திங்கள், ஜூன் 21, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 186

39. அதுல: ஶரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |

ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: ||

இந்த முப்பத்து ஒன்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

355. அதுல:, 356. ஶரப:, 357. பீம: (அபீம:), 358. ஸமயஜ்ஞய:, 359. ஹவிர்ஹரி: |

360. ஸர்வலக்ஷணலக்ஷண்ய:, 361. லக்ஷ்மீவான், 362. ஸமிதிஞ்ஜய: || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்: 

355. ஓம் அதுலாய நம:

துலோபமானமஸ்ய அவருக்கு ஈடிணையானவர் எவரும் 

வித்யத இதி இல்லை 

அதுல: எனவே, பகவான் 'அதுல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவானுக்கு ஈடிணையானவர் எவருமில்லை. எனவே அவர் 'அதுல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'ந தஸ்ய ப்ரதிமாஸ்தி யஸ்ய நாம மஹத்யஶ:' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.19)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

புகழ்பெற்ற திருநாமங்களை உடைய அந்த பரப்ரஹ்மத்திற்கு ஈடானவர் எவரும் இல்லை.

ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: குதோSன்ய:’ (ஸ்ரீமத் பகவத் கீதை 11.43)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பார்த்தன் பகவானைப் பார்த்துக் கூறுகிறான்: உனக்கு நிகர் யாருமில்லை. எனில், உனக்கு மேல் வேறுயாவர்? 

356. ஓம் ஶரபாய நம:

ஶரா: ஶரீராணி உடலை "ஶரா" என்று அழைக்கின்றனர் 

ஶீர்யமாணத்வாத்தேஶு அழியக்கூடியதால் 

ப்ரத்யகாத்மதயா (அனைவரையும் காக்க வேண்டும் என்ற) தன்னலத்தோடு 

பாதீதி அதனுட்புகுந்து (அனைத்து உடல்களுக்குள்ளும் புகுந்து) உறைவதால் 

ஶரப: பகவான் 'ஶரப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களின் உடல்களுமே அழியக்கூடியவை. எனவே அவற்றை 'ஶர' என்று அழைக்கின்றனர். அந்த 'ஶரங்களுக்குள்' புகுந்து ஆன்மாவாக உறைவதால் பகவான் 'ஶரப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

357. ஓம் பீமாய நம:

பிபேத்யஸ்மாத்ஸர்வமிதி அனைவரும் பகவானிடம் அச்சம் கொண்டுள்ளனர் 

பீம: எனவே பகவான் 'பீம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரும் பகவானிடம் (அவரது பராக்ரமம் மற்றும் மேன்மையினால்) அச்சம் கொண்டுள்ளனர். எனவே, பகவான் 'பீம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பீமாதயோSபாதானே' (பாணினி ஸூத்ரம் 3.4.74)

இதி பாணினிஸ்ம்ருதே: இந்த பாணினி ஸூத்ரத்தை நினைவில் கொள்ளவேண்டும் (பீம என்ற பெயர் காரணத்தை விளக்க) 

ஸன்மார்கவர்த்தினாம் நன்னெறியில் நடப்போர் 

அபீம: அவரிடம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனவே, அவர் 'அபீம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, நன்னெறியில் நடப்போருக்கு அவர் அச்சம் அளிப்பதில்லை. எனவே, அவர் 'அபீம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு இருவகையாய் பொருளுரைத்திருந்தாலும், 'பீம:' என்பதே ஆன்றோரால் திருநாம வரிசையில் கணக்கிடப்பட்டுள்ளது. 

358. ஓம் ஸமயஜ்ஞாய நம:

ஸ்ருஶ்டிஸ்திதிஸம்ஹாரஸமயவித் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரிவதற்கான சரியான சமயத்தை (நேரத்தை) அறிந்துள்ளார் 

ஸமயஜ்ஞய: எனவே பகவான் 'ஸமயஜ்ஞய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முத்தொழில்களான படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை புரிவதற்கான சரியான நேரத்தை அறிந்துள்ளபடியால் பகவான் 'ஸமயஜ்ஞய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஶட்ஸமயாஜ்ஜானாதீதி வா ஆறு காலங்களையும் (இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம் மற்றும் பின்பனிக்காலம்) சரிவர அறிந்துள்ளபடியால் 

ஸமயஜ்ஞய: எனவே பகவான் 'ஸமயஜ்ஞய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆறு ருதுக்களை (ஆறு காலங்களை) சரிவர அறிந்துள்ள படியால் 'ஸமயஜ்ஞய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஆறு காலங்களை அறிதல் மட்டுமே பொருளன்று. ஆச்சார்யாள் நேரடியாய் குறிப்பிடாவிடினும் அந்த ஆறு காலங்களை தக்க நேரத்தில் வரும்படி செய்பவரும் பகவான்தான் என்ற உட்பொருளிலேயே இந்த விளக்கம் அளித்திருப்பார் என்று எண்ணுகிறேன்.. 

ஸர்வபூதேஶு அனைத்து உயிர்களிடத்தும் 

ஸமத்வம் ஏற்றத்தாழ்வின்றி ஒரு நோக்கில் இருப்பது 

யஜனம் பகவானின் வழிபாடு 

ஸாத்வஸ்யேதி வா மிகச்சிறந்த 

ஸமயஜ்ஞய: எனவே பகவான் 'ஸமயஜ்ஞய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு செய்யப்படும் வழிபாடுகளில் மிகச்சிறந்தது எதுவெனில், அனைத்து உயிர்களிடத்தும் ஏற்றத்தாழ்வு பாராட்டாது ஒரு நோக்கில் அவை அனைத்தையும் சமமாக நடுத்துவதேயாகும். எனவே பகவான் 'ஸமயஜ்ஞய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்தையும் 'ஸமமாக' நடத்துவதே அவருக்கு செய்யப்படும் 'யஜ்ஞம்'.

'ஸமத்வமாராதனமச்யுதம்' (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: சமத்துவமே (அனைத்து உயிரினங்களையும், மனிதர்களையும் ஒன்றாக நடத்துவதே) பகவான் அச்சுதருக்கு செய்யப்படும் சிறந்த வழிபாடாகும்.

இதி ப்ரஹலாதவசனாத் | இது ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பக்த ப்ரஹ்லாதனின் கூற்றாகும். 

359. ஓம் ஹவிர்ஹரயே நம:

யஜ்ஞேஶு வேள்விகளில் 

ஹவிர்பாகம் ஆகுதி செய்யப்படும் பொருட்களை ஹரதீதி ஏற்றுக்கொள்வதால் 

ஹவிர்ஹரி: பகவான் 'ஹவிர்ஹரி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வேள்விகளும் பகவானைக் குறித்தே செய்யப்படுகின்றன. அவர் அனைத்து வேள்விகளிலும் ஆகுதி செய்யப்படும் பொருட்களை ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் 'ஹவிர்ஹரி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச’ (ஸ்ரீமத் பகவத் கீதை 9.24)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே (வேள்விகளின்) தலைவன்.

ஹர என்ற சொல்லிற்கு கவர்தல், பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல பொருட்கள் உண்டு. இங்கு, கவர்கிறார் என்பதை விட வேள்வியின் நாயகனாய் இருந்து ஆகுதிகளைப் பெறுகிறார் என்பதே சிறந்த பொருளாக இருக்கும்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும் 

இனி ஆச்சார்யாள், இந்த இரண்டு சொற்களையும் (ஹவி:, ஹரி:) தனித்தனியே பிரித்தும் பொருளுரைக்கிறார். இவ்வாறு, விளக்கியிருந்தாலும் திருநாமக் கணக்கில் 'ஹவிர்ஹரி:' என்று ஒரு திருநாமமாகவே ஆச்சார்யாள் கணக்கிட்டுள்ளார்.

அதவா அல்லது 

ஹூயதே ஹவிஶேதி வேள்விகளில் ஆகுதி கொடுக்கப்படுவது 

ஹவி: 'ஹவிஸ்' எனப்படும்.

அல்லது, பகவானே ஆகுதிப் பொருளாக இருப்பதால் அவர் 'ஹவி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

‘அபத்னன் புருஶம் பஶும்’ (புருஶ ஸூக்தம் 1)

புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:

(வேள்வியில்) புருஶ ரூபமான பசுவை (ஆகுதிப் பொருளை) கட்டி வைத்தனர்

இதி ஹவிஶ்டம் ஶ்ரூயதே இந்த புருஶ ஸூக்தத்தில் பரமபுருஶனே ஆகுதிப் பொருளாக கூறப்பட்டுள்ளது. 

ஸ்ம்ருதி மாத்ரேண அவரை நினைத்த அளவிலேயே 

பும்ஸாம் மனிதர்களின் பாபம் பாவங்களையும் 

ஸம்ஸாரம் வா பிறவிச்சுழல்களையும் 

ஹரதீதி அழிப்பதால் 

ஹரி: பகவான் 'ஹரி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை நினைத்த அளவிலேயே மனிதர்களின் பாவங்களையும், பிறவிச்சுழல்களையும் நீக்குகிறார். எனவே பகவான் 'ஹரி' என்று அழைக்கப்படுகிறார். 

ஹரித்வர்ணத்வாத் வா பச்சை நிற மேனியனாய் இருப்பதால் 

ஹரி: பகவான் 'ஹரி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பச்சை நிற மேனியனாய் இருப்பதால் பகவான் 'ஹரி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹராம்யகம் ச ஸ்மர்த்ருணாம் ஹவிர்பாகம் க்ரதுஶ்வஹம் |

வர்ணஸ்ச மே ஹரி: ஶ்ரேஶ்டஸ்தஸ்மாத் ஹரிர் அஹம் ஸ்ம்ருத: ||

என்னையே எண்ணுவோரின் பாபங்களை அழைக்கிறேன், வேள்விகளில் வழங்கப்படும் ஆகுதிகளை ஏற்கிறேன்,  மிகச்சிறந்த பச்சை வண்ணனாக இருக்கிறேன். எனவே, என்னை அனைவரும் 'ஹரி' என்று அழைக்கின்றனர். 

இதி பகவத்வசனாத் | இவ்வாறு பகவான் கூறியுள்ளார் (இந்த ஸ்லோகம் மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் இருப்பதாக கூறுகின்றனர்).

பச்சை மா மலைபோல் மேனி....(தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

ஹரிர் ஹரதி பாபானி (ப்ரஹலாதன் அருளிய ஹர்யஶ்டகம்) 

360. ஓம் ஸர்வலக்ஷணலக்ஷண்யாய நம:

ஸர்வைர்லக்ஷணை: அனைத்து குறியீடுகளிலும் (விளக்கங்கள்) 

ப்ரமாணைர்லக்ஷணம் ஞானம் ஜாயதே மிகச்சிறந்தது ப்ரமாணங்களை (வேதங்கள் மற்றும் வேதாந்தங்கள்) அறிவதனால் பிறக்கும் உண்மையறிவாகும் 

யத்தத்வினிர்திஶ்டம் அந்த அறிவால் விளக்கப்படும்  

ஸர்வலக்ஷணலக்ஷணம் தத்ர ஸாது:  மேன்மையான பரம்பொருளே (பரமாத்மாவே) 'ஸர்வலக்ஷணலக்ஷணம்' ஆகும் 

ஸர்வலக்ஷணலக்ஷண்ய: எனவே பகவான் 'ஸர்வலக்ஷணலக்ஷண்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

தஸ்யைவ பரமார்த்தத்வாத் ஏனெனில், பகவான் ஒருவரே அறியப்படுபொருளாவர்.

இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து இலக்கணைகள் மற்றும் குறியீடுகளில், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களைக் கற்று அதன் விளைவான அறிவால் விளங்கும் பொருளே மிகச்சிறந்ததாகும். அவ்வாறு, நமது உண்மையறிவால் அறியப்படும் பொருட்களிலேயும் பரம்பொருளான பகவானே மிகச்சிறந்தவராவார். எனவே, அவர் 'ஸர்வலக்ஷணலக்ஷண்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

361. ஓம் லக்ஷ்மீவதே நம:

லக்ஷ்மீரஸ்ய திருமகள் 

வக்ஷஸி அவரது திருமார்பில் 

நித்யம் வஸதீதி என்றும் இணைபிரியாது வசிப்பதால் 

லக்ஷ்மீவான் பகவான் 'லக்ஷ்மீவான்' என்ற திருநாமதால் அழைக்கப்படுகிறார்.

திருமகள் பகவானது திருமார்பில் என்றும் இணைபிரியாது வசிப்பதால் அவர் 'லக்ஷ்மீவான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

362. ஓம் ஸமிதிஞ்ஜயாய நம:

ஸமிதிம் யுத்தம் 'ஸமிதி' அதாவது போரில் (போர்களில்​) 

ஜயதீதி என்றும் வெற்றி பெருவதால் 

ஸமிதிஞ்ஜய: பகவான் 'ஸமிதிஞ்ஜய:' என்ற திருநாமதால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து போர்களிலும் வெல்கிறார். எனவே அவர் 'ஸமிதிஞ்ஜய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக