வெள்ளி, மார்ச் 30, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 20

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 


"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||"

என்று கூறுகிறார்.

இதில் முதல் பதத்திற்கு (பவித்ராணாம் பவித்ரம் ய:) உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டியதை நேற்று வரை பார்த்தோம். இப்பொழுது அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" தொடங்கி மீதமுள்ள பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கிறார்.


நனு கதம் ஏகோ தேவ: ஜீவ பரயோர்பேதாத்?
கேள்வி: ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபட்டவர்கள்; அவ்வாறிருக்க, கடவுள் ஒருவரே என்று எவ்வாறு கூறமுடியும்?

ந பதில்:அப்படி கூற இயலாது.

(ஆதி சங்கரர் தானே இந்த கேள்வியைக் கேட்டு, இதன் விடையாக தனது அத்வைத கொள்கையின் சாரத்தை கூறுகிறார். அத்வைதமாவது ‘ப்ரஹ்ம ஸத்யம், ஜகன் மித்யா, ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:’ – ‘ப்ரஹ்மம் ஒன்றே உண்மை. இவ்வுலகம் மற்றும் அதில் காணப்படும் அனைத்தும் கானல் நீர் போல் நிலையற்றது. ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒன்றே. அந்த ப்ரஹ்மத்தை தவிர இரண்டாவது தத்துவமே இல்லை என்பதாகும்).


‘தத்ஸ்ருஷ்டா ததேவானுப்ராவிஷத்’ (தைத்ரிய உபநிஶத் 2.6)
தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: தானே அவற்றை படைத்து, அதனுள் பிரவேசித்தார்
‘ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய:’ (ப்ரஹதாரண்ய உபநிஶத் 1.4.7)
ப்ரஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘அவர் இந்த உடலில் நகம் முதற்கொண்டு (தலை வரை) எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்’

இத்யாதி ஸ்ருதிப்யோSவிக்ருதஸ்ய பரஸ்ய புத்திதத்வ்ருத்திசாக்ஷித்வேன பிரவேஷஷ்ராவணாதபேத: |
இந்த ஸ்ருதி வாக்கியங்கள் ‘மாறுதலற்ற அந்த பரமாத்மாவே புத்தி மற்றும் அதன் விரிவான இந்த சரீரத்தில் சாக்ஷி ரூபமாய் உள்நுழைந்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்’ என்று கூறுகின்றன. எனவே, ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேற்றுமை கிடையாது (இரண்டும் ஒன்றே).

ப்ரவிஷ்டானாமிதரேதரபேதாத் பராத்மைகத்வம் கதமிதி சேத்?
கேள்வி: உள்நுழைந்தார் என்றால் (உள்ளே இருப்பதான) ஜீவத்மாவும், (சாட்சியாக உள்நுழைந்த) பரமாத்மாவும் ஒன்று என்று எவ்வாறு கூறுவது?

பதில்:அப்படி அல்ல

‘ஏகோ தேவ: பஹுதா சந்நிவிஷ்ட:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.14)
தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: ஒருவரே கடவுள்; அவரே பலவாறாக நிலைபெற்றிருக்கிறார்.
‘ஏக: சன் பஹுதா விசார:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.11)
தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: அந்த ஒருவரே பலவாறாக எண்ணப்படுகிறார்.
‘த்வமேகோSஸி பஹுனனுப்ரவிஷ்ட:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.14)
தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: தாங்கள் ஒருவரே பலவற்றிலும் உள்நுழைந்திருக்கிறீர்

இத்யேகஸ்யைவ பஹுதா பிரவேஷஷ்ரவணாத் பிரவிஷ்டானாம் ச ந பேத: |
இந்த ஸ்ருதி வாக்கியங்களில் ஒருவரே பலவாறாக மாறி, பலவற்றின் உள்நுழைந்தார் என்று கூறப்படுகின்றது. எனவே, உள்நுழைந்த பரமாத்மாவிற்கும், உள்ளே உறையும் ஜீவாத்மாவிற்கும் வேறுபாடுகள் கிடையாது.

‘ஹிரண்யகர்ப்ப:’ (ரிக் வேதம் 10.121.1) இத்யஷ்டௌ மந்த்ரா: |
ரிக் வேதத்தில் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று தொடங்கி எட்டு மந்திரங்கள் உள்ளன.

‘கஸ்மை தேவாய’ (தைத்ரீயகம்)
இத்யத்ர ஏகாரலோபேநைகதைவதபிரதிபாதகஸ்தைத்ரீயகே |
‘கஸ்மை தேவாய’ என தொடங்கும் தைத்திரீயக ஸ்ருதியிலும் (இந்த வாக்கியத்தின்) தொடக்கத்தில் ஏகாரம் மறைந்து இருக்கிறது (அதாவது அந்த ஸ்ருதியில் கஸ்மை என்பதற்கு பதில் ஏகஸ்மை என்று பொருள் கொள்ள வேண்டும்). எனவே, இந்த மந்திரமும் ஒன்றே தெய்வம் என்றே கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக