ஞாயிறு, டிசம்பர் 01, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 125

17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |
அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||



153. ஓம் ப்ராம்ஶவே நம:

ஸ ஏவ அவரே (வாமனனாய்க் அவதரித்த அவரே
ஜகத்ரயம் மூவுலகையும் க்ரமமாண: தாவி அளந்தபொழுது 
ப்ராம்ஶுரபூத் இதி மிக உயர்ந்ததால் (அளவில் உயரமாக வளர்ந்ததால்
ப்ராம்ஶு: பகவான் 'ப்ராம்ஶு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.



வாமனனாய் அவதரித்து, மூவுலகையும் தாவி அளக்கும் பொழுது த்ரிவிக்ரமனாய் உயர்ந்து வளர்ந்ததால் பகவான் 'ப்ராம்ஶு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாமனன் (முந்தைய திருநாமம்) என்றால் குள்ளமானவர் என்று பொருள். ப்ராம்ஶு என்றால் உயரமானவர் என்று பொருள். வாமனனாய் குள்ளமாக இருந்த பகவான் த்ரிவிக்ரமனாய் உயர்ந்தார்.

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில், முன்பே, நாம் 'க்ருதாக்ருத:' என்று நேரெதிர் பொருள் கொண்ட இரண்டு சொற்கள் ஒரே திருநாமமாய் பீஷ்மாச்சார்யாரால் உரைக்கப்பட்டதைக் கண்டோம். இங்கும் (வாமன:, ப்ராம்ஶு:) என்று இரண்டு நேரெதிர் பொருள் கொண்ட திருநாமங்கள் அடுத்தடுத்து வருகின்றன. இவ்வாறே, மேலும் பல இடங்களில் இவ்வாறு நேரெதிர் பொருள் கொண்ட திருநாமங்கள் அடுத்தடுத்து வருவதைக் காணலாம் (உதாரணமாக பயக்ருத் - பயநாஶன:, காமஹா-காமக்ருத், க்ரோதஹா-க்ரோதக்ருத் ...).



தோயே து பதிதே ஹஸ்தே வாமனோSபூதவாமன: |

ஸர்வதேவமயம் ரூபம் தர்ஶயாமாஸ வை ப்ரபு: ||

பூ: பாதௌ த்யௌ: ஶிரஸஸ்சாஸ்ய 
சந்திராதித்யௌ ச சக்ஷுஶீ | (ஹரிவம்ம் 3.71.43-44)


ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:

(மஹாபலி மூன்றடி மண் வழங்குவேன் என்று தாரை வார்த்த) நீர் வாமனரின் கையில் விழுந்த உடனேயே, அவர் 'அவாமனர்' (குள்ளமாய் இருந்த அவர் வளர்ந்து விட்டார்) ஆகினார். அப்பொழுது பகவான் தன்னுடைய (அனைத்து தேவதைகளையும் தன்னுள்ளே அடக்கிய) விஶ்வரூபத்தைக் காட்டினார். (அந்த விஶ்வரூபத்தில்) பூமியே அவரது பாதங்கள், ஆகாயமே அவரது தலை, கதிரவனும், வெண்மதியுமே அவரது திருக்கண்களாய் இருந்தன.


இத்யாதிவிஶ்வரூபம் தர்ஶயித்வா இவ்வாறு பகவானின் விஶ்வரூபம் (ஹரிவம்ஸத்தில்) வர்ணிக்கப்பட்டுள்ளது.



தஸ்ய விக்ரமதோ பூமிம் சந்த்ராதித்யௌ ஸ்தானாந்தரே |

நப: ப்ரக்ரமமாணஸ்ய நாப்யாம் தௌ ஸமவஸ்திதௌ ||

திவமாக்ரமமாணஸ்ய ஜானுமூலே வ்யவஸ்திதௌ | (ஹரிவம்ம் 3.72.29)


ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:

பகவான் த்ரிவிக்ரமனாய் பூமியை அளக்கும் பொழுது கதிரவனும், வெண்மதியும் அவரது மார்புக்கு அருகில் இருந்தனர், வானத்தை அளக்கும் பொழுது அவரது தொப்புள் (வயிற்றுப்) பகுதியிலும், ஸ்வர்கத்தை அளக்கும் பொழுது அவரது முட்டிக்கு அருகிலும் இருந்தனர் (பகவான் அவ்வாறு வளர்ந்தார்).

இதி ப்ராம்ஶுத்வம் தர்ஶயதி ஹரிவம்ஶே இவ்வாறு பகவான் (த்ரிவிக்ரமனாய்) உயர, உயர வளர்ந்தது ஹரிவம்ஸத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.



154. ஓம் அமோகாய நம:

ந மோகம் என்றும் வீணாவதில்லை 
சேஶ்டிதம் செயல்கள் 
யஸ்ய ஸ: எவரது (அவரது) செயல்கள் 
அமோக: பகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.



பகவானின் செயல்கள் என்றும் வீணாவதில்லை. எனவே, பகவான் 'அமோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 110-வது திருநாமத்தில், அமோக: என்பதற்கு "பகவானைக் குறித்து செய்யப்படும் பூஜைகளும், துதிகளும் வீணாவதில்லை" என்று ஆதிசங்கரர் உரை தந்துள்ளார். இங்கு, “அவரது செயல்கள் என்றுமே வீணாவதில்லைஎன்று புனருக்தி தோஶம் வராது ஆச்சார்யாள் பொருளுரைத்துள்ளார்.