26. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு: |
ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: ||
இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
236. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
241. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):
236. ஓம் ஸுப்ரஸாதாய நம:
ஶோபன: ப்ரஸாதோ யஸ்ய அபகாரவதாமபி ஶிஶுபாலாதீனாம் மோக்ஷப்ரதாத்ருத்வாத் இதி ஸுப்ரஸாத:
பகவானின் கருணை மிகவும் மங்களகரமானது. அவரை அவமதித்து, தவறிழைத்த சிசுபாலன் முதலானோருக்கும் முக்தியை அளிக்கக்கூடியது. எனவே, அவர் 'ஸுப்ரஸாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
237. ஓம் ப்ரஸன்னாத்மனே நம:
ரஜஸ்தமோப்யாம் அகலுஶித ஆத்மா அந்த:கரணமஸ்யேதி ப்ரஸன்னாத்மா
பகவானின் ஆன்மாவும், மனதும், உருவமும் சுத்தஸத்வ வடிவானது. ரஜோ, தமோ குணங்களால் மாசடையாதது. எனவே அவர் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருணார்த்ர ஸ்வபாவத்வா ப்ரஸன்னாத்மா
கருணையே வடிவானவராக இருப்பதால் பகவான் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யத்வா ப்ரஸன்னஸ்வபாவத்வா ப்ரஸன்னாத்மா காருணிக இத்யர்த்த:
மிகவும் கருணையுள்ளவரானதால் பகவான் இயல்பாகவே மகிழ்ச்சியுடன் இருக்கிறார். எனவே, அவர் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவாப்தஸர்வகாமத்வாத்வா ப்ரஸன்னாத்மா
பகவான் தனது அனைத்து ஆசைகளும் (எண்ணங்களும்) ஈடேறப்பெற்றவர். அதனால் அவரது மனம் என்றுமே மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் (ப்ரஸன்னமாக) இருக்கும். எனவே, அவர் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
238. ஓம் விஶ்வத்ருஶே நம:
விஶ்வம் த்ருஶ்ணோதீதி விஶ்வத்ருக் ஞித்ருஶா ப்ராகல்பே
இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கிக் காப்பதால் பகவான் 'விஶ்வத்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
239. ஓம் விஶ்வபுஜே நம:
விஶ்வம் புங்க்தே புனக்தி பாலயதீதி வா விஶ்வபுக்
பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் உண்கிறார். மற்றெல்லா காலங்களிலும் அதை காக்கிறார். எனவே, பகவான் 'விஶ்வபுக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
240. ஓம் விபவே நம:
ஹிரண்யகர்ப்பாதிரூபேண விவிதம் பவதீதி விபு:
'ஹிரண்யகர்ப்பர்' முதலான பல்வேறு உருவங்களை ஏற்பதால் பகவான் 'விபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
241. ஓம் ஸத்கர்த்ரே நம:
ஸத்கரோதி பூஜயதீதி ஸத்கர்த்தா
பகவான் நல்லோரை வணங்குகிறார். எனவே, அவர் 'ஸத்கர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
242. ஓம் ஸத்க்ருதாய நம:
பூஜிதைரபி பூஜித: ஸத்க்ருத:
பிறரால் வணங்கப்படும் தேவர்கள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் போன்றவர்களும் பகவானை வணங்கி, வழிபடுகின்றனர். எனவே, பகவான் 'ஸத்க்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
243. ஓம் ஸாதவே நம:
ந்யாய ப்ரவ்ருத்ததயா ஸாது:
அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸாதயதீதி வா ஸாத்யபேதான் ஸாது:
பரப்ரஹ்மம் எனும் ஒரே வஸ்துவால் (பொருளால்) ஆன இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறு பேதங்களை உருவாக்குவதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
உபதானாத் ஸாத்யமாத்ரஸாதகோ வா ஸாது:
அல்லது, இந்தப் ப்ரபஞ்சத்தில் பலவாகத் தெரியும் அனைத்துப் பொருட்களுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
244. ஓம் ஜான்ஹவே நம:
ஜனான் ஸம்ஹாரஸமயே அபஹ்னுதே அபனயதீதி ஜஹ்னு:
பகவான், ப்ரளய காலத்தில் (இந்தப் ப்ரபஞ்சம் அழியும் காலத்தில்) அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள்ளே லயமடையச் செய்கிறார். எனவே, அவர் 'ஜஹ்னு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஜஹாத்யவிதுஶோ (ஜஹாதி அவிதுஶோ) பக்தான் நயதீதி பரம்பதமிதி வா ஜஹ்னு:
தன்னிடம் பக்தியில்லாத, ஞானமற்றோரை விடுத்து, தனது பக்தர்களை தன்னுடைய மேலான பரமபதத்திற்கு வழிநடத்திச் செல்வதால் பகவான் 'ஜஹ்னு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
245. ஓம் நாராயணாய நம:
நர ஆத்மா ததோ ஜாதான்யாகாஶாதீனி நாராணி கார்யாணி தானி அயம் காரணாத்மனா வ்யாப்னோதி அதஸ்ச தான்யயனமஸ்யேதி நாராயண:
நரம் என்னும் ஆத்மாக்களின் பிறப்பிடமாக இருப்பதால் ஆகாயம் முதலானவை 'நாரங்கள்' என்று அழைக்கப்படுகிறது. அந்த நாரங்களை, அவற்றின் காரணமாக இருப்பதால், பகவான் பரவியிருக்கிறார் (வ்யாபித்திருக்கிறார்). எனவே, அவர் அவற்றின் இருப்பிடமாகிறார் (அயனம்). எனவே, பகவான் 'நாரயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஶ்யதே ஶ்ரூயதேபி வா |
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்த நாராயண: ஸ்தித:' || (நாராயண உபநிஶத் 13.1-2)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாம் பார்த்தும், கேட்டும் அறிந்து கொள்ளும் (எல்லையற்ற) இந்தப் ப்ரபஞ்சத்தை உள்ளும், புறமுமாக பகவான் நாராயணர் பரவியுள்ளார் (வ்யாபித்துள்ளார்).
இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் 'நாரயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).
நரஜ்ஜாதானி தத்வானி நாராணீதி ததோ விது: |
தான்யேவ சாயன தஸ்ய தேன நாராயண: ஸ்ம்ருத: || (மஹாபாரதம்)
மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: நரனிலிருந்தே அனைத்து தத்துவங்களும் உருவாகின்றன. எனவே, அவை 'நாரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாரங்களைத் தனது முதல் இருப்பிடமாகக் (அயனமாகக்) கொண்டுள்ளதால், பகவான் 'நாராயணன்' என்று அழைக்கப்படுகிறார்.
இதி மஹாபாரதே | இந்த மஹாபாரத ஸ்லோகத்தின் படி (பகவான் 'நாரயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).
நாராணாம் ஜீவானாம் அயனத்வாத் ப்ரளய இதி வா நாராயண:
நாரங்கள் என்றழைக்கப்படும் ஜீவராசிகள் அனைத்தும் ப்ரளய காலத்தில் பகவானுக்குள்ளே சென்று ஒடுங்குகின்றன. இவ்வாறு, நாரங்களின் இலக்காக (அயனமாக) இருப்பதால், பகவான் 'நாராயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'நாராணாமயன யஸ்மாத்தஸ்மான் நாராயண: ஸ்ம்ருத:' (ப்ரஹ்மவைவர்த்த புராணம்)
ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது: நாரங்களின் இருப்பிடமாதலால் பகவான் 'நாராயணன்' என்று அழைக்கப்படுகிறார்..
இதி ப்ரஹ்மவைவர்த்தாத் | இவ்வாறு ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூனவ: |
தா யதஸ்யாயனம் பூர்வம் தேன நாராயண: ஸ்ம்ருத: || (மனு ஸ்ம்ருதி 1.10)
மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: நரனான பகவானிடமிருந்து உருவானதால் தண்ணீருக்கு 'நாரம்' என்று பெயர். அந்த நாரத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளதால், பகவான் 'நாராயணன்' என்று அழைக்கப்படுகிறார்.
246. ஓம் நராய நம:
நயதீதி நர: ப்ரோக்த: பரமாத்மா ஸனாதன: |
இதி வ்யாஸ வசனம் |
அனைவரையும் (நற்பேற்றுக்கு) வழிநடத்தி அழைத்துச் செல்வதால், என்றும் உள்ள அந்த பரமாத்மா 'நரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். ஸ்ரீவ்யாஸரின் இந்தக் கூற்றின்படி பகவான் 'நரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக