ப்ரஹலாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ |
பக்தானுரக்த பரிபாலன பாரிஜாத
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (14)
ப்ரஹலாத, நாரத, பராசர, புண்டரீக, வ்யாஸாதி - ப்ரஹலாதன், - நாரதர், பராசரர் (வேத வ்யாஸரின் தந்தை), புண்டரீக மஹரிஷி, வ்யாஸர் முதலிய, பாகவத - அடியவர்களின், புங்கவ - தலைசிறந்த, ஹ்ருந்நிவாஸ - உள்ளத்தில் உறைபவரே, பக்தானுரக்த - உன் அடியவர்களை, பரிபாலன - காத்து அருள்வதில், பாரிஜாத - வேண்டியதை வழங்கும் பாரிஜாத மரம் போல, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.
ப்ரஹலாதன், நாரதர், (விஷ்ணு புராணத்தை மைத்ரேயருக்கு உரைத்தவரும், வேத வ்யாஸரின் தந்தையுமான) பராசர மஹரிஷி, புண்டரீக மஹரிஷி, (வேதங்களைத் தொகுத்தவரும், பதினெண் புராணங்களைத் தொகுத்தவரும், ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தை இயற்றிய) வேத வ்யாஸர் போன்ற தலைசிறந்த அடியவர்களின் உள்ளத்தில் உறைபவரே. உனது அடியவர்களை (அவர்களிடம் கொண்ட பேரன்பினால்) காத்தருளி, அவர்கள் வேண்டியதை பாரிஜாத மரம் போல வழங்குபவரே! திருமாமகளை என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே! எனக்குக் கைக்கொடுத்து அருளுங்கள்.
இந்த துதியை நாம் பகவானின் 'வாஸுதேவ' (அனைத்துயிர்களின் உள்ளத்திலும் உறைபவர்) என்ற திருநாமத்தின் விளக்கமாகக் கொள்ளலாம்.
பகவான் அடியவர்களின் உள்ளத்தில் உறைபவர். அவர் அனைவரின் உள்ளத்தில் உறைபவராயினும், அவரே கதியென்றிருக்கும் பரம பாகவதர்களின் உள்ளத்தில் விரும்பி உறைகிறார் (ஸ்ரீமத் பகவத் கீதை 7.19 - வாஸுதேவ ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:). பரப்ரஹ்மத்தை முற்றும் உணர்ந்தவர் ஆதிசங்கரர். பகவானின் தலை சிறந்த அடியவர்களுள் ஒருவர். அவரைப்போன்ற மஹாத்மாக்கள் பிறப்பதும் அரிது. அவரே, இந்த துதியில் ஒரு சிலரைக் குறிப்பிட்டு, இவர்கள் பாகவதோத்தமர்கள் என்று கூறுகிறார் என்றால் அத்தகையோரின் பெருமையை நாம் சொல்லவும் வேண்டுமோ?
ப்ரஹலாதன்: ப்ரஹலாதனைக் குறிப்பிடாது நரசிம்மாவதாரம் முழுவடையாது. பிறப்பால் அஸுர சிறுவனாய் இருப்பினும் கருவிலேயே திருவுடையவனாய், பகவானே கதி என்றிருந்தவன் ப்ரஹலாதன்.
நாரதர்: சீடனைப் பற்றி குறிப்பிட்ட ஆதிசங்கரர், அடுத்ததாக, ப்ரஹலாதனுக்கு பகவானைப் பற்றி உபதேசித்த அவனது குரு நாரதரைக் குறிப்பிடுகிறார்.
நாரதர் ப்ரஹலாதனின் குரு: ப்ரஹலாதனின் தந்தை ஹிரண்யகசிபு தன் தமையன் ஹிரண்யாக்ஷனின் இறப்பிற்கு பழிவாங்க ப்ரஹ்மாவைக் குறித்து தவம்புரிய சென்ற பொழுது, அவனது மனைவி கயாது கருவுற்றிருந்தாள். பிறக்கும் குழந்தையும் தனக்கு எதிரியாக இருக்கக்கூடும் என்று நினைத்த இந்திரன் கயாதுவைக் கொல்வதற்காக அவளைத் தூக்கிச் சென்றபொழுது, நாரதர் அவனைத் தடுத்து கயாதுவை தனது ஆஸ்ரமத்திற்குக் கூட்டிச் சென்று ஹிரண்யகசிபு தவம் முடித்து வரும்வரை அவளை பாதுகாத்தார். அப்பொழுது அவளுக்கு பகவானின் கதைகளையும், திருநாமங்களையும் கூறிவந்தார். அவள் கேட்காவிடினும், அவளது கருவில் இருந்த ப்ரஹலாதன் அவற்றைக் கேட்டு பக்த சிரோண்மணியாக வளர்ந்தான். எனவே, நாரத மஹரிஷி அவனுக்கு குருவாகிறார்.
பராசரர்: வசிஷ்டரின் பெயரான பராசரர் தனது சீடரான மைத்ரேயர் கேட்ட கேள்விகளுக்கு பதிலுரைக்கையில் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அருளியவர். மேலும், மீனவப் பெண்ணான சத்யவதியின் மூலம் கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வ்யாஸரைப் பெற்றெடுத்தவர்.
புண்டரீகர்: இந்த மஹரிஷியைப் பற்றி புராணங்களில் அதிகக் குறிப்புகள் இல்லை. மாமல்லபுரத்தில் உள்ள (திருக்கடல்மல்லை என்ற புராணப் பெயர் கொண்ட) 108 திவ்யதேசத்தில் ஒன்றான ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் ஸ்தல புராணத்தில் புண்டரீகர் என்னும் மஹரிஷிக்கு பகவான் காட்சி தந்ததாக அந்தக் கோயிலின் ஸ்தல புராணம் கூறுகிறது.
வ்யாஸர்: இவர் பெருமையை இந்த சிறு பதிவில் கூறிவிட முடியாது. இவர் பகவானின் ஆவேச அவதாரம் (வ்யாஸாய விஷ்ணு ரூபாய, வ்யாஸ ரூபாய விஷ்ணவே). வைவஸ்வத மன்வந்தரத்தில் நமக்காக வேதங்களை வகுத்துக் கொடுத்தவர். ஐந்தாவது வேதம் என்றழைக்கப்படும் மஹாபாரதத்தை இயற்றியவர். பதினென் புராணங்களை அளித்தவர் (விஷ்ணு புராணம் போன்ற ஒரு சில புராணங்களை மற்றவர்கள் இயற்றி இருப்பினும் அவற்றையெல்லாம் தொகுத்து தன் சீடர்கள் மூலம் எங்கும் பரப்பியவர் வேத வ்யாஸரே).
வ்யாஸர் என்பவர் நாம் நினைப்பதைப் போல ஒரு தனிப்பட்ட நபர் அல்ல. வ்யாஸர் என்பது ஒரு பதவியாகும். ப்ரஹ்மாவின் ஒரு நாளில் 14 மனுக்கள் ஆட்சி செய்கின்றனர். (மன்வந்தரம் என்றழைக்கப்படும் ) ஒவ்வொரு மனுவின் காலத்திலும் ஒவ்வொருவர் "வ்யாஸராகத்" தேர்வு செய்யப்படுகின்றனர். இன்றைய (வைவஸ்வத) மன்வந்தரத்தில், கிருஷ்ண த்வைபாயனர் வ்யாஸராக உள்ளார். இதற்கு முந்தைய மன்வந்தரத்தில் கிருஷ்ண த்வைபாயனரின் தந்தை ஸ்ரீபராசர மஹரிஷியே வ்யாஸராக இருந்து வேதங்களைத் தொகுத்தளித்தார்.
மேற்சொன்ன பாகவதோத்தமர்கள் மட்டுமல்லாது நம் போன்றோரையும் பகவான் காக்கிறார். தேவலோகத்துத் தோட்டங்களில் பாரிஜாத மரம் என்ற மரம் ஒன்று உண்டாம். அதன் அடியில் நின்று நாம் என்ன நினைக்கின்றோமோ அதை அந்த மரம் வழங்குமாம். அவ்வாறு, அடியவர்கள் விரும்புவதை பாரிஜாத மரம்போல பகவானே அள்ளி வழங்குகிறார் (இங்கு விருப்பம் என்பது, தர்ம சாஸ்திரங்களுக்கு உட்பட்ட நியாயமான விருப்பங்களைக் குறிக்கும்).
இவ்வாறு, திருமகளுடன் என்றும் இணைபிரியாது, தன்னை அண்டிய அடியவர்களை காக்கும் பகவான் லக்ஷ்மிநரசிம்மர், தமக்கு (நமக்கு) கைக்கொடுத்து இந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுவித்து அருள வேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக