேலிருந்து கீழ்நோக்கி தலைகீழாக விழுந்துகொண்டு இருக்கிறேன். கருணையே வடிவானவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

பிறப்பும், இறப்பும் மாறி மாறி வந்து நம்மை வருத்தும் இந்தப் பிறவியை மிகப்பெரியதொரு மரமாக ஆதிசங்கரர் உருவகப்படுத்துகிறார். நாம் பற்பல பிறவிகளாய் புரிந்துள்ள பாவங்களே இந்த மரத்தின் விதையாகும். பாவமென்னும் விதையிலிருந்து முளைக்கும் எண்ணிலடங்கா வினைப்பயன்களே இந்த மரத்தின் நூற்றுக்கணக்கான கிளைகள். நமது (கண், காது முதலான)  புலனுறுப்புக்கள் இந்தக் கிளைகளில் தோன்றும் இலைகளாகும். நமது முற்பிறவிக் கருமங்களின் விளைவால் அந்தப் பிறவிகளில் என்னென்னப் புலனின்பங்களில் ஈடுபட்டிருந்தோமோ, அதே புலனின்பங்களில் இப்பிறவியிலும் நாட்டம் வரும். இதற்கு "வாசனை" என்று பெயர். மரங்களில் வாசனையைத் தருவது மலர்கள். இந்த பிறவியென்னும் மரத்தில், தகாத காமத்தில் இச்சையே மலர்கள் (இந்த மலர்கள் நம் முற்பிறவிக் கருமத்தில் வாசனையைத் தூண்டும்). துக்கமும், துன்பமுமே இந்த மரத்தில் பழுக்கும் பழங்கள். இத்தகைய மரத்தில் ஏறிய நாம், வினைப்பயன்களால் நம் வாசனைத் தூண்டப்பட்டு இந்த துக்கமென்னும் பழத்தை உண்கிறோம். அதை உண்டதனால் இந்த மரத்திலிருந்து கீழே விழுகிறோம் (அதாவது, மீண்டும் மீண்டும் கருமங்களும், அதனால் வினைப்பயன்களும், அதனால் துக்கமும், அதனால் மேலும் கருமங்களும் என இந்தப் பிறவிச் சக்கரத்தில் சுழன்று, நரகமென்னும் குழியில் விழுவதை இவ்வாறு உருவகிக்கிறார்). இவ்வாறு துன்பத்திலிருக்கும் தம்மை (நம்மை), திருமகள் கேள்வனாம், கருணையே வடிவானவராம் லக்ஷ்மி நரசிம்மர் கைக்கொடுத்துக் காக்க வேண்டுமென்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

நமது உபநிடந்தங்களிலும், பகவத் கீதையிலும் இந்தப் பிறவியானது தலைகீழாக உள்ள ஒரு மரமாக உருவகிக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீமத் பகவத்கீதை 15-வது அத்தியாயத்தின் தொடக்கத்தில் பகவான் இந்தப் பிறவியை இவ்வாறு வர்ணிக்கின்றார் (தமிழாக்கம், பாரதியாரின் பகவத் கீதை உரையிலிருந்து எடுக்கப்பட்டது).

ஊர்த்வ மூலம்  அதஹ் சாகம் அஸ்வத்தம் ப்ராஹூர் அவ்யயம் 
சந்தாம்ஸி யஸ்ய பர்னானி யஸ் தம் வேத ஸ வேதவித் (15.1)
அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளும் உடையதோர் அரசமரத்தைப் போன்றது  என்பர். இதன் இலைகளே  வேதங்கள்.அதை அறிவோனே வேதமறிவோன்.

அதஸ் சோர்த்வம் ப்ரஸ்ர்தாஸ் தஸ்ய சாகா 
குண ப்ரவ்ருத்த விஷய ப்ரவாள:
அதஸ் ச மூலான்யனுசந்ததானி 
கர்மானுபந்தீனி மனுஷ்ய லோகே (15.2)
அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி, விஷயத்  தளிர்களுடன், பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.

இதை தலைகீழான மரமாக உருவகிக்கக் காரணம்: 'இந்தப் பிறவி எவ்வாறு உண்டாயிற்று என்ற கேள்வியில் தொடங்கி இந்த மரத்தின் மூலத்தை அறிய முற்படுபவன் மேலே உயருகிறான்; தலைகீழான மரத்தின் பழங்கள் கீழே இருக்கும். அதை சுவைக்க முற்படுபவன் தன்னிலையினின்றும் கீழ்நோக்கி வீழ்கிறான்'.

புதன், ஜூலை 13, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்ரம் - 5 (பிறவிப் பெருங்கடல்)

ஸம்ஸார ஸாகர விஷால கரால கால 
நக்ரக்ரஹ க்ரஹண நிக்ரஹ விக்ரஹஸ்ய |
வ்யக்ரஸ்ய ராக ரஸனோர்மி நிபீடிதஸ்ய  
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (5)

ஸம்ஸார - இந்தப்பிறவியானது, ஸாகர - பெருங்கடல், விஷால - கரை காண இயலாது பரந்து விரிந்துள்ள, கரால - அச்சமூட்டும், கால - காலமென்னும், நக்ரக்ரஹ - முதலைகளால் கடித்தும், க்ரஹண - பீடிக்கப்பட்டும்,  நிக்ரஹ - துன்புற்ற, விக்ரஹஸ்ய - நிலையில் (உள்ளேன்), வ்யக்ரஸ்ய - அலைக்கழிக்கப்பட்டு, ராக - உணர்ச்சி, ரசன - (புலனின்பங்களில்) சுவை, ஊர்மி - பேரலைகளால், நிபீடிதஸ்ய - துன்புறுகிறேன், லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி -  அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியென்னும் கரை காண இயலாத பெருங்கடலில் வீழ்ந்து தத்தளிக்கிறேன். காலமென்னும் முதலைகள் என்னை பீடித்து, தனது கூறிய பற்களால் கடித்துத் துன்புறுத்துகிறது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, புலனின்பங்களின் சுவை என்னும் பேரலைகளால் அலைக்கழிக்கப்பட்டு மிகுந்த துன்பம் அடைந்துள்ளேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

நமது இந்தப் பிறவியை வர்ணிக்க இந்த துதியை விட வேறு பொருத்தமான துதி கிடைப்பது அரிது. இந்தப் பிறவியானது அச்சமூட்டும், கரை காண முடியாத  பெருங்கடலாகும். காலமென்னும் முதலைகள் நம்மைக் தினமும் கடித்துக்கொண்டிருக்கின்றன.

இதனால் பீடிக்கப்பட்டிருக்கும் நாம், அதை உணர்வது கூட கிடையாது. அடக்க முடியாத உணர்ச்சிகள், புலனின்பங்களை சுவைத்துக் கொண்டு, அவற்றிலேயே பொழுதைப் போக்கிக்கொண்டு  இருக்கிறோம். ஆனால், இந்த உணர்ச்சிகளும், சுவையும் இந்தக் கடலில் உள்ள பேரலைகளாகும். அவற்றால் நாம் இங்கும், அங்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய ஆபத்தான கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தம்மை (நம்மை), ஒரு படகு போன்று வந்து காக்கவேண்டும் என்று லக்ஷ்மிநரசிம்மரை ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார் (பகவானை "பவாப்தி போத" என்று தொடக்கத்திலேயே ஆதிசங்கரர் கூறியுள்ளார்).

திங்கள், ஜூலை 11, 2016

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்திரம் - 4 (பிறவியென்னும் பாழுங்கிணறு)

ஸம்ஸார கூபம் அதிகோரம் அகாதமூலம் 
ஸம்ப்ராப்ய துக்க ஸதஸர்ப்ப ஸமாகுலஸ்ய |
தீனஸ்ய தேவ க்ருபணா பதமாகதஸ்ய  
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (4)

ஸம்ஸார - இந்தப்பிறவியானது, கூபம் - பாழுங்கிணறு (அல்லது குழி என்றும் கொள்ளலாம்), அதிகோரம் - அச்சமூட்டும், அகாதமூலம் - ஆழங்காணமுடியாத, ஸம்ப்ராப்ய - அதில் விழுந்துள்ள எனக்கு, துக்க சத ஸர்ப்ப - துன்பங்கள் எனப்படும் நூற்றுக்கணக்கான அரவங்கள், ஸமாகுலஸ்ய - குழுமி இருக்கின்றன, தீனஸ்ய - (இவற்றால்) துன்பமடைந்துள்ள நான், தேவ - கடவுளே, க்ருபாணா - துன்பமான, பதம் - நிலையை அடைந்து, ஆகதஸ்ய - வருந்தும் என்னை, லக்ஷ்மிநரசிம்ம -  திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியானது ஆழம் காண இயலாத ஒரு பாழுங்கிணறு. இதன் உள்ளே நூற்றுக்கணக்கான அரவங்கள் (பாம்புகள்) என்னைத் தீண்டுகின்றன. இவற்றால் துன்பமடைந்துள்ள எனக்கு திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!
  

இந்தப்பிறவியானது ஆழங்காண இயலா ஒரு பாழுங்கிணறாகும். இதில், நான் எனது வினைப்பயனால் விழுந்துவிட்டேன். அதனுள்ளே நூற்றுக்கணக்கான அரவங்கள் கூட்டம் கூட்டமாய் என்னைத் துன்புறுத்துகின்றன (நமது வினைப்பயனால் விளையும் துன்பங்களையே ஆதிசங்கரர் அரவங்களாக உருவாக்கப்படுத்துகிறார்). இவற்றால் பீடிக்கப்பட்டு, இந்த ஆழந்தெரியாத கிணற்றிலிருந்து மீண்டு வரும் வழி தெரியாது மிகவும் துன்பமான நிலையில் உள்ளேன். நாமோ ஆழந்தெரியாத கிணற்றுக்குழியில் விழுந்துள்ளோம். நம்மைக் காப்பாற்ற வேண்டுமெனில் அவர் மேலான இடத்தில் இருக்கவேண்டும். மேலும், அவருக்கு இந்தக் கிணற்றுக்குழியிலிருந்து வெளியேறும் வழிவகைத் தெரிந்திருக்க  வேண்டும். அத்தகையவர் நமது கடவுளான, கருணை வடிவான லக்ஷ்மிநரசிம்மர். எனவே, எனது கடவுளே!!! லக்ஷ்மிநரசிம்மரே!!! எனக்குக் கைக்கொடுத்து உதவி அருளுங்கள் என்று வேண்டுகிறார்.

நாம் ஏன் இந்த ஆழந்தெரியாக் கிணற்றுக்குள் விழுந்தோம்? இந்த அரவங்கள் நம்மை எவ்வாறு துன்புறுத்துகின்றன என்பதை பின்னர்  சில துதிகளில் ஆதிசங்கரர் விளக்குகிறார். நாம் இவை அனைத்தையும் ஒன்று சேர கற்று, இதன் உட்பொருளை உணரவேண்டும்.

வெள்ளி, ஜூலை 08, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 3 (பிறவியென்னும் பெருங்காடு)

ஸம்ஸார கோர கஹனே சரதோ முராரே 
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்தித்தஸ்ய |
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய  
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (3)

ஸம்ஸார - இந்தப் பிறவியென்னும், கோர - அச்சமூட்டும், கஹனே - இருண்ட காட்டினில், சரதோ - சென்றுகொண்டிருக்கிறேன், முராரே - முரன் என்னும் அரக்கனை அழித்தவரே, மார - (தகாத) காமமென்னும், உக்ர - தீவிரமான, பீகர - அச்சமூட்டும், ம்ருக - விலங்கு, ப்ரவர - கொடிய, ஆர்த்திதஸ்ய - துன்பத்தை விளைவிக்கும், ஆர்த்தஸ்ய - துன்புறுகிறேன், மத்ஸர - பொறாமை போன்ற குணங்கள், நிதாக - தீ, நிபீடிதஸ்ய - என்னை பற்றி இருப்பதால், லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

பிறவியென்னும் அச்சமூட்டும் இருண்ட காட்டினுள் நான் சென்றுகொண்டிருக்கிறேன். (தகாத) காமமென்னும் கொடிய விலங்குகளாலும், பொறாமை போன்ற காட்டுதீயாலும் நான் மிகவும் துன்புறுத்தப் படுகிறேன். முரன் போன்ற பல அசுரர்களை கொன்றொழித்தவரே, திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

இந்தத் துதியிலிருந்துத் தொடங்கி அடுத்த பல துதிகளில் நாம் இருக்கும் இந்த உலகியல்வாழ்க்கையின் உண்மை நிலையை ஆதிசங்கரர் எடுத்துரைக்கிறார். இங்கு, இந்தப் பிறவியை ஒரு அச்சமூட்டும், இருண்ட காடாக உருவகப்படுத்துகிறார் (அஞ்ஞானம் அல்லது அறியாமையே இந்த இருள்). காடு என்றால் விலங்குகளும், காட்டுத்தீயும் இருக்குமல்லவா? நம்மால் அடக்கமுடியாத தகாத காமமே இந்த காட்டில் உள்ள கொடிய விலங்கு. நாம் மற்றவர் மீது கொண்டிருக்கும் பொறாமையே நம்மை எரிக்கும் காட்டுத்தீ. இந்த இருண்டக் காட்டினுள் இவ்வாறு விலங்குகளிடமிருந்தும், காட்டுத்தீயிலிருந்தும் நம்மைக் காக்க லக்ஷ்மிநரசிம்மரால் மட்டுமே முடியும். அவர் முன்பே (எவ்வாறு காடும், விலங்கும், காட்டுத்தீயும் நம்மை துன்புறுத்துகின்றதோ, அவ்வாறே முன்பு தேவர்களைத் துன்புறுத்திய) முரன் என்ற அரக்கனை அழித்தவர். எவ்வாறு, முன்பு தேவர்களைக் கர்த்தரோ, அவ்வாறே, தனது அடியவர்கள் துன்பமடைந்து, தன்னை சரண் புகுந்தால் அவர் காத்து அருளுவார். அந்த லக்ஷ்மிநரசிம்மர் இந்த பிறவிப்பெருங்கடலிலிருந்து கைக்கொடுத்து மீட்டு அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

வியாழன், ஜூலை 07, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 2 (தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவன்)

ப்ரஹமேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீட கோடி 
சங்கட்டித்தாங்க்ரி கமலாமல காந்தி காந்த |
லக்ஷ்மீலஸத் குச ஸரோருஹ ராஜஹம்ஸ 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (2)


ப்ரஹ்ம - பிரமன் (நான்முகக்கடவுள்), இந்த்ர - இந்திரன் (தேவர்களின் தலைவன்), ருத்ர - பரமசிவன், மருத் - மருத் கணங்கள், அர்க்க - கதிரவன், கிரீட - மகுடங்கள், கோடி - கோடிக்கணக்கான, சங்கட்டித - குவிந்து, அங்க்ரி - திருப்பாதங்கள், கமல - தாமரை, அமல - தூய்மையான, காந்தி - ஒளியால், காந்த - மனங்கவர், லக்ஷ்மீலஸத் - திருமகளை அணைத்துக்கொண்டு, குச - தாயாரது திருமார்பாகிய, ஸரோருஹ - தாமரையில், ராஜஹம்ஸ - அன்னப்பறவை போன்றவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள்கராவலம்பம் - கைக் கொடுத்து.

பிரமன், இந்திரன்,  பரமசிவன், மருத் கணங்கள், கதிரவன் போன்ற கோடிக்கணக்கான தேவர்களின் மகுடங்கள் கூடி சேர்ந்து ஒளிவிடுவதால், மேலும் ஒளியூட்டப்பட்ட, தாமரை மலரைப்போன்ற சிவந்த, தூய்மையான, மனங்கவர் திருப்பாதங்களை உடையவரே!!! திருமகளை அணைத்துக்கொண்டு, தாமரை மலர் போன்ற அவரது (தாயாரது) திருமார்பகத்தில் மீது விளையாடும் ஒரு சிறந்த அன்னப்பறவையைப்போல இருப்பவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

பகவானின் பெருமைகளை முதல் துதியில் ஒருவாறு கூறிய ஆதிசங்கரர், இந்தத் துதியில் அதை மீண்டும் விரித்துரைக்கிறார். முதல் இரண்டு  அடிகளால், நரசிம்மரே தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என்கிறார். படைக்கும் கடவுள் பிரமன், அழிக்கும் கடவுள் பரமசிவனார், தேவர்களின் அரசனான இந்திரன், (அவனுக்குத்  துணையாக தேவர்களின் படையில் இருக்கும்) மருத் கணங்கள், இந்த பூமிக்கு ஒளி வழங்கும் கதிரவன் போன்ற மிகச்சிறந்த தேவர்களும் நரசிம்மரை பணிந்து வணங்குவர். அப்பொழுது அந்தக் கோடிக்கணக்கான தேவர்களின் மகுடங்களிலிருந்து வீசும் ஒளியானது, நரசிம்மரின்  தாமரைப் போன்ற சிவந்த திருப்பாதங்களுக்கு மேலும் ஒளியூட்டும். அத்தகைய தூய்மையான பாதங்களை நாம் பற்றினால் நற்பேறு பெறலாம்.

அவர் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமென்றால் நம் போன்றோர் அவரை அணுக இயலுமா? இதற்கு மூன்றாம் அடியில் விளக்கம் அளிக்கிறார். அவர் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் ஆயினும், நமக்கெல்லாம் தாயான திருமகள் கேள்வன். எவ்வாறு ஒரு அன்னமானது தாமரை மலரில் விளையாடுமோ, அவ்வாறே பகவான் தாயாரான திருமகளுடன் போகம் தூய்ப்பவர். திருமகளை முன்னிட்டு நாம் அவரைப் பணிந்தால் நம்மைக் கைவிடமாட்டார். எனவேதான், இந்த துதி முழுவதிலும் நரசிம்மரை மட்டும் குறிக்காது 'லக்ஷ்மீநரசிம்மரை' வணங்குகிறார் ஆதிசங்கரர்.