ஞாயிறு, ஜனவரி 23, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 201

54. ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |

வினயோ ஜய: ஸத்யஸந்தோ தாஶார்ஹ: ஸாத்வதாம்பதி: ||

இந்த ஐம்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

503. ஸோமப:, 504. அம்ருதப:, 505. ஸோம:, 506. புருஜித், 507. புருஸத்தம: |

508. வினய:, 509. ஜய:, 510. ஸத்யஸந்த:, 511. தாஶார்ஹ:, 512. ஸாத்வதாம்பதி: ||

503. ஓம் ஸோமபாய நம:

ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின் 

பந்தனாத் ஸோமம் பிபதி 'ஸோமரஸத்தை' பருகுகிறார் 

ஸர்வயக்ஞேஶு அனைத்து வேள்விகளிலும் 

யஶ்டவ்ய (அந்தந்த வேள்விகளால்) வழிபடப்படும் 

தேவதாரூபேணேதி தெய்வங்களின் வடிவாக 

ஸோமப: எனவே பகவான் 'ஸோமப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வேள்விகளிலும், அந்த வேள்விகளால் வழிபடப்படும் தெய்வங்கள் (தேவதைகளின்) வடிவில் பகவானே ஸோமரஸத்தைப் பருகுகிறார். எனவே, அவர் 'ஸோமப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

தர்மமர்யாதாம் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு 

தர்ஶயன் (வேள்விகளில்) தோன்றும் 

யஜமானரூபேண வா (ஸோமரஸத்தை பருகும், அந்த வேள்வியை புரியும்) வேள்வியின் தலைவரின் வடிவினராய் இருப்பதால் 

ஸோமப: பகவான் 'ஸோமப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு (ஸோமரஸத்தை பருகும், அந்த வேள்வியை புரியும்) வேள்வியின் தலைவரின் வடிவினராய் இருப்பதால், பகவான் 'ஸோமப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

504. ஓம் அம்ருதபாய நம:

ஸ்வாத்மாம்ருதரஸம் தனது ஆத்மானந்தமாகிய அமுதத்தை 

பிபன் (எப்பொழுதும்) பருகுபவராகையால் 

அம்ருதப: பகவான் 'அம்ருதப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது ஆத்ம ஆனந்தத்திலேயே பகவான் எப்பொழுதும் திளைக்கிறார். அந்த ஆத்மானந்தமாகிய அமுதத்தை எப்பொழுதும் பருகுகிறார். எனவே அவர் 'அம்ருதப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அஸுரை: அஸுரர்களால் 

ஹ்ரியமானம் கவரப்பட்ட 

அம்ருதம் அமுதத்தை 

ரக்ஷித்வா (அந்த அஸுரர்கள் அதை பருகிவிடாது) காத்து 

தேவான் தேவர்களுக்கு 

பாயயித்வா அந்த அமுதத்தை வழங்கி 

ஸ்வயமப்ய பின்னர் தானும் 

பிபதிதி வா பருகியதால் 

அம்ருதப: பகவான் 'அம்ருதப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (பாற்கடலை கடையும் பொழுது) அஸுரர்களால் கவரப்பட்ட அமுதத்தைக் காத்து, அதை தேவர்களுக்கு அளித்து, பின்பு தானும் அந்த அமுதத்தைப் பருகியதால் பகவான் 'அம்ருதப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மோஹினி அவதார சரித்திரம்: துர்வாஸர் தான் அளித்த மஹாலக்ஷ்மியின் மாலையை அவமதித்த இந்திரனுக்கும் (தேவர்களுக்கும்) நரை மற்றும் மூப்பு உண்டாகுமாறு சாபம் அளிக்கிறார். இதனால் அஸுரர்கள், தேவர்களைத் தோற்கடித்து ஸ்வர்கத்தை கைப்பற்றினர். பகவானின் ஆணையின் படி அஸுரர்களுடன் சமாதானம் செய்துகொண்டு தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வந்தவுடன் அஸுரர்கள் அதைத் அபகரித்துச் சென்றனர். நரை, மூப்புடன் கூடிய தேவர்களால் அவர்களை எதிர்க்க இயலவில்லை. அவர்களின் நிலையை உணர்ந்த பகவான் ஒரு அழகிய பெண்ணின் வடிவைத் தாங்கி அஸுரர்களிடம் சென்று தானே அமுதத்தை பகிர்ந்து அளிப்பதாய் கூறுகிறார். அவரது அழகில் மயங்கிய அஸுரர்கள் அவரிடமே அந்த அமுதத்தை அளித்து அதைப் பகிர்ந்தளிக்கும் படி வேண்டினர். அஸுரர்கள் தம் அழகில் மயங்கி இருக்கும் வேளையில், பகவான் அனைத்து அழுத்தத்தையும் தேவர்களுக்கே பகிர்ந்து அளித்து, தானும் உண்டார்.

மேலும், தேவர்களைப் போல உருவம் தாங்கி தேவர்களின் வரிசையில் வந்த ஸ்வர்பானு என்ற அஸுரனை, சந்திரனும், சூரியனும் கைகாட்ட, தமது அகப்பையால் அவனது தலையைக் கிள்ளி அவனை ராகு, கேது என்ற இரண்டு கிரஹங்களாக மாற்றினார். 

505. ஓம் ஸோமாய நம:

ஸோம ரூபேண திங்களின் வடிவில் 

ஒளஶதி செடி, கொடி மற்றும் மூலிகைகளை 

போஶயன் அவற்றை வளர்த்துப் பாதுகாப்பதால் 

ஸோம: பகவான் 'ஸோம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் திங்களின் (வெண்மதியின்) வடிவில் செடி, கொடிகள் மற்றும் மூலிகைகளை வளர்த்துப் பாதுகாக்கிறார். எனவே அவர் 'ஸோம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

உமயா பார்வதியோடு 

ஸஹித கூடிய 

ஶிவோ வா பகவான் பரமசிவனாய் (பரமசிவனின் வடிவினராய்) இருப்பதால் 

ஸோம: பகவான் 'ஸோம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பார்வதியோடு கூடிய பரமசிவனின் வடிவினராய் இருப்பதால் பகவான் 'ஸோம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ+உமா = ஸோம

'ஓம் நம: ஸோமாய ச ருத்ராய ச...' (ஶத ருத்ரீயம் எட்டாம் அனுவாகம்) 

506. ஓம் புருஜிதே நம:

புரூன் பஹூன் 'புரு' அதாவது பற்பலரை 

ஜயதீதி வெற்றி கொண்டவராகையால் 

புருஜித் பகவான் 'புருஜித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பற்பலரை ('புரு') வெற்றி கொண்டவராகையால் பகவான் 'புருஜித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

507. ஓம் புருஸத்தமாய நம:

விஶ்வரூபத்வாத் புரு: இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் 'புரு' என்றழைக்கப்படுகிறார். 

உத்க்ருஶ்டத்வாத் ஸத்தம: அனைவரைக் காட்டிலும் சிறந்தவராய் இருப்பதால் அவர் 'ஸத்தம:' என்றும் அழைக்கப்படுகிறார். 

புருஶ்ஸ்வாஸௌ 'புரு' வாகவும் 

ஸத்தமஸ்சேதி 'ஸத்தம' மானவராயும் இருப்பதால் 

புருஸத்தம: பகவான் 'புருஸத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் 'புரு' என்றழைக்கப்படுகிறார். அனைவரைக் காட்டிலும் சிறந்தவராய் இருப்பதால் 'ஸத்தம:' என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாறு, ப்ரபஞ்ச வடிவில் புருவாகவும், அனைவரைக் காட்டிலும் சிறந்தவரான 'ஸத்தம:' மானவராயும் இருப்பதால் பகவான் 'புருஸத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.   

508. ஓம் விநயாய நம:

விநயம் தண்டம் 'விநயம்' என்றால் தண்டனையைக் குறிக்கும் 

கரோதி அளிக்கிறார் (செய்விக்கிறார்) 

துஶ்டாநாமிதி தீயோருக்கு 

வினய: எனவே பகவான் 'வினய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தினின்று பிழறும் தீயோருக்கு தண்டனை (விநயம்) அளிக்கிறார். எனவே அவர் 'வினய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினய என்ற சொல்லிற்கு திருத்துவது என்று ஒரு பொருள். இங்கு ஆச்சார்யாள் அந்தப் பொருளில் உரை அளித்துள்ளார். தண்டனை அளிப்பதன் மூலம் பகவான் தீயோரையும் திருத்துகிறார். 

509. ஓம் ஜயாய நம:

ஸமஸ்தானி அனைத்து 

பூதாநி ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) 

ஜயதீதி வெற்றி கொள்கிறார் 

ஜய: எனவே பகவான் 'ஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) வெற்றி கொள்கிறார். எனவே பகவான் 'ஜய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

510. ஓம் ஸத்யஸந்தாய நம:

ஸத்யா உண்மையானது (என்றும் தவறுவதில்லை) 

ஸந்தா ஸங்கல்ப: 'ஸந்தா' அதாவது அவரின் எண்ணங்கள் (அல்லது விருப்பங்கள்) 

அஸ்யேதி ஸத்யஸந்த: எனவே பகவான் 'ஸத்யஸந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் எண்ணங்களும், தீர்மானங்களும் என்றும் உண்மையானவை (அவை என்றும் தவறுவதில்லை). எனவே அவர் 'ஸத்யஸந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

'ஸத்யஸங்கல்ப:' (சாந்தோக்ய உபநிஶத் 8.1.5)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவானின்) எண்ணங்கள் என்றும் ஈடேறப்பெறுபவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.     

511. ஓம் தாஶார்ஹாய நம:

தாஶோ தானம் 'தாஶ' என்ற சொல்லிற்கு தானம் என்று பொருள் 

தமர்ஹதீதி அதற்குத் (தானங்களை ஏற்பதற்கு) தகுதி உடையவராதலால் 

தாஶார்ஹ: பகவான் 'தாஶார்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தானத்தை 'தாஶ' என்றழைப்பர். அனைத்து தானங்களையும் ஏற்கும் தகுதி (அருகதை) உடையவராதலால் பகவான் 'தாஶார்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

தஶார்ஹகுல 'தஶார்ஹ' குலத்தில் 

உத்பவத்வாத்வா உதித்தவராகையால் 

தாஶார்ஹ: பகவான் 'தாஶார்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தமது கிருஷ்ணாவதாரத்தில் 'தஶார்ஹ' குலத்தில் உதித்தார். எனவே அவர் 'தாஶார்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

512. ஓம் ஸாத்வதாம்பதயே நம:

ஸாத்வதம் நாம தந்த்ரம் 'ஸாத்வத' என்று ஒரு தந்திரம் உள்ளது 'தத்கரோதி ததாசஶ்டே' (அந்த ஸாத்வத தந்திரத்தை) படைத்தவர்கள் அல்லது அதற்கு உரை (வ்யாக்யானம்) எழுதியவர்கள் என்ற பொருளில் 

இதி ணிசி க்ருதே 'ஸாத்வதம்' என்ற வார்த்தையோடு 'ணிசி' யும் 

க்விப்ப்ரத்யயே 'க்விப்' விகுதியும் சேர்ந்து 

ணிலோபே ச 'ணி' என்ற விகுதியை விடுக்கும் பொழுது 

க்ருதே பதம் ஸாத்வத் 'ஸாத்வத்' என்ற பதம் பிறக்கிறது. 

தேஶாம் பதி: அத்தகைய (ஸாத்வத தந்திரத்தை உருவாக்கிய, அதற்கு உரை எழுதிய) ஸாத்வதர்களின் தலைவராக 

யோகக்ஷேமகர இதி அவர்களுக்கு யோகத்தையும் (இல்லாததை அளித்தும்), க்ஷேமத்தையும் (உள்ளவற்றைக் காத்தும்) அளித்து அவர்களை காத்து வழிநடத்துவதால் 

ஸாத்வதாம் பதி: பகவான் 'ஸாத்வதாம் பதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாத்வதம் என்ற பெயருடைய ஒரு தந்திரம் உள்ளது (தந்திரம் என்பது ஆகமம், ஸாஸ்த்ரம் போன்ற ஒரு வழிமுறையாகும். பொதுவாக, உருவ வழிபாடு மற்றும் திருக்கோயில்களை நிர்மாணித்தல் போன்றவை இவற்றில் விளக்கப்பட்டுள்ளது). அவற்றை உருவாக்கியவர்கள் மற்றும் அவற்றின் உரை ஆசிரியர்கள் 'ஸாத்வதர்கள்' என்று அழைக்கப்படுவர். அத்தகைய ஸாத்வதர்களின் பதியாக (தலைவராக) அவர்களுக்கு இல்லாதவற்றை அளித்தும் (யோகம்), இருப்பவற்றைக் காத்தும் (க்ஷேமம்) அவர்களை காத்து வழிநடத்துவதால் பகவான் 'ஸாத்வதாம் பதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

மேலும் ஆச்சார்யாள் 'ஸாத்வத' என்ற பதத்திலிருந்து 'ஸாத்வத்' என்ற பதம் எவ்வாறு பிறக்கிறது என்பதற்கு இலக்கண விதிமுறைகளையும் விளக்கியுள்ளார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!




1 கருத்து:

  1. Thanks PRS for writing detailed explanations of 1000 names of Sri Krishna, i was looking for this for a long time and finally found this, today, have started reading from Part 1, thanks alot, try to publish as a book, very noble effort. best wishes, Vish

    பதிலளிநீக்கு