ஞாயிறு, ஏப்ரல் 29, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 41

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||

இவற்றில் விஸ்வம் என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் மிகவும் நீண்ட உரையை அளித்துள்ளார். அவற்றை ஒரு சில பதிவுகளில் அனுபவிக்கலாம். முந்தைய பதிவில் 'விஶ்வஸ்மை நம:' என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளித்த பல உரைகளைப் பார்த்தோம். அவற்றின் சுருக்கமும், மேலும் இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளிக்கும் பல மேற்கோள்களையும் நாம் இன்று அனுபவிக்கலாம்.

விஶ்வம் என்னும் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளித்த விளக்கங்கள்: 


1. ஜகத: காரணத்வேன விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம |
(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

2. யத்வா பரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம் விஶ்வம் பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம |

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

3. அதவா விஶதீதி விஶ்வம் ப்ரஹ்ம |
அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

4. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம் ப்ரஹ்ம |
பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

5. ததா ஹி ஸகலம் ஜகத் கார்யபூதமே விஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |
மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இனி ஆச்சர்யாள் அளிக்கும் பற்பல மேற்கோள்களிலிருந்து ஒரு சிலவற்றை இன்று காண்போம்.

‘அன்யத்ர தர்மாதன்யத்ராதர்மாத்’ (கடோபநிஶத் 1.2.14) இத்யாரப்ய கடோபநிஷத்தில் (அந்த ப்ரஹ்மானது) தர்மத்திற்கும் வேறான, அதர்மத்திற்கும் வேறான என்று (ப்ரஹ்மத்தை) விவரிக்கத் தொடங்குமிடத்து,

‘ஸர்வே வேதா யத்பதமாமனந்தி
தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி |
யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி
தத்தே பதம் ஸங்க்ரஹேன ப்ரவீம்யோமித்யேதத்’ || (கடோபநிஶத் 1.2.15)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எல்லா வேதங்களும் எந்த இலக்கைப் பற்றி பேசுகின்றனவோ, எதற்காக அனைத்து தவங்களையும் கூறுகின்றனவோ, எதை அடைவதற்கு ஆசை கொண்டு ஸாதகர்கள் ப்ரஹ்மச்சர்யத்தை அனுஷ்டிக்கிறார்களோ, அந்த இலக்கை உனக்கு சுருக்கமாக உரைக்கிறேன்: அது “ஓம்” என்பதே ஆகும்.

‘ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம் |
ஏதத்த்யேவாக்ஷரம் ஞாத்வா யோ எதிச்சதி தஸ்ய தத்’ || (கடோபநிஶத் 1.2.16)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(ஓம்) என்ற இந்த ஒரு எழுத்தே சகுணப்ரஹ்மம், இந்த எழுத்தே நிர்குண ப்ரஹ்மம். இந்த எழுத்தையே த்யானித்து ஒருவன் எதை விரும்புகிறானோ, அவனுக்கு அது அமைகிறது (கிடைக்கிறது).

இதி காடகே இவ்வாறு கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஏதத்வை சத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோங்கார’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.2) 
ப்ரஶ்ன உபநிஶத் கூறப்பட்டுள்ளது: ‘ஹே சத்யகாமனே!! இந்த ஓம்காரமே பர (நிர்குண) மற்றும் அபர (ஸகுண) ப்ரஹ்மமாகும்’.

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ய: புனரேதம் த்ரிமாத்ரேனோமித்யேதேனைவாக்ஷரேன பரம் புருஶமபித்யாயீத’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.5)
எவரொருவர் மூன்று மாத்திரை அளவுள்ள இந்த ஓம் எனும் அக்ஷரத்தால் பரம புருஶனை த்யானிக்கின்றனரோ (அவர்கள் முக்தியை அடைகின்றனர்).

இதி ப்ரஶ்னோபநிஶதி இவ்வாறு  ப்ரஶ்னோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஒமிதி ப்ரஹ்ம | ஒமிதீதம் ஸர்வம் |’ (தைத்ரீய உபநிஶத் 1.8)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்ற ப்ரணவமே ப்ரஹ்மமாகும். ஓம் என்ற ப்ரணவமே அனைத்துமாகும்’.

இதி யஜுர்வேதாரண்யகே இவ்வாறு யஜுர் வேத ஆரண்யகத்தில் (தைத்ரீய உபநிஶத்தில்) கூறப்பட்டுள்ளது.

'தத்யதா ஷங்குனா ஸர்வாணி பர்னாணி ஸந்த்ருண்ணான் யேவமோங்காரேன ஸர்வா வாக் ஸந்த்ருணா | ஓம்கார ஏவேதம் ஸர்வம்' (சாந்தோக்ய உபநிஶத் 2.23.3)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘எவ்வாறு இலைகள் அதன் மத்தியில் உள்ள காம்பால் தாங்கப்படுகின்றனவோ, அவ்வாறே அனைத்து ஒலிகளும், வார்த்தைகளும் தாங்கப்படுகின்றன. எனவே, இங்கு அனைத்தும் ஓம்காரமே!!’

இதி சாந்தோக்யே இவ்வாறு சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)
மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது 'ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக