21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||
இந்த இருபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |
194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||
இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக).
189. ஓம் மரீசயே நம:
தேஜஸ்வினாமபி தேஜஸ்வாத் மரீசி:
அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் 'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
190. ஓம் தமனாய நம:
ஸ்வாதிகாராத் ப்ரமாத்யதி ப்ரஜா தமயிதும் ஶீலமஸ்ய வைவஸ்வதாதிரூபேணேதி தமன:
தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை
தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
191. ஓம் ஹம்ஸாய நம:
அஹம் ஸ இதி தாதாத்ம்யபாவின: ஸம்ஸாரபயம் ஹந்தீதி ஹம்ஸ:
நானே பரப்ரஹ்மம் என்ற ஆத்ம பாவனையில்
இருப்பவரின் ஸம்ஸார பயத்தைப் போக்குவதால் (போக்கி, முக்தி அளிப்பதால்) பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஹந்தி கச்சதி ஸர்வஶரீரேஶ்விதி வா ஹம்ஸ:
அல்லது, அனைத்து உடல்களுக்குள் (அவற்றின் அந்தர்யாமியாய்) செல்வதால் பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
192. ஓம் ஸுபர்ணாய நம:
ஶோபன தர்மாதர்ம ரூப பர்ணத்வாத் ஸுபர்ண:
பகவான் தர்மம், அதர்மம் என்னும் அழகிய இரு இறக்கைகளைக் கொண்ட பறவை போன்று இருப்பதால் அவர் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶோபனம் பர்ணம் யஸ்யேதி வா ஸுபர்ண:
அழகிய இறக்கைகளை உடையவராதலால் பகவான் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
193. ஓம் புஜகோத்தமாய நம:
புஜேன கச்சதாம் உத்தமோ புஜகோத்தம:
ஊர்ந்து செல்லும் பிராணியான பாம்புகளில், (வாஸுகி, ஆதிசேடன் போன்று) சிறந்தவராக இருப்பதால் பகவான் 'புஜகோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
194. ஓம் ஹிரண்யநாபாய நம:
ஹிரண்யமிவ கல்யாணி நாபிரஸ்யேதி ஹிரண்யநாப:
பொன்னைப்போன்று அழகிய தொப்புளை உடையவராதலால் பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஹிதரமணீய நாபித்வாத்வா ஹிரண்யநாப:
அல்லது, பகவானின் தொப்புள் அழகாக
இருப்பதோடல்லாது நமக்கு நன்மையை தருவதாகவும் இருப்பதால் பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
195. ஓம் ஸுதபஸே நம:
நரன் என்ற சீடனாகவும், நாராயணன் என்ற குருவாகவும் பகவான்
பத்ரிகாஸ்ரமத்தில் உலக நன்மைக்காக மங்களமான தவம் புரிந்து வருகிறார். எனவே, அவர் 'ஸுதபா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
196. ஓம் பத்மநாபாய நம:
பத்மமிவ ஸுவர்துலா நாபிரஸ்யேதி பத்மநாப:
தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை உடையவராதலால் பகவான் ‘பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.
ஹ்ருத்பத்மஸ்ய நாபௌ மத்யே ப்ரகாஶனத்வா பத்மநாப:
பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய
கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் 'பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
197. ஓம் ப்ரஜாபதயே நம:
ப்ராஜானாம் பதி: பிதா ப்ரஜாபதி:
பகவான் அனைவருக்கும் தந்தையாக இருப்பதால் அவர் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக