செவ்வாய், நவம்பர் 13, 2012

தீபாவளித் திருநாள் !!!

அனைவருக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!! இந்த நன்னாளில் நம் அனைவருக்கும் தூய மனமும், ஆரோக்யமான உடலும், குடும்பத்தில் குதூகலமும் அமைய பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ண பகவானை வேண்டி கொள்கிறேன்!!!

தீபாவளியின் கதை நாம் அனைவரும் அறிந்ததே!! பகவான் வராஹ அவதாரம் எடுத்த பொழுது அவரது ஸ்பரிசத்தால் பூமாதேவிக்கு பிறந்தவன் நரகாசுரன். தனது அசுர நண்பர்கள் மந்திரிகளுடன் ப்ராக்ஜ்யோதிஷ புரத்தை (இன்றைய அஸாம் மாநிலம்) ஆண்டுவந்தான். தவம் செய்து தனது தாய் மூலமாக மட்டுமே மரணம் என்ற வரத்தை பெற்று, அதனால் கர்வம் கொண்டு தேவர்களின் தாயான அதிதியின் குண்டலங்களை கவர்ந்து விட்டான். இந்திரன் கிருஷ்ணரிடம் சரணடைய, பகவான் சத்யபாமையுடன் கருட வாஹனம் ஏறி ப்ராக்ஜ்யோதிஷ புரத்தை அடைந்தார். அனைவரையும் வென்ற  பகவான் நரகாசுரனுடன் போர் புரியும்போது மயங்குவது போல் நடிக்க, பூமிதேவியின் அவதாரமான சத்யபாமா கோபம் கொண்டு நரகாசுரனை தாக்கி அழிக்கிறாள். அவன் இறக்கும் தருவாயில் தனது இந்த மரண நாளை மக்கள் இனிய நாளாக கொண்டாட வேண்டும் என்று வரம் பெற்றான். அந்த நாளை நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம்.

இந்த புராணத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல நல்ல கருத்துக்கள் உண்டு:

1. நரகாசுரன் பெற்ற வரத்தை நினைக்கும் நாம், அவனது தாய் அவனை வதம் செய்தாள் என்று மட்டும் நினைக்கிறோம். உண்மையில் அவனது தந்தை பகவான் விஷ்ணுவே!! நமது முதல் பாடம், தவறு செய்தால் தனது பிள்ளை என்று கூட பகவான் பார்ப்பதில்லை. செய்த தவறுக்கு தண்டனை நிச்சயம். கிருஷ்ணர் என்றால் ஏதோ ராஸ லீலையை செய்தவர் என்று மட்டும் நினைப்பவர்கள், சற்று இதையும் நினைத்து பார்க்கவேண்டும்.

2. பகவானின் மாயைக்கு எவரும் விதிவிலக்கல்ல - பூமாதேவி உட்பட. எனவே தான் கீதையில் கண்ணன் கூறுகிறார் "தைவி ஹ்யேஷா குண மயி மம  மாயா துரத்யயா " - எனது தெய்வீக மாயை கடற்தர்க்கரியது. ஆனால் தன்னை சரணடைந்தால் தான் அந்த மாயையை தாண்டுவிக்கிறான் இறைவன்.

3. தவமும், வரமும் மட்டுமே நம்மை காப்பாற்றிவிடாது. நல்ல ஒழுக்கமும் நற்செயலுமே நம்மை காக்கும்.

நமக்குள்ளேயும் நரகாசுரன் இருக்கிறான். நமது பாவ செயல்களும், தவறான எண்ணங்களுமே நமது நரகாசுரன். அந்த நரகாசுரன் நம்மை துன்புறுத்தாமல் இருக்க கடவுள் மட்டுமே நமக்கு துணை புரிவார். நமது இந்த நரகாசுரனை அறிவை மயக்கும் இருட்டாக உருவக படுத்திய நமது முன்னோர்கள் அவனை வெல்லும் இறை பக்தியை இருளை விரட்டும் விளக்காக உருவாக படுத்தினர். எனவே தீபாவளி என்றால் வெடி வெடித்தல், பலகாரம் சாப்பிடுதல் என்று மட்டும் எண்ணாமல், நமது உள்ளே இருக்கும் நரகாசுரனை அழிக்க, பக்தி என்னும் விளக்கையும் நமக்குள்ளே ஏற்றுவோம். இறைவனின் அருள் பெறுவோம்!!

பின்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் இந்த கால கட்டத்தில் தீபம் ஏற்றி திருவிழா கொண்டாடுவது நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கிறது. அமெரிக்காவில் ஒரு காலத்தில் பழங்குடியினரால் கொண்டாடப்பட்ட பண்டிகையை இன்று ஹாலோவீன் என்ற பெயரில் விளக்கு ஏற்றி, பேய்களை (அசுரர்களை??) விரட்டும் விழாவாக அக்டோபர் மாதத்தில் கொண்டாடுகிறார்கள். நமது சனாதன தர்மம் ஒரு காலத்தில் உலகம் முழுதும் பரவி இருந்திருக்கலாம்!!!




திங்கள், செப்டம்பர் 10, 2012

நாம ராமாயணம் உத்தர காண்டம்

உத்தர காண்டம்

முனிவர்கள் குழுவினை வணங்கிய ராம்
இராவணன் சரிதம் கேட்டவர் ராம்
சீதையின் அணைப்பினில் மகிழ்ந்தவர் ராம்
நீதி வழுவா அரசாண்ட ராம்
சீதையை கானகம் அனுப்பிய ராம்
(சதருக்னனால்) லவனாசுரவதை செய்வித்த ராம்
வான்சென்ற சம்புகன் துதி செய்த ராம்
லவகுசரை கண்டு மனமகிழ் ராம்
அஸ்வமேத வேள்வி செய்தவர் ராம்
(காலனால்) தன்பதம் திரும்பிட வேண்டிய ராம்
அயோத்தி மக்களை முக்திசெய்த ராம்
பிரமன் முதலியோர் போற்றிய ராம்
(தன்னுடைய) இயற்கையான ஒளிஉரு அடைந்தவர் ராம்
சம்ஸார தளைகளை தகர்த்திடும் ராம்
தர்மத்தை நிலையாய்  நிறுவிய ராம்
பக்திசெய்யும் அடியார்க்கு முக்திதரும் ராம்
ஆண்ட சராசரத்தை காத்திடும் ராம்
அணைத்து இன்னலையும் தீர்த்திடும் ராம்
வைகுண்டத்தில் நிலைபெற்ற ராம்
ஆரா இன்பத்தை அளித்திடும் ராம்

ராம ராம ஜெய ராஜாராம் 
ராம ராம ஜெய சீதாராம் !!!




நாம ராமாயணம் யுத்த காண்டம்

யுத்த காண்டம் 

இராவண வதத்திற்கு புறப்பட்ட ராம்
வானரர் சூழ வலம் வந்த ராம்
கடலினை வழிவிட செய்தவர் ராம்
வீடணர்கபயம் அளித்தவர் ராம்
கற்களில் சேது அமைத்தவர் ராம்
கும்பகர்ணன் தலை துண்டித்த ராம்
ராக்ஷஸ சேனையை அழித்தவர் ராம்
அஹிராவணனை வதம் செய்த ராம்
பத்துத்தலை இராவணனை கொன்றவர் ராம்
அயன் அரன் தேவர்கள் வணங்கிய ராம்
வானில் தயரதரை கண்டவர் ராம்
சீதையை கண்டு மகிழ்ந்த ராம்
வீடணனை அரசனாய் நியமித்த ராம்
புஷ்பக விமானத்தில் ஏறிய  ராம்
பரத்வாஜ முனிவர் வணங்கிய ராம்
பரதன் உள்ளத்தை மகிழ்வித்த ராம்
சாகேத புரிக்கு அணிகலன் ராம்
அனைவரின் ஆசியை பெற்றவர் ராம்
மணிநிறை அரியணை  அமர்ந்தவர் ராம்
அழகிய மணிமுடி அணிந்தவர் ராம்
புவிமிசைஅரசரில் உயர்ந்தவர் ராம்
வீடணர்க்கு ரங்கனை அளித்தவர் ராம்
வானர குலத்திற்கு அருளிய ராம்
அனைத்து உயிரையும் காத்தவர் ராம்
உலகம் அனைத்தையும் ஆண்டவர் ராம்

ராம ராம ஜெய ராஜாராம்  
ராம ராம ஜெய சீதாராம் !!!




திங்கள், ஆகஸ்ட் 27, 2012

நாம ராமாயணம் சுந்தர காண்டம்

சுந்தர காண்டம்

ஹனுமான் அனுதினம் துதிசெய்த ராம்
(ஹனுமானின்) பாதையின் தடங்கலை விலக்கிய  ராம்
சீதையின் உயிரை காத்தவர் ராம்
கொடிய இராவணனை தூற்றிய ராம்
அடியவன் அனுமனை போற்றிய ராம்
சீதைசொன்ன காக்கைகதை கேட்டவர் ராம்
சூடாமணியை கண்டவர் ராம்
ஹனுமானின் சொல்லினால் தேறிய  ராம்

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம் !!!

நாம ராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம்

கிஷ்கிந்தா காண்டம் 


ஹனுமன் சேவையை ஏற்றவர் ராம் 
சுக்ரீவன்  விரும்பியதை அளித்தவர் ராம் 
கர்வம் கொண்ட வாலியை வீழ்த்திய ராம் 
வானர தூதரை அனுப்பிய ராம் 
இலக்குவன் துணையோடு இருந்தவர் ராம் 

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதா ராம் !!!

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

நாம ராமாயணம் - ஆரண்ய காண்டம்

ஆரண்ய காண்டம்

தண்டக வாசிகளை தூய்மை செய்தவர் ராம் 
கொடிய விராதனை வதைத்தவர் ராம் 
சரபங்க சுதீக்ஷ்ணர் தொழுதிட்ட ராம் 
அகத்தியர் அருளை பெற்றவர் ராம் 
கழுகின் அரசர் வணங்கிய ராம் 
பஞ்சவடியினில் வசித்தவர் ராம் 
சூர்பனகையை வருத்திய ராம் 
கரதூஷனரை கொன்றவர் ராம் 
சீதைக்கு மானை தேடிச்சென்ற ராம் 
மாரீசனை அம்பால் கொன்றவர் ராம் 
சீதையை காணாது தேடிய ராம் 
ஜடாயு மோக்ஷம் அருளிய ராம் 
சபரி தந்த கனியுண்ட ராம் 
கபந்தனின் தோள்களை துணித்தவர் ராம்!!

ராம ராம ஜெய ராஜாராம் 
ராம ராம ஜெய சீதாராம் !!!


புதன், ஜூன் 20, 2012

நாம ராமாயணம் - அயோத்யா காண்டம்

அயோத்யா காண்டம்

எண்ணற்ற குணங்களின் உறைவிடம் ராம்
பூமியின் திருமகள் மனங்கவர் ராம்
குளிர்மதி திருமுகம் உடையவர் ராம்
தந்தையின் சொல்கேட்டு வனம்சென்ற ராம்
குஹனை தோழனாய் கொண்டவர் ராம்
(குஹனால்) திருவடி கழுவ பெற்றவர் ராம்
பாரத்வாஜருக்கின்பம் அளித்திட்ட ராம்
சித்ரகூட மலையில் வசித்தவர் ராம்
தயரதர் அனுதினம் நினைத்திட்ட ராம்
பரதனும் வேண்டி வணங்கிய ராம்
தந்தைக்கு ஈமக்கடன் செய்திட்ட ராம்
பாதுகை பரதனுக்கு அளித்தவர் ராம் !!

ராம ராம ஜெய ராஜாராம் 
ராம ராம ஜெய சீதாராம்!!

வியாழன், ஜூன் 07, 2012

நாம இராமாயணம் - பால காண்டம்

ஹிந்துவாக, ஏன் மனிதனாக, பிறந்த அனைவரும் அறிய வேண்டிய பொக்கிஷம் ஸ்ரீமத் இராமாயணம். இராமாயண கதையை சுருக்கமாக சம்ஸ்க்ருத செய்யுள் வடிவில் கூறுவது நாம இராமாயணம். இதில் ஒவ்வொரு பதமும் 'ராம்' 'ராம்' என்று முடியும். இதை சொல்லும் பொழுதே பல முறை நாம் ராம நாமத்தை உச்சரித்து அதன் மூலம் பாவங்களை விலக பெறுவோம். அந்த இனிய நாம இராமாயணத்தை தமிழ்படுத்த நான் எடுத்த எளிய முயற்சியே இந்த பதிவு.

குறைகள், பிழைகள்  இருப்பின் பொறுத்து மன்னிக்க வேண்டுகிறேன்.

பால காண்டம் 
தூய பரபிரம்ம வடிவினர் ராம்
கால ரூபமாய் விளங்கிடும் ராம்
அரவினில் இனிதுயில் கொண்டவர் ராம்
பிரம்மாதி தேவரும் வணங்கிய ராம்
கதிரவன் குலத்தினில் உதித்தவர் ராம்
தசரதர் மகவாய் பிறந்தவர் ராம்
கோசலைக்கின்பம் வளர்த்தவர் ராம்
விச்வாமித்ரரின் ப்ரியமான ராம்
கொடிய தாடகையை வதைத்திட்ட ராம்
மாரீச அரக்கரை துரத்திய ராம்
கௌசிக வேள்வியை காத்தவர் ராம்
அகலிகை சாபம் போக்கிய ராம்
கௌதம முனிவர் பூஜித்த ராம்
தேவரும் முனிவரும் போற்றிய ராம்
கரையேற்றும் திருவடி உடையவர் ராம்
மிதிலை மக்களை மகிழ்வித்த ராம்
ஜனக மன்னரின் மனங்கவர் ராம்
பரம சிவ தனுசை முறித்தவர் ராம்
சீதையின் மாலையை அணிந்தவர் ராம்
திருக்கல்யாண வைபவம் கண்டவர் ராம்
பரசுராமரை வென்றவர் ராம்
அயோத்தி நாட்டை காத்தவர் ராம்

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்!!


ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

ஸ்ரீ ராம ஜெயம்...

ராம நாமம் தாரக மந்திரம். இறக்கும் தருவாயில் இருக்கும் உயிர்களையும் மீட்க வல்ல நாமம். காசியில் இறந்தால் முக்தி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏன்? காசியில் இறக்கும் ஜீவர்களின் காதில் அந்த காசி விஸ்வநாதரே ராம நாமத்தை ஓதி அவர்களை முக்தி மார்கத்தின் வழி அனுப்புகிறார். 

இன்று ராம நவமி (31-Mar-12). இந்த நன்னாளில் ராம நாம மகிமையை பற்றி மகான்கள், ஆச்சார்யர்கள் மற்றும் ஆன்றோர்கள் கூறியுள்ளதை படித்து மகிழ்வோம்.

"கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?" - திருவாய்மொழி 7.5.1 

கம்ப இராமாயணம் பால காண்டம் திருவவதாரப் படலம்:
கரா மலையத் தளர் கை கரி எய்த்தே 
'அரா அணையில் துயில்வோய்' என அந்நாள்
விராவி அளித்து அருள் மெய்ப் பொருளுக்கே
'இராமன்' என்று பெயர் ஈர்ந்தனன் அன்றே

கம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் வாலி வதை படலம்:
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, "இராமன்" என்னும்
செம்மை சேர் நாமம் ...

சங்கீத மூர்த்தி மகான் தியாகராஜர்:
நிதி சால சுகமா , ராமுனி சந்நிதி சேவ சுகமா?
நிஜமுக பல்கு மனஸா....

ஒ என் மனமே! உண்மையை கூறுவாய். சுகம் எதில் உள்ளது? பணத்திலும் நவநிதியிலுமா அல்லது இராமனின் சந்நிதியில் சேவை செய்வதிலா?

வால்மீகி ராமாயணம் பால காண்டம் 18வது  ஸர்கம் - இராமன் திருவவதாரம்
"தத: ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ
நக்ஷத்ரே அதிதி தைவத்யே ஸ்வ உச்ச சன்ஸ்தேஷு பஞ்சஷு 
க்ரஹெஷு கர்கடே லக்னே வாக்பதே இந்துனா ஸஹ 
ப்ரோத்யமானே ஜகன்நாதம் சர்வலோக நமஸ்க்ருதம் 
கௌசல்யா அஜனயத் இராமம் ஸர்வ லக்ஷன சம்யுதம்" 

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண க்ரமத்தில் வரும் ஸ்லோகம்:
ஈஸ்வர உவாச:
 ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே

வால்மீகி ராமாயணம் பால காண்டம் முதல் ஸர்கம்:
வால்மீகி மகரிஷி நாரதரை பார்த்து பல கேள்விகள் கேட்கிறார். யார் உத்தமன்? யார் உண்மை, தர்மத்தின் வழி நடந்தவர்? குணவான் யார்? நன்னடத்தை கொண்டவர் யார்? வித்வான் யார்? சாமர்த்தியசாலி யார்? கோபத்தை அடக்கியவர் யார்? பொறாமை இல்லாதவர் யார்? தேவர்களும் அஞ்சும்படி வீரம் கொண்டவர் யார்?... இந்த அணைத்து கேள்விகளுக்கும் நாரதர் அளிக்கும் விடை, "நீங்கள் கேட்கும் இந்த குணங்கள் அனைத்தும் ஒருவரிடம் இருப்பது என்பது துர்லபமானது. ஆனாலும் இவை அனைத்தையும் கொண்ட ஒருவரை பற்றி என் தந்தை பிரம்மாவிடம் இருந்து அறிந்துள்ளேன்"

இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை: ஸ்ருத:
நியத ஆத்மா மஹா வீர்யோ  த்யுதிமான் த்ரிதிமான் வஷி ||
புத்திமான் நீதிமான் வாங்க்மி ஸ்ரீமான் சத்ரு நிபர்ஹன:
விபுலாம்சோ மஹா பாஹு: கம்பு க்ரீவோ மஹா ஹனு: ||
மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூட ஜத்று அரிந்தம:
ஆஜானு பாஹு: சுஷிரா: சுலலாட: சுவிக்ரம ||
ஸம ஸம விபக்தாங்க: ஸ்நிக்த வர்ண பிரதாபவான்
பீன வக்ஷ விஷாலாக்ஷோ லக்ஷ்மீவான் சுப லக்ஷண: ||
தர்மஞ: சத்ய சந்த: ச ப்ரஜாநாம் ச ஹிதே ரத:
யஷஸ்வீ ஜ்ஞான சம்பன்ன: சுசி: வஷ்ய: சமாதிமான் ||
பிரஜாபதி ஸம: ஸ்ரீமான் தாதா ரிபு நிசூதன:
ரக்ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரி ரக்ஷிதா: ||
ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா
வேத வேதாங்க தத்வஞ்யோ தனுர் வேதே ச நிஷ்டித: ||
ஸர்வ சாஸ்த்ரார்த்த தத்வஞ்யோ ஸ்ம்ரிதிமான் பிரதிபானவான்
சர்வலோக ப்ரிய சாது: அதீனாத்மா விசக்ஷன ||
சர்வதா அபிகத: சத்பி: சமுத்ர இவ சிந்துபி:
ஆர்ய: சர்வசம: ச ஏவ சதைவ ப்ரிய தர்ஷன: ||
ஸ ச சர்வ குணோபேத: கௌசல்யா ஆனந்த வர்தன:
சமுத்ர இவ காம்பீர்யே தைர்யேன ஹிமவான் இவ||
விஷ்ணுனா சத்ருஷோ வீர்யே சோமவத் ப்ரிய தர்ஷன:
காலாக்னி சத்ருஷ: க்ரோதே க்ஷமயா ப்ரித்வீ ஸம: ||
தனதேன ஸம: த்யாகே சத்யே தர்ம இவாபர:
தம ஏவம் குண சம்பன்னம் ராமம் சத்ய பராக்கிரமம்||

இந்த ஸ்லோகங்கள் ஸ்ரீ ராமனின் கல்யாண குணங்களை வர்ணிக்கின்றன. இவற்றிற்கு பொருள் எழுதுவதற்கு கூட எனக்கு தகுதி இல்லை. எனவே அடியவர்களை தக்க குரு மூலமாக இவற்றின் பொருளை உணர்ந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். இவற்றுள் ஒரு குணமாவது நம்மிடம் தங்கும்படி அந்த ராமபிரான் இன்று அருள் புரியட்டும்!!!
 

 




ஞாயிறு, மார்ச் 11, 2012

நலம் தரும் சொல்....

நாராயணாவென்னும் நாமம்!! திருமங்கையாழ்வார் கண்டு கொண்டது!! இன்பம், செல்வம், புகழ், மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலான மோக்ஷத்தையும் தரவல்லது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே நாராயண நாமம் வருகிறது. இதற்கு வியாக்யானம் கூறும் ஸ்ரீ பராசர பட்டர் இது ஒரு குஹ்ய (ரகசிய) நாமம் என்று கூறுகிறார். இந்த நாமத்தின் அர்த்தத்தை குரு முகமாக அறிய வேண்டும் என்கிறார். அர்த்தம் தெரியாவிட்டாலும் உள்ளன்போடு செய்யும் நாம சங்கீர்த்தனம் நமக்கு உரிய பலனை அளிக்கும். அதற்கு அஜாமிளன் சரித்திரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.


ஸ்ரீமத் பாகவதத்தில் 6வது காண்டத்தில் அஜாமிளோபாக்யனம் கூறப்பட்டுள்ளது. அஜாமிளன் பிறப்பால் அந்தணர் குலத்தை சார்ந்தவர். ஒரு முறை யாக யக்ஞங்களுக்காக தர்ப்பை முதலியவைகளை சேகரிக்க வேண்டி அஜாமிளன் காட்டுக்கு சென்றார். அங்கே ஒரு தாசியை கண்டு அவளை மோகித்து, தன்னிலை மறந்து, அவளுடனேயே வாழ்கிறார். அந்த தாசிக்கும் அஜாமிளனுக்கும் 10 பிள்ளைகள் பிறக்கிறார்கள்.


முன் வினை பயனால் தனது கடைசி பிள்ளைக்கு நாராயணன் என்று பெயரிட்டார்.  கடைசி பிள்ளையின் மேல் பாசம் வைத்த அஜாமிளன் தன்னை அறியாமல் நாராயணா என்று பல முறை கூறுகிறார். கடைசி காலத்தில் அஜாமிளனின் உயிரை கொண்டு செல்ல யம தூதர்கள் வருகிறார்கள். யம தூதர்களை கண்ட பயத்தில் அஜாமிளன் தனது கடைசி மகனை நினைத்து நாராயணா என்று அழைக்கிறார். நாராயணா நாமத்தை சொன்னவுடன் வைகுண்டத்திலிருந்து பகவான் விஷ்ணுவின் தூதர்கள் வந்து யம தூதர்களை தடுத்தார்கள். யம தூதர்கள் அஜாமிளன் செய்த பாவத்தின் பட்டியலை எடுத்து கூறினார்கள். அதற்கு விஷ்ணு தூதர்கள் அனைத்து பாவங்களையும் ஸ்ரீ நாராயண நாம ஜபம் போக்கி விட்டதை எடுத்துரைத்து அஜாமிளன் உயிரை காக்கிறார்கள்.


இதை கேட்ட அஜாமிளன், பகவான் நாமத்தின் மகிமையை உணர்ந்து, தனது மீதி நாட்களை ஹரித்வாரில் பகவன் நாம சங்கீர்த்தனத்தில் கழித்து பிறகு வைகுண்ட பதவி அடைகிறார். விஷ்ணு தூதர்கள் தங்களை தடுத்த விஷயத்தை யமதர்மராஜனிடம் யம தூதர்கள் கூற, அதற்கு யமன் "பகவான் விஷ்ணுவிற்கு தான் கட்டு பட்டவர் என்றும், பகவானின் பக்தர்களையும் பகவானின் நாமத்தை கூறுபவர்களையும் ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று தனது யம தூதர்களுக்கு உரைக்கிறார்.


ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில் "சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து" என்று வருகிறது. இதன் பொருள், அது பகவானின் நாமம் என்று தெரிந்து கூட சொல்ல வேண்டாம். நாரயணா என்ற சப்தமே நமது துயரங்களை போக்க வல்லது. எப்படி ஒரு குழந்தை தனது மழலை சொல்லால் கூறுவதை (அது தவறாக இருந்தாலும்) தாய் புரிந்து கொள்கிறாளோ, அது போல அவனது பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார்.


"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
  நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
  வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்
  நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"

நித்தியம் நாராயண நாமம் சொல்வோம்! நமது துன்பம் நீங்கி இன்பமும் வீடும் அடைவோம்!!

ஞாயிறு, ஜனவரி 22, 2012

திருவள்ளூர் மாஹாத்மியம்

இன்று தை அமாவாசை (22 ஜனவரி 2012). இன்றும், ஆடி அமாவாசையிலும் எங்கள் குல தெய்வமான திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றுவது வழக்கம். அந்த பூஜையை முடித்துவிட்டு இன்றையை இடுகையை தொடங்குகிறேன். இந்த நன்னாளில் திருஎவ்வுள் என்ற திருவள்ளூரின் ஸ்தல புராணத்தையும், வீரராகவரின் பெருமைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருவள்ளூர் வீரராகவர் மூலவர்
ஸ்தல பெயர்: திருஎவ்வுள் 
பெருமாள் பெயர்: எவ்வுள் கிடந்தான் என்னும் ஸ்ரீ வைத்திய வீரராகவர்
தாயார் பெயர்: கனகவல்லி, வஸுமதி
தீர்த்தம்: ஹ்ருத்தாபநாசினி 
விமானம்: விஜய கோடி விமானம்

ஸ்தல புராணம்:
இந்த ஸ்தலத்தில் சாலிஹோத்ர மகரிஷி பகவானை ஆராதித்து வந்தார். அவர் வருடம் முழுதும் பகவானை வழிபடுவார். வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே உண்பார் (அந்த நாள் தை அமாவாசை என்று கூறுவர்). ஒரு அமாவாசை அன்று அவர் உணவு உண்பதற்கு முன் ஒரு முதியவர் அவரிடம் உணவு கேட்டார். வந்தவருக்கு இல்லை என்று கூறாமல் தன்னிடம் இருந்த உணவு அனைத்தையும் அந்த முதியவருக்கு வழங்கி விட்டு மீண்டும் ஒரு வருடம் ஆராதனத்தில் கழித்தார். அடுத்த வருடமும் அமாவாசை அன்று அதே முதியவர் வந்து உணவு கேட்க, இருந்தது அனைத்தையும் மீண்டும் வழங்கினார் சாலிஹோத்ர முனிவர். அந்த முதியவர் உணவு உண்ட பிறகு, ஓய்வு எடுக்க "எவ்வுள்" என்று வினவினார் (அதாவது நான் எந்த உள்ளில் படுக்க? என்று கேட்டார்). சாலிஹோத்ர முனிவரும் தனது ஆஸ்ரமத்தில் இடம் காட்டினார். பின்னர் முதியவராக வந்த பகவான் தனது சுய ரூபத்தை முனிவருக்கு காட்டி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். சாலிஹோத்ர முனிவரும், தங்கள் இதே கோலத்தில் இங்கேயே பள்ளி கொண்டு அடியவருக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டார். அந்த சாலிஹோத்ர மகிரிஷியின் ஆஸ்ரமமே திருஎவ்வுள் ஸ்தலம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் திருஎவ்வுளூர் என்பது திருவள்ளுராக மருவியது. பகவானும் வீர சயனத்தில் பள்ளி கொண்டு, சாலிஹோத்ர மகரிஷியை தனது அருகிலேயே வைத்துகொண்டு அருள் பாலிக்கிறார்.

உற்சவர் ஸ்ரீவீரராகவர்
பின்னர் இராஜா தர்மசேனனின் புதல்வியாக வஸுமதி என்ற பெயரில் தோன்றிய மகாலக்ஷ்மியை இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டு இங்கேயே (மாமனார் வீட்டிலேயே) வசிப்பதாக வாக்கு கொடுத்து, அதன் படி இங்கே எழுந்தருளி இருப்பதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.

தீர்த்த மஹிமை:
இத்தலத்தின் தீர்த்தம் "ஹ்ருத்தாபநாசினி" என்று அழைக்க படுகிறது. நமது பாவங்களினால் மனதில் எழும் தாபங்களையும் தீர்க்க வல்லது இந்த தீர்த்தம். தக்ஷனை அழித்த சிவபெருமான், தனது பிரம்மஹத்தி தோஷத்தை இந்த தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை வணங்கி தீர்த்துக்கொண்டதாக புராணம். இந்த தீர்த்தத்தின் கரையில் "தீர்தேஸ்வரர்" என்ற பெயரில் ஒரு சிவஸ்தலமும் உள்ளது. பாரத போர் முடிந்து பாண்டவர்களும் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது தாபம் தீர பெற்றதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.

பாசுரங்கள்:
இந்த திவ்ய தேசத்தை திருமங்கை ஆழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும் பாடி உள்ளனர். திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். அதில் அவர் பகவானின் பெருமைகளை இராமனாகவும், அவனது எளிமையை கண்ணனாகவும் பாடி உள்ளார்.
காசை ஆடை மூடி ஓடி காதல் செய்தானவன் ஊர்
               நாசமாக நம்ப வல்ல நம்பி நம்பெருமான்
வெயினன்ன தோள் மடவார் வெண்ணை உண்டான் இவனென்று
               ஏச நின்ற எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே!!

காஷாயம் மூலம் (காசை ஆடை) தன்னை மூடிக்கொண்டு சீதை மேல் தவறான காதல் கொண்டு ஓடி வந்த இராவணின் ஊர் நாசமாக போகும் வண்ணம் போர் புரிந்தான் இராமன். அந்த பரம்பொருளே, ஆய்ச்சிமார்களால் வெண்ணை திருடன் என்று அழைக்கும் வண்ணம் எளியவனாகவும் உள்ளான் (ஸ்ரீ கிருஷ்ணா அவதாரத்திலே). 

இன்னொரு பாசுரத்தில், 
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
              மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூதாகி மன்னர்காகி பெரு நிலத்தார்
             இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே!!

இராமானாக ஹனுமான் மூலமாக இராவணனிற்கு தூது அனுப்பிய பகவான், தன்னை அண்டி வந்த பாண்டவர்க்காக, தானே தூதனை சென்றான் (கௌரவர்கள் அவனை கிருஷ்ணன் என்று கூட கூறவில்லையாம் - பாண்டவர் தூதன் வந்திருக்கிறான் என்றார்களாம்). இன்று கூட காஞ்சிபுரத்தில், திருப்பாடகம் என்னும் திவ்ய தேசத்தில், பகவான் பாண்டவர் தூதன் என்னும் திருநாமத்தில் எழுந்தருளியுள்ளார்.

தவறு இழைத்தால், தவறு செய்தவனின் ஊரையும் அழிக்க வல்ல பரம்பொருள், தனது அடியவர்களின் பக்திக்கு இரங்கி எளியவனாக வருகிறான், ஏச்சுக்கள் கேட்கிறான், அனைத்தையும் பொறுக்கிறான். இதன் அர்த்தம், நாம் இராவணனாக இல்லாமல் கோபியர்கள், கோபர்கள் போல தூய மனதுடன் அவனை நினைத்தால், அவன் நமக்காக இரங்கி, நம் அளவிற்கும் இறங்கி வருகிறான்.

வைத்திய வீரராகவர்:
இத்தலத்தில் பகவான், நமது நோய்களை போக்கும் வைத்தியராக இருக்கிறார். இங்கே, உப்பு மிளகு கொட்டுதல், ஹ்ருத்தாபனாசினியில் வெல்லம் கரைத்தல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக அடியவர்களால் செய்ய படுகிறது. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் தீராத வயிற்று வலியால் துன்பப்பட்டார். பின்பு வீரராகவ சுவாமியை வணங்கி தன் வயிற்று நோய் தீர்ந்து, சுவாமிக்கு பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

எனக்கு தெரிந்த நண்பன் ஒருவனுக்கு நடந்த உண்மை நிகழ்ச்சி: அவனுக்கு கைக்கு அடியில் ஒரு கட்டி வந்து, பனியன் கூட அணிய முடியாமல் இருந்தான். பல சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் போனது. அவனது உறவினர் ஒருவர் கூறியபடி, திருவள்ளூர் வந்து, வேண்டி கொண்டான். ஒன்று இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே அவனது கட்டி மறைந்து விட்டது.

இந்த தை அமாவாசை நன்னாளில், வீரராகவர் நமது உடல் நோய் மட்டும் அல்லாது, காமம், கோபம் முதலிய மன நோய்களையும் அழிக்க வேண்டுவோம்!!! 

ஞாயிறு, ஜனவரி 15, 2012

கேசவன் தமர்...

கேசவன் தமர் என்று தான் சுவாமி நம்மாழ்வாரின் பன்னிரு திருநாம பாசுரங்கள் தொடங்குகின்றன. பன்னிரு திருநாமங்களில் முதன்மையானது கேசவ நாமம். கேசவ மூர்த்தி தனது நான்கு கரங்களிலும் சக்கரம் ஏந்தி நம்மை கிழக்கு திசையில் காக்கிறார். இவர் நாகப்பழம் போன்ற நிறம் உடையவர் (புரஸ்தாத் கேசவ: பாது சக்ரி ஜாம்பூனத: பிரப:). ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரனாமமே கேசவனது பெருமைகளை சொல்ல வந்தது என்கிறார் பீஷ்மாச்சர்யர் (இதீதம் கீர்தநீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன:). சந்த்யாவந்தன முடிவில் கூட நாம் "ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி" என்று சொல்கிறோம். இதன் பொருள் "எவ்வாறு ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையானது கடலையே சென்று அடைகிறதோ அதை போல அனைத்து தெய்வங்களுக்கு செய்யும் நமஸ்காரமும் கேசவனையே சென்று அடைகிறது.  மற்றொரு பிரபலமான ஸ்லோகம் "சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ஸ்ரிஜ்ய புஜம் உச்யதே, வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்".  (இது உண்மை உண்மை என்று கைகளை உயர்த்தி சொல்லுங்கள் - வேதங்களை காட்டிலும் உயர்ந்த சாஸ்திரம் இல்லை, கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் ஒன்று இல்லை).

வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களின் உபன்யாசத்தில் கேட்டது: ஒரு திருநாமம் என்றால் கீழ்கண்ட நான்கு வகைகளில் தான் பகவானை குறிக்கும்:
1. ரூபம்
2. ஸ்வாபாவிக தன்மை
3. குணம்
4. லீலை (திருவிளையாடல்)

பொதுவாக திருநாமங்களுக்கு பல பொருள்கள் உண்டு. பல திருநாமங்கள் மேற்கண்ட நான்கில் எதாவது ஒரு வகையை மட்டும் சேரும். சில திருநாமங்கள் 2 அல்லது 3 வகைகளில் பகவானது மேன்மையை சொல்லும். கேசவ நாமம் மட்டுமே பகவானது மேன்மையை மேற்கண்ட நான்கு வகைகளிலும் கூற வல்லது.


அழகிய கேசங்களை உடையவன்
1. ரூபம்: அழகிய முடி கற்றைகளை (கேசங்களை) உடையவன் என்பதால் பகவானுக்கு கேசவன் என்று பெயர். ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்படத்தை பார்த்தால் போதும், இந்த அர்த்தம் எளிதில் விளங்கிவிடும்.

2. ஸ்வாபாவிக தன்மை: பகவானே பரம்பொருள்.
"கா இதி ப்ரஹ்மனோ நாம இஷோஹம் சர்வ தேஹினாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான்"

பரமசிவன் கேசவ நாமத்திற்கு அர்த்தமாக இந்த ஸ்லோகத்தை கூறுகிறார். க என்றால் பிரம்மதேவரை குறிக்கும், ஈச என்றால் நான் (சிவபெருமான்). நாங்கள் இருவரும் உங்களது உடலில் இருந்து தோன்றியதால், உங்களுக்கு கேசவன் (க + ஈச = கேசவன்) என்று பெயர்.

3. குணம்: துன்பங்களை அழித்தல்
கேசவ: க்லேஷ நாசன:
கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)

4. லீலை (திருவிளையாடல்):
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை வதம் செய்ததால் கேசவன்.

கஜேந்திர மோக்ஷம்
கேசவ நாமத்தை விளக்கும் ஒரு முக்கிய சரித்திரம் கஜேந்திர மோக்ஷம். இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அகஸ்த்ய மகரிஷியின் சாபத்தினால் அடுத்த பிறவியில் யானையாக பிறக்கிறான். ஒரு நாள் ஒரு பொய்கையில் நீராடும் பொழுது ஒரு முதலை அந்த யானையின் காலை பிடித்தது. ஆயிரம் வருடங்கள் போராடிய பிறகு தனது முற்பிறவி பயனால். பகவானை துதிக்க, அவரும் கருட வாஹனத்தில் எழுந்தருளி முதலையை கொன்று யானையை காக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அட்டபுயக்கரத்தில் பகவானுக்கு ஆதி கேசவன் என்று திருநாமம். பேயாழ்வருக்கு பகவான் இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷ லீலையை காட்டியதாக தல வரலாறு.

திருவட்டாறு என்னும் தலத்திலும் பகவான் ஆதிகேசவனாக அருள்பாலிக்கிறார். பொதுவாக இடமிருந்து வலமாக சயனிக்கும் பெருமாள், இத்தலத்தில் வடமிருந்து இடமாக சயனதிருக்கிறார். நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை நமது பிறப்பு தளையை முக்தி கொடுப்பவனாக பாடியுள்ளார் (வாற்றாட்டான் அடி வணங்கி மாஞால பிறப்பறுப்பான்...). திருமயிலையிலும் பகவான் மயூரவல்லி நாயிகா சமேத ஸ்ரீகேசவஸ்வாமியாக அருள் பாலிக்கிறார். இன்று தை பொங்கல் (15-01-2012). இந்த மகர சங்கராந்தி நன்னாளில் பகவான் கேசவன் நம் அனைவரையும் காக்கட்டும். கேசவனை பாடி அனைவரும் நலம் பெறுவோம்!!!

வாழி கேசவா!!!

வெள்ளி, ஜனவரி 06, 2012

நாம சங்கீர்த்தனம்!!!

நமோ நாராயணா!!!



பரம்பொருளான பகவானை அடைய பல வழிகள் உண்டு. அவற்றுள் கலியுகத்திற்கு நாம சங்கீர்த்தனம் மிக சிறந்த வழியாக நமது ஆசார்யர்களால் காட்டப்பட்டிருக்கிறது. நாம சங்கீர்த்தனம் செய்வதற்கு எளிமையானது ஆனால் பெரிய பலன்களை அளிக்க வல்லது. நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை சொல்லி மாளாது.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பீஷ்மாச்சர்யர் பகவானின் நாம ஜபமானது "பவித்ரானாம் பவித்ரம்யோ மங்களனாஞ்ச மங்களம்" - பகவத் நாம சங்கீர்த்தனம் நம்மை புனிதமாக்கி நற்பலன்களை கொடுக்கும் என்கிறார். 

பல வழிகள் இருந்தும் ஏன் ஆசார்யர்கள் நாம சங்க்கீர்தனத்திற்கு அதிக முக்யத்வம் தருகிறார்கள்? இதை ஆதிசங்கரர் தனது விஷ்ணுசஹாஸ்ரநாம பாஷ்யத்தில் விளக்குகிறார்.

"அஸ்ய ஸ்துதி லக்ஷனர்ஸ்யார்சநஸ்யாதிக்யே கிம் காரணம் உச்யதே?". ஸ்துதி (ஜபம் / நாம சங்கீர்த்தனம்) மற்றும் அர்ச்சனை மார்க்கம் ஏற்றம் பெற என்ன காரணம்?

"ஹிம்ஸாதி புருஷாந்தர த்ரவ்யாந்தர தேஷ காலாதி நியமானபேக்ஷத்வம் ஆதிக்யே காரணம்". இடம், காலம், உபயோக படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றில் ஹிம்ஸைக்கோ பாவத்திற்கோ இடம் இல்லை. எனவே ஸ்துதி மற்றும் அர்ச்சனை மார்க்கம் ஏற்றம் பெற்றது.

வேறு சில மேற்கோள்களை காண்போம்:

கீதையிலே பகவான் ஸ்ரீகிருஷ்ணர்: "யஜ்ஞானாம் ஜப யஜ்ஞோ'ஸ்மி" - அனைத்து வகை யஜ்ஞங்களிலும் நான் ஜப (நாம சங்கீர்த்தன) யஜ்ஞமாக இருக்கிறேன்

ஸ்ரீ விஷ்ணுபுராணம்: "த்யாயன் கிருதே யஜன் யஜ்ஞைஸ் த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்" - கிருத யுகத்தில் த்யான மார்க்கத்திலும், த்ரேதா யுகத்தில் யஜ்ஞங்களாலும், த்வாபர யுகத்தில் அர்ச்சா வடிவை பூஜிப்பதாலும் கிடைக்கும் பலன் (அதாவது பகவத் அனுக்ரஹம்) கலி யுகத்தில் நாம சங்கீர்த்தனத்தேலேயே எளிதில் கிடைத்துவிடும்.

திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி: "நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்"

நம்மாழ்வாரின் திருவாய்மொழி: "கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் நாமம் திண்ணம் நாரணமே"


பிருஹத் நாராதீய புராணம்: "ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம், கலௌ நாஸ்தியேவ நாஸ்தியேவ நாஸ்தியேவ கதிர் அன்யதா" - ஹரி நாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே எனது ஜீவனம். கலியுகத்தில் வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது!!   

ஆண்டாளின் திருப்பாவை: "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி", "பாற்கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி", "மாயனை மன்னு வட மதுரை மைந்தனை .... வாயினால் பாடி",  "கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ"

சரி. பகவானின் திருநாமங்களை சொல்வதால் என்ன கிடைக்கும்? முன்னமே சொன்னபடி (பவித்ரானம் பவித்ரம்யோ ...) பகவத் நாமம் நம்மை புனிதபடுத்தும். ஸ்ருதி, ஸ்ம்ருதி மற்றும் புராணங்களில் நாம சங்கீர்தனத்தின் எண்ணற்ற பலன்கள் கூறப்பட்டுள்ளன.

ஆண்டாளின் திருப்பாவை: "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகு தருவான் நின்றதுவும் தீயினில் தூசாகும்..."

நம்மாழ்வாரின் திருவாய்மொழி: "கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்". பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்களை யம தூதர்கள் நெருங்கவும் அஞ்சுவர், நமது துயர்கள் அனைத்தும் விலகும்.

"ரூபமாரோக்யமர்தாம்ஸ்ச போகாம்ஷைவானுஷங்கிகான்| ததாதி த்யாயதோ நித்யம் அபவர்கப்ரதோ ஹரி:" - ஹரியை துதித்தால் அவர் அவ்வுலகத்திற்கு முக்தி கொடுப்பதோடு, இவ்வுலகில் ரூபம் (அழகு), ஆரோக்யம், போகம் ஆகியவற்றையும் அருள்கிறார்.


"ஹரிர் ஹரதி பாபானி துஷ்டசித்தைர் அபி ஸ்ம்ருதஹ அணிச்சயாபி ஸம் ஸப்ருஷ்டோ தஹத்யேவஹி பாவகஹ" - ஹரி என்ற திருநாமம் நமது பாவங்களை அபஹரிக்கிறது. நாம் தெரியாமல் கூறினால் கூட பலன் கொடுக்கவல்லது. எவ்வாறெனில், அது சுடும் என்று தெரியாமல் ஸ்பரிசித்தால் கூட நெருப்பு நம்மை சுடுகின்றதே அதைப்போல.

"ஸம்ஸார ஸர்ப்ப ஸந்தஷ்ட நஷ்டசேஷ்டைக பேஷஜம்| கிருஷ்னேதி  வைஷ்ணவ மந்த்ர ஷ்ருத்வா முக்தோ பவேந்நரஹ||" -  ஸம்ஸாரமென்னும் பாம்பு தீண்டுவதால் துன்பத்தில் இருக்கும் ஆத்மாவிற்கு மருந்து போன்றது கிருஷ்ணா என்னும் நாமம். இதை கேட்பதாலேயே (ஷ்ருத்வா) ஒருவர் ஸம்ஸார துன்பத்திலிருந்து முக்தி அடைகிறார். இதை சொல்பவர் அடையும் பலன்களை கேட்கவும் வேண்டுமா??



இனி வரும் இடுகைகளில் பகவத் நாம மேன்மைகளையும் அவன் புகழை விளக்கும் புராணங்களையும் அனுபவிப்போம்.


நமோ நாராயணா!!!