வெள்ளி, அக்டோபர் 22, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 194

47. அநிர்விண்ண: ஸ்தவிஶ்டோபூர்தர்மயூபோ மஹாமக: |

நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||

இந்த நாற்பத்தேழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

435. அநிர்விண்ண:, 436. ஸ்தவிஶ்ட:, 437. அபூ: (பூ:), 438. தர்மயூப:, 439. மஹாமக: |

440. நக்ஷத்ரநேமி:, 441. நக்ஷத்ரீ, 442. க்ஷம:, 443. க்ஷாம:, 444. ஸமீஹன: || 

435. ஓம் அநிர்விண்ணாய நம:

ஆப்தகாமத்வாத் தன்னிறைவு பெற்றவரானபடியால் 

நிர்வேதோஸ்ய வெறுப்புக்கள் (த்வேஶங்கள்) 

ந வித்யத இதி அவரிடம் காணப்படுவதில்லை 

அநிர்விண்ண: எனவே பகவான் 'அநிர்விண்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது ஆசைகள் அனைத்தும் நிறைவேறப்பெறுபவர். மேலும், இதனால், தன்னிறைவு பெற்றவரானபடியால் அவரிடம் வெறுப்புக்களோ, உதாசீனமோ காணப்படுவதில்லை. எனவே அவர் 'அநிர்விண்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

436. ஓம் ஸ்தவிஶ்டாய நம:

வைராஜரூபேண விராட் வடிவத்தில் 

ஸ்தித: இருப்பதால் 

ஸ்தவிஶ்ட: பகவான் 'ஸ்தவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ப்ரபஞ்சம் முழுவதையும் வ்யாபிக்கும்) விராட் வடிவத்தில் இருப்பதால் பகவான் 'ஸ்தவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அக்னிர்மூர்தா சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ (முண்டக உபநிஶத் 2.1.4)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த விராட்டினுடைய (விராட் புருஷனாக பரந்து விரிந்துள்ள பரப்ரஹ்மத்தின்) தலை ஸ்வர்கலோகமாகும். கதிரவனும், முழுமதியும் அதன் கண்கள்.

அக்னிர்மூர்தா என்ற இடத்தில், அக்னியை ஸ்வர்கலோகம் என்றே பொருளுரைத்திருக்கின்றனர்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

 437. ஓம் அபுவே நம:

அஜன்மா பிறப்பற்றவராதலால் 

அபூ: பகவான் 'அபூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பற்றவராதலால் பகவான் 'அபூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை "அபூ:" என்றோ அல்லது "பூ:" என்றோ பதம் பிரிக்கலாம். ஆச்சார்யாள் இரண்டு பதங்களுக்கும் உரை அளித்துள்ளார். எனினும், நாமாவளிக் க்ரமத்தில் "அபூ:" என்று அர்ச்சிப்பதே வழக்கத்தில் உள்ளது.

ஓம் புவே நம:

அதவா அல்லது 

பவதீதி அனைத்துமாய் இருப்பதால் 

பூ: பகவான் 'பூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (அனைத்துமாய்) இருப்பதால் பகவான் 'பூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பூ ஸத்தாயாம்' பூ என்ற வேர்ச்சொல்லிற்கு 'ஸத்' அதாவது இருப்பது என்று பொருள் (அந்த பொருளில் ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்) இத்யஸ்ய ஸம்பதாதித்வாத் க்விப் இது ஸம்பதாதி கணத்தில் 'க்விப்' என்ற விகுதி சேர்ந்துள்ளது. 

மஹீ வா பூமியை (பூ என்று அழைப்பர்) 

பூ: எனவே, பகவான் 'பூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூமியை 'பூ' என்று அழைப்பார்கள். எனவே, பகவான் 'பூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

438. ஓம் தர்மயூபாய நம:

யூபே வேள்வியின் யூபஸ்தம்பத்தில் 

பஶுவத் அந்த வேள்வியில் பலி கொடுக்கப்படும் மிருகத்தை (எவ்வாறு கட்டி வைத்துள்ளனரோ அவ்வாறே) 

தத்ஸமாராதன ஆத்மகா பகவானுக்கு திருப்தியளிக்கும் 

தர்மாஸ்தத்ர தர்மமானது 

பத்யந்த இதி பகவானிடம் கட்டிவைக்கப்பட்டுள்ளது 

தர்மயூப: எனவே, பகவான் 'தர்மயூப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வாறு வேள்வியில் பலியிடப்படவுள்ள மிருகம் அந்த வேள்வியின் யூபஸ்தம்பத்தில் கட்டிவைக்கப்படுமோ, அவ்வாறே பகவானை திருப்திப்படுத்தும் தர்மமானது அவரிடம் கட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பகவான் 'தர்மயூப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

439. ஓம் மஹாமகாய நம:

யஸ்மின் அர்ப்பிதா எவருக்கு அர்ப்பணித்து 

மகா யஞா 'மகா' அதாவது வேள்வியானது 

நிர்வாண லக்ஷண ஃபலம் நிர்வாணமாகிய முக்தியை 

ப்ரயச்சந்தோ அளிக்கின்றன 

மஹாந்தோ ஜாயந்தே எனவே அவை சிறப்பானதாக அறியப்படுகின்றன 

மஹாமக: எனவே பகவான் 'மஹாமக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு அர்ப்பணித்து செய்யப்படும் வேள்வியானது (மகா) மிகச்சிறந்த (மஹா) பலனாகிய முக்தியை அளிக்கின்றன. எனவே பகவான் மஹாமக: என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹா (மிகச்சிறந்த) + மகா (வேள்வி) = மஹாமக:

440. ஓம் நக்ஷத்ரநேமயே நம:

நக்ஷத்ரதாரகை: ஸார்த்தம் சந்த்ரஸூர்யாதயோ க்ரஹா: |

வாயுபாஶமயைர்பந்தைர் நிர்பத்தா த்ருவஸம்ஞிதே ||

அனைத்து விண்மீன்கள், கோள்களுடன் கூட கதிரவன், வெண்மதி ஆகிய அனைத்தும் காற்றென்னும் கயிற்றால் துருவ நட்சத்திரத்துடன் கட்டப்பட்டுள்ளன. 

ஸ ஜ்யோதிஶாம் சக்ரம் (மேற்சொன்ன கூற்றின்படி) அனைத்து விண்கோள் வட்டங்களும் 

ப்ராமயம்ஸ் தாராமயஸ்ய நக்ஷத்திரங்களுடன் சுற்றி வரும் 

ஶிஶுமாரஸ்ய ஶிஶுமார (சுறாமீனின் வடிவில் உள்ள) மண்டலத்தின் 

புச்சதேஶே வால்பகுதியில் 

வ்யவஸ்திதோ த்ருவ: துருவ நட்சத்திரம் நிலைபெற்றுள்ளது. 

தஸ்ய ஶிஶுமாரஸ்ய அந்த ஶிஶுமார மண்டலத்தின் 

ஹ்ருதயே இதயப் பகுதியில் 

ஜ்யோதிஸ்சக்ரஸ்ய விண்கோள்களின் வட்டத்தின் 

நேமிவத் விளிம்பில் 

ப்ரவர்த்தக: அவற்றை (அந்த விண்கோள்களை) செலுத்துபவராய் 

ஸ்திதோ நிலைபெற்றிருக்கும் 

விஶ்ணுரிதி பகவான் விஶ்ணு 

நக்ஷத்ரநேமி: 'நக்ஷத்ரநேமி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மேற்சொன்ன கூற்றின்படி) அனைத்து விண்கோள் வட்டங்களும் நக்ஷத்திரங்களுடன் சுற்றி வரும் ஶிஶுமார (சுறாமீனின் வடிவில் உள்ள) மண்டலத்தின் வால்பகுதியில் துருவ நட்சத்திரம் நிலைபெற்றுள்ளது. அந்த ஶிஶுமார மண்டலத்தின் இதயப் பகுதியில் விண்கோள்களின் வட்டத்தின் விளிம்பில் அவற்றை (அந்த விண்கோள்களை) செலுத்துபவராய் நிலைபெற்றிருக்கும் பகவான் விஶ்ணு 'நக்ஷத்ரநேமி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

ஶிஶுமாரவர்ணனே ஶிஶுமார மண்டலத்தின் வர்ணனையில் 'விஶ்ணுர்ஹ்ருதயம்' பகவான் விஶ்ணுவே (அதன்) இதயம் 

இதி ஸ்வாத்யாயப்ராஹ்மணே ஸ்வாத்யாய ப்ராஹ்மணத்தில் 

ஶ்ரூயதே கூறப்பட்டுள்ளது.

ஸ்வாத்யாய ப்ராஹ்மணத்தில் ஶிஶுமார மண்டலத்தின் வர்ணனையில் பகவான் விஶ்ணுவே (அதன்) இதயம் என்று கூறப்பட்டுள்ளது. 

441. ஓம் நக்ஷத்ரிணே நம:

சந்த்ரரூபேண முழுமதியின் வடிவினராய் இருப்பதால் 

நக்ஷத்ரீ பகவான் 'நக்ஷத்ரீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முழுமதியின் வடிவினராய் இருப்பதால் பகவான் 'நக்ஷத்ரீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'நக்ஷத்ராணாம் அஹம் ஶஶி:' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: நக்ஷத்திரங்களில் (நான்) சந்திரன்

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார். 

442. ஓம் க்ஷமாய நம:

ஸமஸ்தகார்யேஶு அனைத்துவித செயல்களிலும் 

ஸமர்த்த: திறமை மிக்கவராதலால் 

க்ஷம: பகவான் 'க்ஷம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துவித செயல்களிலும் திறமை மிக்கவராதலால் பகவான் 'க்ஷம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

க்ஷமத இதி வா பொறுமை மிக்கவராதலால் 

க்ஷம: பகவான் 'க்ஷம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பொறுமை மிக்கவராதலால் பகவான் 'க்ஷம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'க்ஷமயா ப்ருதிவீ ஸம:' (வால்மீகி இராமாயணம் 1.1.18)

வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான் இராமர்) பொறுமையில் பூமிக்கு இணையானவர்.

இதி வால்மீகிவசனாத் | இவ்வாறு வால்மீகி முனிவர் இராமாயணத்தில் கூறியுள்ளார். 

443. ஓம் க்ஷாமாய நம:

ஸர்வவிகாரேஶு அனைத்து விகாரங்களும் 

க்ஷபிதேஶு அழியும் பொழுது 

ஸ்வாத்மநாவஸ்தி இதி தனது இயற்கையான தன்மையோடு நிலைபெற்றிருப்பதால் 

க்ஷாம: பகவான் 'க்ஷாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் இங்கு படைக்கப்பட்ட அனைத்து விகாரங்களும் அழியும் பொழுது தனது இயற்கையான தன்மையோடு பகவான் நிலைபெற்றிருப்பதால் அவர் 'க்ஷாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'க்ஷாயோ ம:' (பாணினி சூத்ரம் 8.2.53)

இதி நிஶ்டாதகாரஸ்ய மகாராதேஶ:  | மேற்கண்ட பாணினி ஸூத்ரத்தின் படி முடிவிலுள்ள 'த'காரம் 'ம' காரமாய் திரிந்துள்ளது. 

444. ஓம் ஸமீஹனாய நம:

ஸ்ருஶ்ட்யாத்யர்த்தம் படைப்பு முதலிய காரியங்களுக்காக 

ஸம்யக் நல்ல (மங்களகரமான) 

ஈஹத இதி ஆசை (அல்லது விருப்பம்) கொள்வதால் 

ஸமீஹன: பகவான் 'ஸமீஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய நற்காரியங்களுக்காக ('நான் பலவாறாக படைப்பேன்' என்பது போன்ற) மங்களகரமான ஆசை (விருப்பம்) கொள்கிறார். எனவே அவர் 'ஸமீஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ருஶ்ட்யாத்யர்த்தம் = ஸ்ருஶ்டி + ஆதி + அர்த்தம். ஸம்யக் (நல்ல, மங்களகரமான) + ஈஹத (ஆசை) = ஸமீஹன

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக