வியாழன், செப்டம்பர் 16, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 191

44. வைகுண்ட: புருஶ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |

ஹிரண்யகர்ப்ப: ஶத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||

இந்த நாற்பத்துநான்காவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

405. வைகுண்ட:, 406. புருஶ:, 407. ப்ராண:, 408. ப்ராணத:, 409. ப்ரணவ:, 410. ப்ருது: |

411. ஹிரண்யகர்ப்ப:, 412. ஶத்ருக்ன:, 413. வ்யாப்த:, 414. வாயு:, 415. அதோக்ஷஜ: ||

405. ஓம் வைகுண்டாய நம:

விவிதா வெவ்வேறு 

குண்டா கதே: 'குண்டா' என்றால் போக்கு 

ப்ரதிஹதி: (அவற்றை)  தடை செய்வது 

விகுண்டா 'விகுண்டா' எனப்படும் 

விகுண்டாயா: கர்த்தேதி அவ்வாறு தடை செய்பவராதலால் 

வைகுண்ட: பகவான் 'வைகுண்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஜகதாரம்பே இந்தப் ப்ரபஞ்சம் உருவானபொழுது (அதன் தொடக்கத்தில்) 

விஶ்லிஶ்டானி (ஒன்றோடொன்று கலவாது) பிரிந்திருந்த 

பூதானி (நீர், நிலம், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய) ஐம்பூதங்களை 

பரஸ்பரம் ஒன்றோடொன்று 

ஸம்ஸ்லேஶயன் கலக்கும்படி செய்து 

தேஶாம் கதிம் அவற்றின் போக்கை 

ப்ரதிபத்னாதீதி (பகவான்) தடை செய்தார் (எனவே அவர் 'வைகுண்ட:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்).

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒன்றோடொன்று கலவாதிருந்த ஐம்பூதங்களை அவை ஒன்றோடொன்று கலக்கும் படி செய்து அவற்றின் போக்கைத் தடுத்தார். இவ்வாறு வெவ்வேறு (விவித) போக்குகளை (குண்டா) தடுத்ததால் பகவான் 'வைகுண்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மயா ஸம்ஸலேஶிதா பூமிரத்பிர்வ்யோம ச வாயுனா |

வாயுஸ்ச தேஜஸா ஸார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம ||

(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 342.80)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான் கூறுகிறார்): நான் நிலத்தை நீரோடும், வான்வெளியை காற்றோடும் (வாயுவோடும்), காற்றை (வாயுவை) நெருப்போடும் கலந்தேன். எனவே, என்னிடத்தில் 'வைகுண்டத்வம்' இருக்கிறது.

இதி ஶாந்தி பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. 

406. ஓம் புருஶாய நம:

ஸர்வஸ்மாத்புரா ஸதனாத் அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் 

ஸர்வபாபஸ்ய ஸாதனாத்வா அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் 

புருஶ: பகவான் 'புருஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் பகவான் 'புருஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ யத்பூர்வோஸ்மாத்ஸர்வஸ்மாத்ஸர்வான்பாப்மன ஒளஷத் தஸ்மாத்புருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.1)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) அனைவருக்கும் முதலானவர் (முதலாகத் தோன்றியவர்). அனைவரின் பாபங்களையும் அழிப்பவர். எனவே, அவர் 'புருஶ' என்றறியப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

புரி 'புரி' என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் 

ஶயனாத்வா ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) 

புருஶ: பகவான் 'புருஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'புரி' என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) பகவான் 'புருஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ வா அயம் புருஶ: ஸர்வாஸு பூர்ஶு புரிஶய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.18)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உடல்களுக்குள்ளும் உறைவதால் (பரப்ரஹ்மமான பகவான்) புருஶ: என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

407. ஓம் ப்ராணாய நம:

ப்ராணிதி உயிர்வாழ்கிறார் 

க்ஷேத்ரக்ஞரூபேண க்ஷேத்ரக்ஞரின் வடிவில் (அனைவருக்குள்ளும்) 

ப்ராண: எனவே பகவான் 'ப்ராண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவருக்குள்ளும் (அனைத்தையும் அறியும் உள்ளுறை ஆத்மாவாக) க்ஷேத்ரக்ஞரின் வடிவில் உயிர்வாழ்கிறார். எனவே அவர் 'ப்ராண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ப்ராணாத்மனா ப்ராண வாயுவின் வடிவில் 

சேஶ்ட்யன்வா அனைவருக்குள்ளும் (எங்கும்) செல்கிறார் 

ப்ராண: எனவே பகவான் 'ப்ராண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் ப்ராண வாயுவின் வடிவில் அனைவருக்குள்ளும் செல்கிறார் (அனைவரையும் செயல்பட வைக்கிறார்). எனவே அவர் 'ப்ராண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'சேஶ்டாம் கரோதி ஸ்வஶனஸ்வரூபி' (ஸ்ரீவிஶ்ணு புராணம்)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: மூச்சுக் காற்றின் வடிவில் அனைத்தையும் செயல்படுத்துகிறார் (அனைவருக்குள்ளும் செல்கிறார்).

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

408. ஓம் ப்ராணதாய நம:

கண்டயதி அழிக்கிறார் 

ப்ராணினாம் உயிரினங்களின் 

ப்ராணான் உயிரை (அல்லது உயிர்மூச்சை) 

ப்ரளயாதிஶ்விதி ப்ரளயம் முதலிய அழிவுக்காலங்களில் 

ப்ராணத: எனவே பகவான் 'ப்ராணத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரளயம் முதலான அழிவுக்காலங்களில் உயிரினங்களின் உயிரை அழிக்கிறார். எனவே, அவர் 'ப்ராணத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

409. ஓம் ப்ரணவாய நம:

ப்ரணௌதீதி ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் 

ப்ரணவ: பகவான் 'ப்ரணவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஓம்' என்ற ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் பகவான் 'ப்ரணவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதீ'

'ஓம்' என்று கூறி வணங்கவேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

ப்ரணம்யதே வணங்கப்படுவதால் 

இதி வா ப்ரணவ: பகவான் 'ப்ரணவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (வேதங்களாலும், அனைத்து தேவர்களாலும்) வணங்கப்படுவதால் பகவான் 'ப்ரணவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ரணமந்தீஹ யம் வேதாஸ்தஸ்மாத்ப்ரணவ உச்யதே'  

அவரை வேதங்கள் கைகூப்பி வணங்குகின்றன. எனவே அவர் ப்ரணவ என்று அழைக்கப்படுகிறார்..

இதி ஸனத்குமாரவசனான் | இது ஸனத்குமாரரின் கூற்றாகும். 

410. ஓம் ப்ருதவே நம:

ப்ரபஞ்சரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில் 

விஸ்த்ருதத்வாத் விரிவடைந்து இருப்பதால் 

ப்ருது: பகவான் 'ப்ருது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில் விரிவடைந்து இருப்பதால் பகவான் 'ப்ருது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருது என்ற சொல்லிற்கு மிகப்பெரிய, அகலமான என்ற பொருள்கள் உண்டு. இங்கு ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்துள்ளதால் பகவான் ப்ருது என்று ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார். 

411. ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:

ஹிரண்யகர்ப்பஸம்பூதிகாரணம் ஹிரண்யகர்ப்பர் என்று அழைக்கப்படும் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் பிறப்பிடமான 

ஹிரண்மயமண்டம் பொன்மயமான முட்டையானது 

யத்வீர்யஸம்பூதம் எவருடைய சக்தியிலிருந்து தோன்றுகிறதோ 

ததஸ்ய கர்ப்ப இதி (அந்த) பகவான் ப்ரஹ்மாவிற்கும் கர்ப்பமாகிறார் 

ஹிரண்யகர்ப்ப: எனவே பகவான் 'ஹிரண்யகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவும் பகவானின் கர்ப்பத்திலிருந்து அவரது சக்தியால் உருவான பொன்மயமான முட்டையிலிருந்தே தோன்றுகிறார். எனவே, பகவான் 'ஹிரண்யகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

412. ஓம் ஶத்ருக்னாய நம:

த்ரிதஶ (முப்பத்து முக்கோடி) தேவர்களின் 

ஶத்ரூன் எதிரிகளான அஸுரர்களை 

ஹந்தீதி கொல்வதால் 

ஶத்ருக்ன: பகவான் 'ஶத்ருக்ன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(முப்பத்து முக்கோடி) தேவர்களின் எதிரிகளான அஸுரர்களை கொல்வதால் பகவான் 'ஶத்ருக்ன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

413. ஓம் வ்யாப்தாய நம:

காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் 

ஸர்வகார்யாணாம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) 

வ்யாபனாத் பரவி இருப்பதால் 

வ்யாப்த: பகவான் 'வ்யாப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

(அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) பரவி இருப்பதால் பகவான் 'வ்யாப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யாப்த என்றால் எங்கும் பரவி இருத்தல். இந்த ப்ரபஞ்சத்தில் நாம் காணும், கேட்கும், உணரும் அனைத்துமே காரியங்கள் (அதாவது செயல் விளைவுகள்). பகவானே அனைத்திற்கும் (இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கும்) மூல காரணம். காரணமானது காரியத்தை முழுவதுமாய் பரவி இருக்கும். எனவே, பகவானும் அனைத்தையும் (அனைத்திலும்) பரவி இருக்கிறார் என்பது ஆச்சார்யாளின் உரையாகும். 

414. ஓம் வாயவே நம:

வாதி கந்தம் கரோதீதி 'வாதி' அதாவது மணத்தை உண்டாக்குகிறார் 

வாயு: எனவே பகவான் 'வாயு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மணத்தை உண்டாக்குவதால் பகவான் 'வாயு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.9)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: மண்ணில் தூய நாற்றம் நான்

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

415. ஓம் அதோக்ஷஜாய நம:

அதோ ந க்ஷீயதே ஜாது யஸ்மாத்தஸ்மாத் அதோக்ஷஜ: (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.10)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: எப்பொழுதும் தன்னிலையினின்று நழுவாதவராதலாலும், எவ்வித குறைகளுமற்று இருப்பதாலும் பகவான் 'அதோக்ஷஜ:' என்று அழைக்கப்படுகிறார்.

இதி உத்யோக பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. 

த்யௌரக்ஷம் ஆகாயம் (த்யௌ) அக்ஷம் என்று அழைக்கப்படுகிறது 

ப்ருதிவீ சாத: பூமி (ப்ருதிவீ) அத என்று அழைக்கப்படுகிறது 

தயோர்யஸ்மாத் அஜாயத மத்யே அவற்றிற்கு இடையே தோன்றுவதால் 

வைராஜரூபேண இதி வா தனது விராட் ரூபத்தில் 

அதோக்ஷஜ: பகவான் 'அதோக்ஷஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக்ஷம் என்றழைக்கப்படும் ஆகாயத்திற்கும், அத என்றழைக்கப்படும் பூமிக்கும் இடையே தனது விராட் ரூபத்தில் தோன்றுவதால் பகவான் 'அதோக்ஷஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத (பூமி) + அக்ஷ (ஆகாயம்) + ஜ (பிறத்தல்) = அதோக்ஷஜ 

அதோப்ருதே உள்முகமாக, உயர்ந்ததை நோக்கி திருப்பும்போது 

ப்ரத்யக் ப்ரவாஹிதே நுகர்ச்சியை நோக்கி ஓடுவதை தவிர்த்து அதன் எதிர்திசையில் 

அக்ஷகணே இந்திரியங்களை 

ஜாயத இதி வா தோன்றுகிறார் 

அதோக்ஷஜ: எனவே, பகவான் 'அதோக்ஷஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவரொருவர் தமது இந்திரியங்களை (புலன்களை) நுகர்ச்சியை நோக்கி அவை ஓடுவதை தவிர்த்து, அதன் எதிர்திசையான உள்முகமாய் உயர்ந்ததை நோக்கி திருப்புகிறாரோ, அவருக்கு பகவான் (அவர் உள்ளத்தில்) தோன்றுகிறார். எனவே, பகவான் 'அதோக்ஷஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத (அதோப்ருதே) + அக்ஷ (அக்ஷகணே) + ஜ (ஜாயதே) = அதோக்ஷஜ

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக