சனி, மார்ச் 03, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 1



ஸ்ரீ குருப்யோ நம:
குரு சரணாரவிந்தாப்யாம் நம: |
அஸ்மத் குரவே ஸ்ரீஶங்கராசார்ய பர்யாய நம: ||

ஸதாஶிவ ஸமாரம்பாம் ஶங்கராசார்ய மத்யமாம் |
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||

ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத்பாத ஶங்கரம் லோகஶங்கரம் ||

கனகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீவீரராகவ பரப்ரஹ்மணே நம:



ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாமம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்களால் பக்தியுடன் ஓதப்படுகிறது. இந்த துதிக்கு (ஸ்தோத்திரத்திற்கு) பலர் விளக்கவுரை (பாஶ்யம்) எழுதியுள்ளனர். அதிலே முதலில் முழுமையான விளக்கவுரை எழுதியவர் ஜகத்குரு ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர். அவரது வடமொழி (ஸமஸ்க்ருத) உரையை மூலத்துடனும், ஹிந்தி மொழிபெயர்ப்புடனும்கீதா பிரஸ்கோரக்பூர்வெளியிட்டுள்ளனர். அந்த வெளியீட்டின் எளிய தமிழாக்கமே இந்த முயற்சி. இதில் வரும் பகவத் கீதை ஸ்லோகங்களுக்கு பாரதியாரின் பகவத் கீதை தமிழாக்கத்திலிருந்து மொழிபெயர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ க்ருஶ்ணார்ப்பணம்.

குறிப்பு: ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாமம் மஹாபாரத்தின் ஒரு பகுதியாகும். பத்தாம் நாள் யுத்தத்தின் முடிவில் அம்புப்படுக்கையில் வீழ்ந்து கிடக்கும் பிதாமஹர் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் கேட்ட ஆறு கேள்விகளுக்கு, பீஷ்மர் உரைத்த பதிலே ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாமம் ஆகும். மஹாபாரதம் முழுவதையும் முதன் முதலில் வேதவியாசரின் சீடரான வைசம்பாயனர், அர்ஜுனனின் கொள்ளுப்பேரனும், அபிமன்யுவின் பேரனுமான ஜனமேஜயன் என்னும் அரசனின் வேள்வியில் எடுத்துரைத்தார். எனவே, ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாமமும் "ஸ்ரீ வைசம்பாயன உவாச" என்றே தொடங்குகிறது. முதலில் ஆச்சார்யாள் இறை வணக்கம் மற்றும் வ்யாஸ வணக்கத்துடன் தனது உரையை தொடங்குகிறார்.

இறை வணக்கம்:
ஸச்சிதானந்த ரூபாய க்ருஶ்ணாயா()க்லிஶ்ட காரிணே |
நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே ||
என்றும் உளதாய், அறிவும், இன்பமும் நிறைந்த வடிவுடையவரே! அனைத்துக் காரியங்களையும் சோர்வின்றி (களைப்பின்றி) பூர்த்தி செய்யவல்லவரே! வேதங்களின் முடிவான கூற்றுக்களால் அறியப் படுபவரே! எமக்கு குருவாய் இருந்து ஞானத்தை அருள்பவரே! ஞானம் முதிர்ந்தோரின் தெளிந்த புத்தியை சாட்சியாய் இருந்து அறிபவரே! ஸ்ரீக்ருஶ்ணரே! உம்மை வணங்குகிறேன்!!!

குரு (வியாஸ) வணக்கம்:
க்ருஶ்ண த்வைபாயனம் வ்யாஸம் ஸர்வலோக ஹிதே ரதம்|
வேதாப்ஜ பாஸ்கரம் வந்தே ஷமாதி நிலையம் முனிம்||
அனைத்து உலகிற்கும் (அனைத்துலக மக்களுக்கும்) நன்மையையே வேண்டுபவரே! வேதமெனும் தாமரைக்கு (அதை மலர்விக்கும்) கதிரவன் போன்றவரே! பற்றற்று தவநெறியில் நிலைத்திருப்பவரே! க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாஸரே! உம்மை வணங்குகிறேன்!!

ஸஹஸ்ரநாமம் மற்றும் அதன் விளக்கவுரையின் பலன்:
ஸஹஸ்ர மூர்த்தே: புருஶோத்தமஸ்ய
ஸஹஸ்ர நேத்ரானன பாத பாஹோ:|
ஸஹஸ்ர நாம்னாம் ஸ்தவனம் ப்ரஶஸ்தம்
நிருச்யதே ஜன்ம ஜராதி ஷாந்த்யை||
ஆயிரக்கணக்கான முகங்களும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான கை கால்களும் ஆயிரக்கணக்கான உருவங்களும் கொண்ட புருஷோத்தமனான பகவானின் ஆயிரம் திருநாமங்கள் கொண்ட, புகழ்வாய்ந்த, (ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாமமெனும்) துதிக்கு, பிறப்பு மற்றும் மூப்பென்னும் பிணிகளைப் போக்க, இந்த விளக்கவுரை (பாஷ்யம்) எழுதப்படுகிறது.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் தமது விளக்க உரையை "வைசம்பாயன உவாச" என்ற ஸ்லோகத்திலிருந்தே தொடங்கியுள்ளார். நமது அன்றாட பாராயணத்தில் உள்ள, "ஶுக்லாம்பரதரம்..." முதலான ஸ்லோகங்களுக்கு எளிய தமிழுரைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.

1 கருத்து:

  1. I was looking for detailed explanation of Sri Vishnu Sahasranamam and i found this site, while searching, happy to have found this, and i am going through from the beginning. Explanations are well written, you should publish them as a book. thanks vish

    பதிலளிநீக்கு