ஸம்ஸார ஜால பதிதஸ்ய ஜகந்நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாக்ர ஜஷோபமஸ்ய |
ப்ரோத்கண்டித ப்ரசுரதாலுக மஸ்தகஸ்ய
லட்சுமிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (9)
ஸம்ஸார - இந்த பிறவியென்னும், ஜால - மாய வலையில், பதிதஸ்ய - விழுந்துவிட்டேன், ஜகந்நிவாஸ - இவ்வுலகனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே, ஸர்வேந்த்ரியார்த்த - ஐம்புலன்களென்னும், படிஷாக்ர - கூரிய தூண்டில் முனையில், ஜஷ - மீன், உபமஸ்ய - போன்று உள்ளேன், ப்ரோத் - குத்தி, கண்டித - துண்டிக்கப்பட்ட, ப்ரசுரதாலுக - பிரித்தெடுக்கப்பட்டு, மஸ்தகஸ்ய - தலை, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.
புலனின்பங்கள் என்னும் புழுவைத் தன் தூண்டிலில் வைத்து, இந்தப் பிறவி விரித்த மாய வலையில் நான் சிக்கித் தவிக்கின்றேன். புலனின்பங்களை நாடி, தூண்டிலில் விழுந்து தன் தலையை இழந்துள்ள ஒரு மீனைப் போன்று தவிக்கிறேன். இவ்வுலகனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!
இந்தப் பிறவி ஒரு மாய வலையை விரிக்கிறது. நமது ஐம்புலன்களுக்கும் இன்பம் தரவல்ல புலனின்பங்களே அந்தத் தூண்டில் நுனியில் உள்ள புழுவாகும். எவ்வாறு ஒரு மீனானது தூண்டிற்ப் புழுவைக்கண்டு, அதை சுவைக்கப் போய், தூண்டிலில் சிக்கித் தன்னையே இழக்கிறதோ, அவ்வாறே, நாமும் புலனின்பத்தை நாடி, அந்த மாய வலையில் வீழ்ந்து, தூண்டிலில் சிக்கி, தலை துண்டிக்கப்பட்ட மீனைப்போன்று துடித்துக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய துயரமான நிலையில் இருக்கும் நம்மை திருமகள் கேள்வனான நரசிம்மர் கைக்கொடுத்துக் காக்கவேண்டும் என்று அழைக்கிறார்.
ஜகந்நிவாஸ: பகவான் உலகனைத்திலும் உள்ளான். உலகனைத்தும் அவனுள் உள்ளது. ஆனால், அனைத்து அவதாரங்களிலும், நரசிம்ம அவதாரத்தில் தான் இந்த உண்மை அனைவரும் அறியும் வகையில் வெளிப்பட்டது. பகவான், சிறுவனான ப்ரஹலாதன், "ஹரி எங்கேயுள்ளான்?" என்ற கேள்விக்கு எந்த இடத்தைக் கைகாட்டுவானோ என்று தெரியாது, பகவான் நரசிம்மர் அனைத்து இடங்களிலும் நிறைந்து மறைந்திருந்தார். ப்ரஹ்லாதன் ஒரு தூணைத்தான் கைக்காட்டினான். 'இன்றும் நரசிம்மர் அனைத்து இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். ஆனால், கைக்காட்டத்தான் ப்ரஹ்லாதன் இல்லை' என்று ஆன்றோர் கூறுவார். எனவே, 'அனைத்திலும் நிறைந்திருக்கும் பகவானுக்கு, நான் இந்த வலையில் சிக்கி தவிப்பது தெரியாமல் போகுமா?' என்ற பொருளிலேயே இங்கு "ஜகந்நிவாஸ" என்று அழைக்கிறார் ஆதிசங்கரர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக