புதன், மார்ச் 28, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 18

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு பீஷ்மாச்சார்யார் விடையளிக்கிறார். அதற்கு உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார். அவற்றில் மேலும் சிலவற்றை இன்று காண்போம்.


யதாக்னிருத்ததஷிக: கக்ஷம் தஹதி சானில: |
ததா சித்தஸ்திதோ விஶ்ணுர் யோகிநாம் சர்வகில்பிஷம் ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.7.74)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு காற்றுடன் கூடிய நெருப்பானது உயர உயர எழுந்து வைக்கோல் பொதிகளை எரித்து விடுமோ, அவ்வாறே பகவான் ஸ்ரீ விஶ்ணு யோகிகளின் ஹ்ருதயத்தில் வீற்றிருந்து அவர்களின் அனைத்து தோஷங்களையும் அழிக்கிறார்.

ஏகஸ்மின்னப்யதிக்ராந்தே முஹூர்த்தே த்யானவர்ஜிதே |
தச்யுபிர்முஷிதேனேவ யுக்தமாகிரந்திதும் ப்ருஷாம்||
திருடர்களால் நமது பொருட்கள் திருடப்பட்டால் எவ்வாறு துக்கப்பட்டு அழுவோமோ, அவ்வாறு (பகவான் ஸ்ரீ ஹரியை) த்யானிக்காமல் ஒரு முஹூர்த்தம் நேரம் கழிந்தாலும் அழுது வருந்த வேண்டும்.

ஜனார்தனம் பூதபதிம் ஜகத்குரும் ஸ்மரன் மனுஷ்ய: ஸததம் மஹாமுனே |
து:க்கானி ஸர்வான்யபஹந்தி ஸாதயத்யசேஷகார்யாணி ச யான்னபீப்ஸதே ||
ஹே மஹாமுனியே!! அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரபுவும், அனைத்துலகத்திற்கும் குருவானவருமான பகவான் ஸ்ரீ ஜனார்தனனை நித்தம் த்யானிப்பதன் மூலம் ஒரு மனிதர்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடுவதோடல்லாமல், அவரவர்கள் ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

ஏவமேகாக்ரசித்த: ஸன் ஸம்ஸ்மரன் மதுசூதனம் |
ஜன்மம்ருத்யுஜராக்ராஹம் ஸம்ஸாராப்திம் தரிஷ்யதி ||
இவ்வாறு ஒருமித்த மனதோடு பகவான் ஸ்ரீ மதுசூதனனை த்யானிப்பதால் ஒரு மனிதன், பிறப்பு, இறப்பு மற்றும் மூப்பு போன்ற முதலைகள் நிறைந்திருக்கும் ஸம்ஸாரம் எனும் பெருங்கடலைத் தாண்டுகிறான்.

கலாவத்ராபி தோஷாட்யே விஷயாஸக்தமானஸ: |
க்ருத்வாபி ஸகலம் பாபம் கோவிந்தம் ஸம்ஸ்மரண் சுசி: ||
இந்த தோஷங்கள் நிறைந்த கலியுகத்தில், ஒரு மனிதன், விஷயசுகத்தில் மனதை லயிக்கவிட்டு பாவங்களை புரிந்திருந்தாலும், பகவான் ஸ்ரீ கோவிந்தனை த்யானிப்பத்தின் மூலம் தூய்மை அடைகிறான்.

வாசுதேவே மனோ யஸ்ய ஜபஹோமார்ச்சனாதிஷு |
தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ரவாதிகம் ஃபலம் ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.6.41)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே மைத்ரேயா!! எவரொருவரின் மனது ஜபம், ஹோமம் மற்றும் அர்ச்சனை ஆகிய செயல்களை செய்யும் பொழுது பகவான் ஸ்ரீ வாசுதேவரிடம் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு (பகவானை த்யானிப்பதற்கு இடையூறாக இருக்குமென்பதால்) தேவேந்திர பதவிகூட இடராகவே தோன்றும்.

லோகத்ர்யாதிபதிமப்ரதிமப்ரபாவமீஷத் ப்ரணம்ய சிரஸா பிரபவிஶ்ணுமீஷம் |
ஜன்மாந்தரப்ரளயகல்பஸஹஸ்ரஜாதமாஷு ப்ரணாஷமுபயாதி நரஸ்ய பாபம் ||
ஆயிரம் மஹாகல்பங்களிலும், பிரளயங்களிலும், ஜன்ம ஜன்மங்களிலும் செய்த பாவங்கள் கூட, மூவுலகின் ஸ்வாமியும், தன்னிகரில்லா சக்திபடைத்தவரும், அனைவரையும் ஆள்பவரான பகவான் ஸ்ரீ விஶ்ணுவை சிறிது நேரம் தலை வணங்குவதாலேயே அழிந்து விடுகின்றன.

ஏகோSபி க்ருஷ்ணஸ்ய க்ருத: ப்ரணாமோ தசாஷ்வமேதாவப்ருதேன துல்ய: |
தசாஷ்வமேதி புனரேதி ஜன்ம கிருஷ்ணப்ரணாமி ந புனர்பவாய ||
(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.90)
மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு முறை வணங்குதல், பத்து அஸ்வமேத யாகங்கள் புரிந்து, முடிவில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பதற்கு சமமானது. அதிலும் பத்து அஸ்வமேத யாகங்களில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பவனுக்குக்கூட மறுஜென்மம் உண்டு; ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர்களுக்கு மறுஜென்மம் இல்லை.

அதஸீபுஷ்ப ஶங்காஷம் பீதவாஸஸம் அச்யுதம் |
யே நமஸ்யந்தி கோவிந்தம் ந தேஷாம் வித்யதே பயம் ||
(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.91)
மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: ஆளிபூவைப்போல (கருநீல) நிறம்படைத்தவரும், மஞ்சள்வர்ண பட்டாடை உடுத்தியிருப்பவருமான பகவான் ஸ்ரீ அச்யுதன் கோவிந்தனை யார் வணங்குகிறார்களோ, அவர்களுக்கு எந்த வித பயமும் இல்லை.

ஷாட்யேனாபி நமஸ்கார: ப்ரயுக்தஸ்சக்ரபாணயே |
ஸம்ஸாரஸ்தூலபந்தானாமுத்வேஜனகரோ ஹி ஸ: ||
சக்ரபாணியான பகவான் ஸ்ரீ விஶ்ணுவிற்கு (மனதில் பக்தியின்றி) தவறான எண்ணத்தோடும் கர்வத்தோடும், செய்யப்படும் நமஸ்காரங்கள் கூட ஸம்ஸாரம் என்னும் மரத்தின் வேரை வெட்டிவிடும்.

இத்யாதிஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராண வசனேப்ய: |
(இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண வசனேப்ய:)
இப்படிப்பட்ட வேத, ஸ்ம்ருதி, இதிஹாஸ, புராண வாக்கியங்களிலிருந்து (பகவான் ஸ்ரீ விஶ்ணுவும், அவரது நாம ஸங்கீர்த்தனமும் புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவர்  /புனிதம் என்பது நிரூபணமாகிறது).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக