புதன், ஜூன் 19, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 116

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:

133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


135. ஓம் தர்மாத்யக்ஷாய நம:
தர்மா(அ)தர்மோ (அனைவரும் செய்யும்) அறச்செயல்களையும், அறமல்லாத செயல்களையும் 
ஸாக்ஷாத் ஈக்ஷதே சரிவர நோக்குகிறார் (பார்க்கிறார்
அனுரூபம் அவற்றிற்கு (அந்தந்த செயல்களுக்கு) ஏற்ற 
ஃபலம் பலன்களை 
தாதும் வழங்குவதற்காக 
தஸ்மாத் எனவே 
தர்மாத்யக்ஷ: பகவான் 'தர்மாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரும் புரியும் அறம் மற்றும் அறமல்லாத செயல்கள் அனைத்தையும், அவற்றிற்கு ஏற்ற பலன்களை வழங்குவதற்காக, சரிவர நோக்குகிறார். எனவே, அவர் 'தர்மாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்னிரண்டு திருநாமங்களில் அத்யக்ஷ என்ற சொல் மேற்பார்வையிடுதல் என்ற பொருளில் வருகிறது. இந்தத் திருநாமத்தில் 'பார்த்தல்' என்ற பொருளில் வருகிறது.
தர்ம: + அதர்ம: = தர்மோதர்ம:

136. ஓம் க்ருதாக்ருதாய நம:
க்ருதஸ்ச பகவான் அனைத்து செயல்களையும் செய்கிறார் 
கார்யரூபேண காரிய ரூபமான ப்ரஹ்மத்தின் வடிவில் 
அக்ருதஸ்ச பகவான் எந்த செயல்களும் புரிவதில்லை 
காரணரூபேணேதி காரண ரூபமான ப்ரஹ்மத்தின் வடிவில் 
க்ருதாக்ருத: எனவே அவர் 'க்ருதாக்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து செயல்களையும் புரிகிறார். ஆனால், அவர் செயல்களற்று இருக்கிறார். அனைத்தும் அவரே (காரியம்). எனவே, அனைத்து செயல்களையும் அவரே புரிவதாகக் கொள்ளலாம். ஆனாலும், பரப்ரஹ்மம் ஒன்றிலும் தொடர்பின்றி இருப்பதால் (காரணம்) அவர் எந்த செயல்களையும் தனக்காகப் புரிவதில்லை. எனவே, அவர் செயல்களற்றும் இருக்கிறார். எனவே, பகவான் 'க்ருதாக்ருத:' (செயல் புரிபவர் அதே சமயம் செயல்கற்றும் இருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தத் திருநாமம் புரிந்துகொள்ள சற்று கடினமானது. இரண்டு நேரெதிர் சொற்களை சேர்த்து ஒரே திருநாமமாக பீஷ்மாச்சார்யார் தந்துள்ளார். ஆதிசங்கர பகவத்பாதரும் இதற்கு, உபநிஶத்துக்கள் பரப்ரஹ்மமான பகவானை எவ்வாறு வர்ணிக்கின்றனவோ, அவ்வாறே விளக்கம் அளித்துள்ளார். இதைப் புரிந்து கொள்ள (மேலும் அத்வைத சாரத்தையும் அறிந்து கொள்ள) உபநிஶத்துக்களையும் அதன் விளக்கங்களையும் நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக