சனி, செப்டம்பர் 15, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 78


7. அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |

ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||

இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

55. அக்ராஹ்ய:, 56. ஶாஶ்வத:, 57. க்ருஷ்ண:, 58. லோஹிதாக்ஷ:, 59. ப்ரதர்தன: |
60.ப்ரபூத:, 61.த்ரிககுப்தாம:, 62.பவித்ர:, 63. மங்களம் பரம் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


62. ஓம் பவித்ரே நம:
யேன புனாதி எவர் மூலமாக (அனைத்தும், அனைவரும்) தூய்மை படுத்தப்படுகின்றனரோ யோ வா புனாதி (அல்லது) எவர் அனைத்தையும் தூய்மையாக்க வல்லவரோ ரிஶிர்தேவதா வா தத் அந்த முனிவரையோ, தேவதையையோ பவித்ரம் ’பவித்ரம்’ என்று அழைப்பர். பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'புவ: சம்ஞாயாம்’ (பாணினி சூத்ரம் 3.2.185)
பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
‘பூ’ (புனிதம்) என்ற வேர்ச்சொல்லுடன் ‘இத்ர’ என்ற விகுதி சேர்ந்து, தூய்மையாக்கவல்ல என்ற பொருளில் (அந்த செயலின் காரணியைக் குறிக்கும் வகையில்), பவித்ர என்ற சொல்லாக உருவெடுக்கிறது.

‘கர்தரி சர்ஶிதேவதயோ(பாணினி ஸூத்ரம் 3.2.186)
பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
‘பூ’ (புனிதம்) என்ற வேர்ச்சொல்லுடன் ‘இத்ர’ என்ற விகுதி சேர்ந்து, தூய்மையாக்கவல்ல ஒரு ரிஷியையோ அல்லது தேவதையையோ குறிக்கும் வகையில், பவித்ர என்ற சொல்லாக உருவெடுக்கிறது.

இதி பகவத்பாணினிஸ்மரணாத் இத்ரப்ரத்யய: | இந்த பாணினி சூத்திரங்களின் படி ‘பூ’ (புனிதம்) என்ற சொல்லுடன் இத்ர என்ற விகுதி சேர்ந்து ‘பவித்ர’ என்ற சொல்லாக உருவெடுக்கிறது.

இந்த இரு சூத்திரங்களின் படியும், பவித்ர என்ற சொல் பகவானைக் குறிக்கும். அவர் தூய்மைபடுத்தும் காரணியாகவும் இருக்கிறார், தானே அனைவரையும் தூய்மை படுத்துபவராகவும் இருக்கிறார்.

பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

63. ஓம் மங்களாய பரஸ்மை நம:
அஶுபானி நிராசஷ்டே தனோதி ஶுபஸந்ததிம் |
ஸ்ம்ருதிமாத்ரேன யத் பும்ஸாம் ப்ரஹ்ம தன்மங்களம் விது: || (ஸ்ரீ விஶ்ணு புராணம்)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
எவரொருவரை நினைத்த மாத்திரத்திலேயே (தன்னை நினைக்கும்) மனிதனின் அல்லனவற்றை நீக்கி, நல்லனவற்றை அதிகரிக்கிறாரோ, அந்த பரப்ரஹ்மத்தை “மங்களம்” என்று அழைக்கின்றனர்.

இதி விஶ்ணுபுராண வசனாத் இந்த ஸ்ரீ விஶ்ணுபுராண வாக்கியத்தின்படி கல்யாணரூபத்வாத்வா அனைத்து நற்குணங்களும் நிறைந்திருப்பதால் மங்களம் பகவான் ‘மங்களம்’ என்று அழைக்கப்படுகிறார். பரம் ‘பரம்’ என்றால் ஸர்வபூதேப்ய: அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் உத்க்ருஷ்டம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் (பகவான்) உயர்ந்தவர் என்பதைக் குறிக்கிறது. மங்களம் பரம் ‘மங்களம் பரம்’ என்ற இத்யேகமிதம் நாம ஒரே திருநாமம் ஸவிஶேஶணம் இந்த இரண்டு கருத்தையும் ஒன்றிணைத்த சிறப்பான திருநாமமாகும்.

பகவான் விஶ்ணு தன்னை நினைத்த மாத்திரத்திலேயே, நினைப்பவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு நன்மைகளையும், நல்லனவற்றையும் அதிகரிக்கிறார். இத்தகைய மங்களமான அனைவருக்குள்ளும் சிறந்தவராகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘மங்களம் பரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக