சனி, மார்ச் 05, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 203

56. அஜோ மஹார்ஹ: ஸ்வபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |

ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||

இந்த ஐம்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

521. அஜ:, 522. மஹார்ஹ:, 523. ஸ்வாபாவ்ய:, 524. ஜிதாமித்ர:, 525. ப்ரமோதன: |

526. ஆனந்த:, 527. நந்தன:, 528. நந்த:, 529. ஸத்யதர்மா, 530. த்ரிவிக்ரம: ||

521. ஓம் அஜாய நம:

ஆத் அகரத்தினால் (அ என்னும் எழுத்தால்) குறிக்கப்படும் 

விஶ்ணோரஜாயத பகவான் விஶ்ணுவிடமிருந்து பிறந்ததால் 

காம: மன்மதன் 

அஜ: 'அஜ' என்று அழைக்கப்படுகிறான். அவனது அந்தர்யாமியான பகவானும் 'அஜ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அகரத்தினால் குறிக்கப்படும் பகவான் விஶ்ணுவிடமிருந்து பிறந்ததால் மன்மதன் 'அஜ' என்று அழைக்கப்படுகிறான். அவனது அந்தர்யாமியான பகவானும் 'அஜ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமசிவனாரின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் தன் உடலை இழக்கிறான். பின்னர் பகவான் கண்ணனாக அவதரித்தபொழுது பகவானுக்கும் ருக்மிணி பிராட்டியருக்கும் மகனாக ப்ரத்யும்னன் என்ற பெயரோடு பிறந்தான். பின்னர் மயாசுரனை அழித்து ரதியை மணந்தான். எனவே, மன்மதன் பகவானின் பிள்ளையாவான்.

“காமனைப் பயந்த காளை” (திருவாய்மொழி 10.2.8)

522. ஓம் மஹார்ஹாய நம:

மஹ: பூஜா 'மஹ' என்றால் பூஜை (வழிபாடு) என்று பொருள் 

தத் அர்ஹத்வாத் அதற்குத் தகுதியுடையவராதலால் 

மஹார்ஹ: பகவான் 'மஹார்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹ என்றால் பூஜை (வழிபாடு). அர்ஹ என்றால் அருகதை உள்ளவர். பகவான் எவ்விதமான பூஜையையும் (வழிபாட்டையும்) ஏற்பதற்குத் தகுதி (அருகதை) படைத்தவர். எனவே, அவர் 'மஹார்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒரு யானை எளிய தாமரையை ஏந்தி 'ஆதிமூலமே' என்று அலறிய பொழுது பகவான் ஓடி வந்து அதை ஏற்றுக்கொண்டார். ஒரு யானையின் எளிய பூவை ஏற்ற அவரே, யுதிஷ்டிரனின் ராஜஸூய யாகத்தில் 'அக்ர' பூஜையையும் ஏற்றார். இராமாவதாரத்தில் குகனின் அன்புக்கும், சபரியின் பக்திக்கும், அனுமனின் தொண்டிற்கும் கட்டுப்பட்டார். கிருஷ்ணாவதாரத்தில் ஒரே நேரத்தில் ஒரு அரசனின் ராஜபோக உபசரிப்பையும், ஒரு ஏழை அந்தணன் அன்று இரந்து பெற்ற பழங்களையும் ஏற்று, இருவருக்கும் அருள் புரிந்தார். வைகுண்டத்தில் நித்ய ஸூரிகளின் அளிக்கும் சிறந்த பூஜையை ஏற்கும் அவரே, ஆய்ச்சிகளின் எளிய அன்பிற்கும் வெண்ணைக்கும் கட்டுப்படுகிறார். எனவே, பகவான் எத்தகைய பூஜையையும் ஏற்கத் தகுதி படைத்தவராவார். பகவத்கீதையில் பகவான் கூறியபடி "ஒரு இலையோ (துளசி), பூவோ, பழமோ அல்லது தண்ணீரோ பக்தியோடு அளித்தால் அதை மிகச்சிறந்த பூஜையாக பகவான் ஏற்கிறார்". 

523. ஓம் ஸ்வாபாவ்யாய நம:

ஸ்வபாவேந ஏவ இயற்கையாகவே 

அபாவ்யோ உருவாவதில்லை (பிறப்பதில்லை) 

நித்யநிஶ்பன்னரூபத்வாத் என்றும் நிறைவுடையவராக இருப்பதால் 

இதி ஸ்வாபாவ்ய: எனவே பகவான் 'ஸ்வாபாவ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றுமே இயற்கையாகவே நிறைவுடையவர் (நிறைவானவர்). எனவே அவர் என்றும் உருவாவதில்லை (பிறப்பதில்லை). எனவே பகவான் 'ஸ்வாபாவ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அபாவ்ய: என்றால் மாறுபாடற்றவர் என்றும் ஒரு பொருள் உள்ளது. 

524. ஓம் ஜிதாமித்ராய நம:

ஜிதா வெல்கிறார் 

அமித்ரா பகைவர்களை 

அந்தர்வர்தினோ உட்பகைவர்களையும் 

ராகத்வேஶாதயோ விருப்பு வெறுப்புக்கள் போன்ற 

பாஹ்யாஸ்ச புறப்பகைவர்களையும் 

ராவணகும்பகர்ணஶிஶுபாலாதயோ இராவணன், கும்பகர்ணன், ஶிஶுபாலன் போன்ற 

யேனாஸௌ ஜிதாமித்ர: எனவே பகவான் 'ஜிதாமித்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உட்பகைவர்களான விருப்பு, வெறுப்புகளையும், புறப்பகைவர்களான இராவணன், கும்பகர்ணன், ஶிஶுபாலன் போன்றோரையும் (எளிதில்) வெல்கிறார். எனவே அவர் 'ஜிதாமித்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

525. ஓம் ப்ரமோதனாய நம:

ஸ்வாத்மாம்ருதரஸா தனது இயற்கை ஸ்வரூபமான அம்ருதத்தை 

ஸ்வாதான்னித்யம் தினமும் சுவைத்து 

ப்ரமோததே இன்புறுகிறார் 

ப்ரமோதன: எனவே, பகவான் 'ப்ரமோதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான ஸ்வரூப அம்ருதத்தை தினமும் சுவைத்து இன்புறுகிறார். எனவே அவர் 'ப்ரமோதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

த்யாயினாம் தன்னை த்யானிப்பவர்களை 

த்யானமாத்ரேன (தன்னை) த்யானித்த அக்கணமே 

ப்ரமோதம் கரோதீதிவா மகிழ்ச்சி அடையச் செய்வதால் (அவர்களை மகிழ்விப்பதால்) 

ப்ரமோதன: பகவான் 'ப்ரமோதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னை த்யானிப்பவர்களை அவர்கள் (தன்னை) த்யானித்த அக்கணமே மகிழ்ச்சி அடையச் செய்வதால் (அவர்களை மகிழ்விப்பதால்), 'ப்ரமோதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

526. ஓம் ஆனந்தாய நம:

ஆனந்த: இன்பத்தை 

ஸ்வரூபமஸ்யேதி தனது இயற்கையாக உடையவர் 

ஆனந்த: பகவான் 'ஆனந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இன்பமே தனது இயற்கை வடிவாக உடையவர். எனவே அவர் 'ஆனந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஏதஸ்யைவானந்தஸ்யான்யானி பூதானி மாத்ராமுபஜீவந்தி' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.32)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்தின்) ஆனந்தத்தின் ஒரு துளி அளவிலேயே ஏனைய ஜீவன்கள் உயிர்வாழ்கின்றன.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

527. ஓம் நந்தனாய நம:

நந்தயதீதி (அனைவரையும்) மகிழ்விப்பதால் 

நந்தன: பகவான் 'நந்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் மகிழ்விப்பதால் பகவான் 'நந்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

528. ஓம் நந்தாய (அனந்தாய) நம:

ஸர்வாபிருபபத்திபி: அனைத்தும் அடையபெற்றிருக்கிறார் 

ஸம்ருத்தோ முழுமையாக 

நந்த: எனவே பகவான் 'நந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தும் (அனைத்து சித்திகளும்) முழுமையாக அடையப்பெற்றிருக்கிறார். எனவே அவர் 'நந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த பூமியில் பிறந்தோரும் சித்திகள் அடையப்பெற்றிருக்கலாம். ஆனால் பகவான் அனைத்தையும் பூரணமாக அடையப்பெற்றுள்ளார்; அவற்றை இயற்கையாகவே அடையப்பெற்றுள்ளார். 

ஸுகம் வைஶயிகம் விஷய சுகங்கள் (புலனின்பங்கள்) 

நாஸ்ய வித்யத இதி அவருக்கு இல்லை 

அனந்த: எனவே பகவான் 'அனந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நம்மை போன்று விஷய சுகத்தை அனுபவிப்பதில்லை. எனவே அவர் 'அனந்த:' (இன்பமில்லாதவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யோ வை பூமா தத் ஸுகம் நால்பே ஸுகமஸ்தி' (சாந்தோக்ய உபநிஶத் 23.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எது முழுமையானதோ அதுவே சிறந்த இன்பமாகும். மற்ற (விஷயசுகங்கள் போன்ற) தாழ்ந்த இன்பங்கள் இன்பங்களாகா.

ஆச்சார்யாள் இந்த திருநாமத்தை 'நந்த:' (இன்பத்தை அனுபவிப்பவர்) மற்றும் 'அனந்த:' (இன்பத்தை அனுபவிக்காதவர்) என்று இரண்டு வகையாகப் பிரித்துப் பொருளுரைத்திருக்கிறார். எனினும், நாமாவளிக் க்ரமத்தில் 'நந்த:' என்ற திருநாமமே ப்ரதானமாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. 

529. ஓம் ஸத்யதர்மணே நம:

ஸத்யா உண்மையான தர்ம அறத்தை (உடையவர் ஆதலால்) 

ஞானாதயோSஸ்யேதி ஞானம் முதலான 

ஸத்யதர்மா பகவான் 'ஸத்யதர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஞானம் முதலான அறத்தை உண்மையாக (என்றும் நிலையாக) உடையவர் ஆதலால் அவர் 'ஸத்யதர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

530. ஓம் த்ரிவிக்ரமாய நம:

த்ரயோ மூன்று 

விக்ரமாஸ் அடிகளால் 

த்ரிஶுலோகேஶு மூன்று உலகங்களையும் 

க்ராந்தா பரவினார் 

யஸ்ய ஸ த்ரிவிக்ரம: எனவே பகவான் 'த்ரிவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது மூன்று அடிகளால் மூவுலகங்களையும் பரவி இருந்ததால் அவர் 'த்ரிவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'த்ரீணி பதா விசக்ரமே' - அவர் மூன்றடிகள் நடந்தார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

இங்கு மூன்று உலகங்கள் என்பது 'ஜாக்ரத' (விழிப்பு நிலை), 'ஸ்வாபன' (கனவு நிலை) மற்றும் 'ஶுஶுப்தி' (ஆழ்ந்த உறக்கம்) ஆகிய நிலைகளைக் குறிப்பதாகக் கூறுவார். நான்காவது நிலையான 'துரீய' நிலையில்தான் ஒருவர் தனது ஆத்மாவை உணர்கிறார். 

த்ரயோ லோகா: மூவுலகங்களையும் 

க்ராந்தா அளந்தார் 

யேனேதி வா த்ரிவிக்ரம: எனவே பகவான் 'த்ரிவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (வாமன அவதாரத்தில்) மூவுலகங்களையும் அளந்ததால் பகவான் 'த்ரிவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்ரிரித்யேவ த்ரயோ லோகா: கீர்த்திதா முனிஸத்தமை: |

க்ரமதே தாம்ஸ்த்ரிதா ஸர்வாஸ்த்ரிவிக்ரம இதி ஶ்ருத: || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.52)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் கூறப்பட்டுள்ளது: தவசீலர்கள் 'த்ரி' (மூன்று) என்ற பதத்தினால் மூவுலகையும் குறிப்பர். அம்மூன்று உலகங்களையும் தாங்கள் தாண்டுவதால் தாங்கள் 'த்ரிவிக்ரமன்' என்ற திருநாமத்தால் புகழ்பெற்று விளங்குகிறீர்கள்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக