ஞாயிறு, ஏப்ரல் 02, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 217

70. காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |

அநிர்தேஶ்யவபுர்விஶ்ணுர்வீரோனந்தோ தனஞ்ஜய: || 

இந்த எழுபதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

651. காமதேவ:, 652. காமபால:, 653. காமீ, 654. காந்த:, 655. க்ருதாகம: |

656. அநிர்தேஶ்யவபு:, 657. விஶ்ணு:, 658. வீர:, 659. அனந்த:, 660. தனஞ்ஜய: || 

651. காமதேவாய நம:

தர்மாதி அறம் முதலான 

புருஶார்த்தசதுஶ்டயம் நான்கு அடையத்தகுந்த இலக்குகளை 

வாஞ்சத்பி: அடைய விழைவோரால் 

காம்யத இதி காம: விரும்பப்படுபவராதலால் 'காம' என்றும் 

ஸ சாஸௌ தேவஸ்சேதி அவர்களது தேவனாக இருப்பதாலும் 

காமதேவ: பகவான் 'காமதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறம் முதலான (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நான்கு அடையத்தகுந்த இலக்குகளை அடைய விழைவோரால் விரும்பப்படுபவராதலாலும் (அந்தப் பலன்களை அளிப்பதால்) அவர்களது தேவனாக இருப்பதாலும் பகவான் 'காமதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

652. காமபாலாய நம:

காமினாம் தம்மிடம் ஆசை வைப்போரின் 

காமான் அனைத்து ஆசைகளையும் 

பாலயதீதி காப்பாற்றுகிறார் (நிறைவேற்றுகிறார்) 

காமபால: எனவே பகவான் 'காமபால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மேற்கூறியவாறு) தம்மிடம் ஆசை வைப்போரின் அனைத்து (நியாயமான) ஆசைகளையும் பகவான் காப்பாற்றுகிறார் (நிறைவேற்றுகிறார்). எனவே, அவர் 'காமபால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

653. காமினே நம:

பூர்ண முழுமையாக நிறைவேற்றப்பட்டவர் 

காம (அனைத்து) ஆசைகளும் 

ஸ்வபாவத்வாத் இயற்கையாகவே 

காமீ எனவே பகவான் 'காமீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் அனைத்து ஆசைகளும் இயற்கையாகவே முழுமையாக நிறைவடைகின்றன. எனவே அவர் 'காமீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

654. காந்தாய நம:

அபிரூபதமம் அழகுமிக்க 

தேஹம் திருவுடலை 

வஹன் உடையவராதலால் 

காந்த: பகவான் 'காந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகுமிக்க திருவுடலை உடையவராதலால் பகவான் 'காந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்விபரார்தாந்தே இரண்டு பரார்த்த காலத்தின் முடிவில் 

கஸ்ய 'க' என்று அழைக்கப்படும் 

ப்ரஹ்மணோSப்யந்தோSஸ்மாதிதி வா ப்ரஹ்மாவிற்கும் அந்தமாய் (காலனாய்) இருக்கிறபடியால் 

காந்த: பகவான் 'காந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'க' என்று அழைக்கப்படும் படைக்கும் கடவுளான நான்முகனுக்கு (ப்ரஹ்மாவிற்கு) அவரது காலக்கணக்கின் படி 100 ஆண்டுகள் ஆயுளாகும். இவ்வாறு இரண்டு பரார்த்தங்கள் (இரண்டு 50 ஆண்டுகள், அதாவது 100 ஆண்டுகள்) கழிந்தபின் ப்ரஹ்மாவிற்கும் பகவான் 'அந்தமாய்' இருக்கிறார் (அதாவது ப்ரஹ்மாவையும் மரணிக்க செய்கிறார்). எனவே பகவான் 'காந்த:' (க + அந்த:) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மாவின் ஆயுட்கால கணக்கு:

1 மனித வருடம் = தேவர்களுக்கு 1 நாள்

360 தேவ நாட்கள் (360 மனித வருடங்கள்) = தேவர்களுக்கு ஒரு வருடம்

12000 தேவ வருடங்கள் (43,20,000 மனித வருடங்கள்) = 1 சதுர் யுகம் (நான்கு யுகங்கள்)

1000 சதுர் யுகம் (432 கோடி மனித வருடங்கள்) = ப்ரஹ்மாவின் பகல் பொழுது

1000 சதுர் யுகம் (432 கோடி மனித வருடங்கள்) = ப்ரஹ்மாவின் இரவு பொழுது

ஆக, ப்ரஹ்மாவின் ஒரு நாள் என்பது மனித வருடக் கணக்கில் 864 கோடி ஆண்டுகள்

இவ்வாறு 360 நாட்கள் (360 *864 கோடி மனித ஆண்டுகள்) ப்ரஹ்மாவின் ஒரு வருடம்

இவ்வாறு நூறு வருடங்கள் ப்ரஹ்மாவின் ஆயுட்காலமாகும் (100 * 360 * 8640000000 மனித வருடங்கள்)

655. க்ருதாகமாய நம:

க்ருத செய்தார் (உருவாக்கினார்) 

ஆகம: ஆகமங்களை 

ஶ்ருதிஸ்ம்ருத்யாதிலக்ஷணோ வேதங்கள் மற்றும் ஸ்ம்ருதிகள் போன்ற 

யேன ஸ க்ருதாகம: எனவே, பகவான் 'க்ருதாகம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வேதங்கள் மற்றும் ஸ்ம்ருதிகள் போன்ற ஆகமங்களை (ஸாஸ்திரங்களை) உருவாக்கினார். எனவே அவர் 'க்ருதாகம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஶ்ருதிஸ்ம்ருதி மமைவாஞே'

பகவான் கூறுகிறார்: வேதங்களும், ஸ்ம்ருதிகளும் என்னுடைய ஆணைகளே

இதி பகவத்வசனாத் | பகவானின் இந்தக் கூற்றின்படி (பகவானே ஆகமங்களை உருவாக்கினார் என்பது விளங்கும்).

'வேதா: ஶாஸ்த்ராணி விஞ்ஞானமேதத்ஸர்வம் ஜனார்தனாத்' (ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமம் 136)

இத்யத்ரைவ வக்ஷ்யதி |

(ஸ்ரீ பீஶ்மாச்சாரியாராலும்) ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பின்வரும் ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது: வேதங்களும், ஸாஸ்திரங்களும் பகவான் ஸ்ரீஜனார்தனராலேயே வெளியிடப்பட்டன.

656. அநிர்தேஶ்யவபுஶே நம:

இதம் ததீஶ்ருதம் இத்தகையது, இதனால் உண்டானது என்று 

வேதி நிர்தேஶ்டும் யன்ன ஶக்யதே அறிந்துகொள்ள இயலாத 

குணாத்யதீதத்வாத் முக்குணங்களுக்கு மேற்பட்ட (அவற்றோடு கலவாத) 

ததேவ ரூபமஸ்யேதி அவரது உருவம் 

அநிர்தேஶ்யவபு: எனவே பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் உருவம் முக்குணங்களுடன் கலவாத, அவற்றுக்கு மேற்பட்ட உருவமுடையவராதலால் பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 177-வது (அநிர்தேஶ்யவபு:) திருநாமத்தில் ஆசார்யாள் பகவானின் திருமேனி பிறரால் அறியமுடியாத மிக உயர்ந்த வஸ்துவால் உருவானது என்று உரை அளித்திருந்தார். இங்கு, முக்குணங்களின் கலவாமையினால் அநிர்தேஶ்யவபு: என்று விளக்கியுள்ளார். நம்மால் இவ்வுலகில் அறியப்படும் அனைத்து பொருட்களும் முக்குணங்களின் கலவையினால் உருவானது. ஆனால், பகவான் அவற்றிற்கு மேம்பட்டவர்.

657. விஶ்ணவே நம:

ரோதஸி விண்ணையும், மண்ணையும் 

வ்யாப்ய பரவிய (பரந்துள்ள) 

காந்திரப்யாதிகா மிகச்சிறந்த ஒளியுடன் 

ஸ்திதாஸ்யேதி (நிலைபெற்று) இருப்பவராதலால் 

விஶ்ணு: பகவான் 'விஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் தனது சிறந்த ஒளியால் (காந்தியால்) இந்த விண்ணையும், மண்ணையும் பரவி, பரந்து நிலைபெற்றுள்ளார். எனவே அவர் 'விஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யாப்ய மே ரோதஸி பார்த்த காந்திரப்யதிகா ஸ்திதா |

க்ரமணாத்வ்யாப்யஹம் பார்த்த விஶ்ணுரித்யபிஸம்ஞித: |  (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 341.42-43)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் பகவான் கூறுகிறார்: ஓ பார்த்தா!! விண்ணையும், மண்ணையும் எனது சிறந்த ஒளியால் பரந்து, பரவியுள்ளேன்.

எனது பாதங்களால் மூவுலகங்களையும் எனது பாதங்களால் தாவி நடந்தேன். எனவே, நான் 'விஶ்ணு' என்று அழைக்கப்படுகிறேன்.

முன்பு 2வது திருநாமத்தில் விஶ்ணு என்ற திருநாமத்திற்கு, 'எங்கும் பரவியிருப்பவர் (வேவேஶ்டி)', 'அனைத்துப் பொருட்களிலும் உட்புகுந்திருப்பவர் (விஶதேர்வா) என்று ஆச்சார்யாள் உரை அளித்திருந்தார். பின்னர் 258வது திருநாமத்தில் எங்கும் வ்யாபித்திருப்பவர் ('விஶ்ணுர்விக்ரமனாத்') என்று உரை அளித்திருந்தார். இங்கு தனது காந்தியால் எங்கும் பரந்து நிலைபெற்றிருப்பவர் என்று பொருள் அளித்துள்ளார்.

658. வீராய நம:

கத்யாதிமத்வாத் கதி (செல்லுதல்) முதலானவைகளை உடையவராதலால் 

வீர: பகவான் 'வீர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'வீ கதி வ்யாப்தி ப்ரஜன காந்த்யஸனகாதனேஶு' 'வீ' என்ற சொல்லிற்கு செல்லுதல் (கதி), பரவுதல் (வ்யாப்தி), படைத்தல் (ப்ரஜன), ஒளிர்தல் (காந்தி), எறிதல் / வீசுதல் (அஸன), உண்ணுதல் (காதனேஶு) என்ற பொருள்கள் 

இதி தாதுபாடாத் தாது பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

'வீ' என்ற சொல்லிற்கு செல்லுதல், பரவுதல் (வ்யாப்தி), படைத்தல் (ப்ரஜன), ஒளிர்தல் (காந்தி), எறிதல் / வீசுதல் (அஸன), உண்ணுதல் (காதனேஶு) என்ற பொருள்கள் தாது பாடத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு செல்லுதல் (கதி) முதலானவைகளை உடையவராதலால் பகவான் 'வீர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாது பாடம்: வினைச்சொற்களின் (Verbs) மூல வடிவிற்கு தாது என்று பெயர். இந்த தாது சொற்களுக்கு பற்பல பொருள்கள் உண்டு. இவற்றை கூறும் பகுதிக்கு தாது பாடம் என்று பெயர்.

659. அனந்தாய நம:

வ்யாபித்வான்னித்யத்வாத் எங்கும் பரந்திருப்பதாலும் (வ்யாபித்வாத்), என்றும் இருப்பதாலும் (நித்யத்வாத்), 

ஸர்வாத்மத்வாத் எங்கும் (அனைவரின் ஆன்மாவாக) இருப்பதாலும் 

தேஶத: இடத்தாலும் 

காலதோ காலத்தாலும் 

வஸ்துதஸ்ச வாஸ்து (பொருளினாலும்) 

அபரிச்சின்ன: அளவிடமுடியாதவர் 

அனந்த: பகவான் 'அனந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் / அனைத்தின் ஆன்மாவாக இருப்பதால் பகவான் எங்கும் பரவியிருக்கிறார். அவரை எந்த ஒரு இடத்தைக் கொண்டு அவரை அளவிட இயலாது, காலத்தால் அளவிட முடியாது, ஒரு குறிப்பிட்ட வஸ்துவால் அவரை அளவிட முடியாது. ஆதலால், பகவான் 'அனந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம' (தைத்ரீய உபநிஶத்  2.1)

தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: பரப்ரஹ்மம் என்றுமுள்ளது, அறிவு மயமானது, வரையறுக்கப்படாத தன்மையை உடையது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

'கந்தர்வாப்ஸரஸ: ஸித்தா: கின்னரோரகசாரணா: |

நாந்தம் குணானாம் கச்சந்தி தேனானந்தோயமவ்யய: ||' (ஸ்ரீவிஶ்ணு புராணம் 2.5.24)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: கந்தர்வர்கள், அப்ஸரஸுகள், ஸித்தர்கள், கின்னரர்கள், நாகங்கள், மற்றும் சாரணர்கள் எவரும் அழிவற்ற பரம்பொருளான பகவானுடைய குணங்களின் எல்லைகளை அறிந்ததில்லை. எனவே அவர் 'அனந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி விஶ்ணுபுராணவசனாத்வா அனந்த: | இந்த விஶ்ணுபுராண கூற்றின்படி பகவான் 'அனந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

660. தனஞ்ஜயாய நம:

யத்திக்விஜயே எவர் திக்விஜயத்தில் 

ப்ரபூதம் நிறைய 

தனம் செல்வத்தை 

அஜயத்தேன வென்ற 

தனஞ்ஜய: பகவான் 'தனஞ்ஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

அர்ஜுன: அர்ஜுனனாக இருப்பவர்.

திக்விஜயத்தில் நிறைய செல்வத்தை வென்ற அர்ஜுனனாக இருப்பவராதலால் பகவான் 'தனஞ்ஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பாண்டவானாம் தனஞ்ஜய:' (ஸ்ரீமத்பகவத்கீதை 10.37)

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: பாண்டவர்களில் தனஞ்ஜயன்.

இதி பகவத்வசனாத் | இது (ஸ்ரீமத்பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

அர்ஜுனனின் திக்விஜயம்: யுதிஷ்டிரன் தலைமையில் கண்டவப்ரஸ்தத்தை ஆண்ட பாண்டவர்கள் ராஜஸூய யாகம் செய்ய முடிவெடுத்தனர். அதற்கு செல்வத்தை சேகரிக்க ஒவ்வொரு பாண்டவ சகோதரர்களும் ஒவ்வொரு திக்கில் திக்விஜயம் செய்தனர். அவ்வாறு, வடதிசையில் திக்விஜயம் செய்த அர்ஜுனன் பல நாட்டு மன்னர்களிடமிருந்து பொருள் திரட்டினான். எனவே அவன் தனஞ்ஜயன் என்று அழைக்கப்படுகிறான்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக