புதன், ஆகஸ்ட் 31, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - ஃபல ஸ்ருதி (இந்த ஸ்தோத்திரத்தின் பலன்கள்)

லக்ஷ்மிநரசிம்ம சரணாப்ஜ மதுவ்ரதேன
ஸ்தோத்ரம் க்ருதம் ஸுககரம் புவி சங்கரேன |
ஏதத் படந்தி மனுஜா ஹரிபக்தி யுக்தா:
தே யாந்தி தத் பத சரோஜம் அகண்ட ரூபம் ||


லக்ஷ்மிநரசிம்ம - லக்ஷ்மிநரசிம்மரின், சரணாப்ஜ (சரண+அப்ஜ) - திருவடித் தாமரையிலிருந்து, மதுவ்ரதேன - தேனை பருக விரும்பும், ஸ்தோத்ரம் க்ருதம் - இந்தத் துதியை இயற்றினேன், ஸுககரம் புவி - உலகனைத்திற்கும் நன்மையை அளிக்கக்கூடிய,சங்கரேன - ஆதிசங்கரரான நான், ஏதத் - இதை, படந்தி - ,படிக்கும், மனுஜா - மனிதர், ஹரிபக்தி யுக்தா: - பகவான் ஹரியிடம் பக்தி கொண்டு, தே யாந்தி - அவர்கள் அடைவார்கள், தத் பத சரோஜம் - பகவானின் திருவடித் தாமரைகளை, அகண்ட - மிகப்பெரிய (இந்த பிரபஞ்சம் அனைத்தையும் வ்யாபிக்கும்), ரூபம் - உருவம்.


பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் திருவடித்தாமரையிலிருந்து வழியும் தேனை நுகரும் வண்டான ஆதிசங்கரரான நான், உலக நன்மைக்காக இயற்றிய இந்தத் துதியை தினமும் ஓதுபவர்களுக்கு, பகவானிடம் பக்தி உண்டாகி (அல்லது பெருகி), இந்த ஸம்ஸாரத்திலிருந்து பகவானால் கைக்கொடுத்துத் தூக்கப்பட்டு, தன்னுருவால் இந்த ப்ரபஞ்சம் அனைத்தையும் நிறைந்து வ்யாபிக்கும் பகவானின் திருவடித் தாமரைகளை சென்றடைவர்.

எந்த ஒரு துதியின் முடிவிலும் அதனை ஓதுவதால் எற்படும் நற்பலன்களை கூறுவது மரபு. அவ்வாறே, இந்த லக்ஷ்மிநரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்திரத்தை படிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களை இந்த துதியில் குறிப்பிடுகிறார் ஆதிசங்கரர்.  அதற்கு முன் தன்னைப் பற்றியும், இந்தத் துதியை தான் எதற்காக இயற்றினார் என்பதையும் முதலிரண்டு அடிகளில் விளக்குகிறார்.

ஆதிசங்கரர்: ஆசார்யர் தம்மை ஞானியாகவோ, பக்த சிரோண்மணியாகவோ கூறிக்கொள்ளவில்லை. பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து வழியும் தேனை நுகர விரும்பும் ஒரு வண்டாகவே தன்னை விவரித்துக் கொள்கிறார்.

இந்தத் துதியை இயற்றியது எதற்காக? உலகனைத்தின் (உலக மக்கள் அனைவரின்) நன்மைக்காகவே இந்தத் துதி இயற்றப்பட்டுள்ளது என்று கூறுகிறார் ஆசார்யர். இந்த துதி முழுவதிலும் ஸம்ஸாரம் என்னும் இந்தப் பிறவியில் நாம் எவ்வாறு வீழ்ந்தோம், அதில் உள்ள துன்பங்கள் எத்தகையவை என்பதை பல வழிகளாலும் விளக்கி, பகவானே நம்மை இந்த ஸம்ஸாரத்திலிருந்து கைக்கொடுத்து தூக்கி அருள வேண்டும் என்றே மீண்டும், மீண்டும் வேண்டிக்கொண்டிருந்தார் ஆதிசங்கரர். பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரின் அருளால், நாம் இந்த பிறவித் தளையிலிருந்து விடுபடுவதையே இங்கு உலக மக்களின் நன்மை என்று ஆசார்யர். 

இந்தத் துதியை ஓதுவதால் ஏற்படும் நற்பயன்கள்:
இந்த பிறவித் தளையிலிருந்து எவ்வாறு விடுபடுவோம், எங்கு சென்றடைவோம் என்பதை பின்னிரு வரிகளில் விவரிக்கிறார். எவரொருவர் இந்தத் துதியை நம்பிக்கையோடு ஓதுகின்றனரோ, அவர்களுக்கு முதலில் பகவானிடம் பக்தி உண்டாகிறது (இதுவே, இந்தத் துதியை ஓதுவதால் கிடைக்கும் முதல் பயனாகும்). அந்த பக்தி கனிந்து, அதனால் இந்தப் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு, இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும் தன்னுருவால் வ்யாபித்திருக்கும் பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரின் திருவடித் தாமரைகளை சென்றடைவார்கள் என்று வாழ்த்துகிறார் ஆதிசங்கரர் (இதுவே, இந்தத் துதியை ஓதுவதனால் ஏற்படும் முடிவான பயனாகும்).

இந்தத் துதியை வெறுமனே ஓதாது ஜகத்குருவான ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதரை வணங்கி ஓத வேண்டும். குருவருள் இன்றித் திருவருள் கிடைக்காது. எனவே, நாமும் ஆச்சார்யரின் தாள் பற்றி, அவர் இயற்றிய இந்த துதியை தினமும் ஓதிப் பயன் பெறுவோமாக!!!

ஸ்ரீகுருப்யோ நம: |
ஸ்ரீகுரு சரணாரவிந்தாப்யாம் நம: |
அஸ்மத் குரவே ஸ்ரீசங்கராசார்ய பர்யாய நம: |

குரு பரம்பரை ஸ்லோகம்:
ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்|

ஆதிசங்கரரைப் போற்றும் ஸ்லோகம்:
ஸ்ருதி ஸ்ம்ரிதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம்! லோக சங்கரம்!!
   

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 14 (அடியவரின் உள்ளத்தில் உறைபவர் - வாஸுதேவர்)

ப்ரஹலாத நாரத பராசர புண்டரீக 
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ |
பக்தானுரக்த பரிபாலன பாரிஜாத 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (14)

ப்ரஹலாத, நாரத, பராசர, புண்டரீக, வ்யாஸாதி - ப்ரஹலாதன்,  - நாரதர், பராசரர் (வேத வ்யாஸரின் தந்தை), புண்டரீக மஹரிஷி, வ்யாஸர் முதலிய, பாகவத - அடியவர்களின், புங்கவ - தலைசிறந்த, ஹ்ருந்நிவாஸ - உள்ளத்தில் உறைபவரே, பக்தானுரக்த - உன் அடியவர்களை, பரிபாலன - காத்து அருள்வதில், பாரிஜாத - வேண்டியதை வழங்கும் பாரிஜாத மரம் போல, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

ப்ரஹலாதன், நாரதர், (விஷ்ணு புராணத்தை மைத்ரேயருக்கு உரைத்தவரும், வேத வ்யாஸரின் தந்தையுமான) பராசர மஹரிஷி, புண்டரீக மஹரிஷி, (வேதங்களைத் தொகுத்தவரும், பதினெண் புராணங்களைத் தொகுத்தவரும், ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தை இயற்றிய) வேத வ்யாஸர் போன்ற தலைசிறந்த அடியவர்களின் உள்ளத்தில் உறைபவரே. உனது அடியவர்களை (அவர்களிடம் கொண்ட பேரன்பினால்) காத்தருளி, அவர்கள் வேண்டியதை பாரிஜாத மரம் போல வழங்குபவரே! திருமாமகளை என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே! எனக்குக் கைக்கொடுத்து அருளுங்கள்.

இந்த துதியை நாம் பகவானின் 'வாஸுதேவ' (அனைத்துயிர்களின் உள்ளத்திலும் உறைபவர்என்ற திருநாமத்தின் விளக்கமாகக் கொள்ளலாம்.

பகவான் அடியவர்களின் உள்ளத்தில் உறைபவர். அவர் அனைவரின் உள்ளத்தில் உறைபவராயினும், அவரே கதியென்றிருக்கும் பரம பாகவதர்களின் உள்ளத்தில் விரும்பி உறைகிறார் (ஸ்ரீமத்  பகவத் கீதை 7.19 - வாஸுதேவ ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:). பரப்ரஹ்மத்தை முற்றும் உணர்ந்தவர் ஆதிசங்கரர். பகவானின் தலை சிறந்த அடியவர்களுள் ஒருவர். அவரைப்போன்ற மஹாத்மாக்கள் பிறப்பதும் அரிது. அவரே, இந்த துதியில் ஒரு சிலரைக் குறிப்பிட்டு, இவர்கள் பாகவதோத்தமர்கள் என்று கூறுகிறார் என்றால் அத்தகையோரின் பெருமையை நாம் சொல்லவும் வேண்டுமோ?

ப்ரஹலாதன்: ப்ரஹலாதனைக் குறிப்பிடாது நரசிம்மாவதாரம் முழுவடையாது. பிறப்பால் அஸுர சிறுவனாய் இருப்பினும் கருவிலேயே திருவுடையவனாய், பகவானே கதி என்றிருந்தவன் ப்ரஹலாதன்.

நாரதர்: சீடனைப் பற்றி குறிப்பிட்ட ஆதிசங்கரர், அடுத்ததாக, ப்ரஹலாதனுக்கு பகவானைப் பற்றி உபதேசித்த அவனது குரு நாரதரைக் குறிப்பிடுகிறார்.
நாரதர் ப்ரஹலாதனின் குரு: ப்ரஹலாதனின் தந்தை ஹிரண்யகசிபு தன் தமையன் ஹிரண்யாக்ஷனின் இறப்பிற்கு பழிவாங்க ப்ரஹ்மாவைக் குறித்து தவம்புரிய சென்ற பொழுது, அவனது மனைவி கயாது கருவுற்றிருந்தாள். பிறக்கும் குழந்தையும் தனக்கு எதிரியாக இருக்கக்கூடும் என்று நினைத்த இந்திரன் கயாதுவைக் கொல்வதற்காக அவளைத் தூக்கிச் சென்றபொழுது, நாரதர் அவனைத் தடுத்து கயாதுவை தனது ஆஸ்ரமத்திற்குக் கூட்டிச் சென்று ஹிரண்யகசிபு தவம் முடித்து வரும்வரை அவளை பாதுகாத்தார். அப்பொழுது அவளுக்கு பகவானின் கதைகளையும், திருநாமங்களையும் கூறிவந்தார். அவள் கேட்காவிடினும், அவளது கருவில் இருந்த ப்ரஹலாதன் அவற்றைக் கேட்டு பக்த சிரோண்மணியாக வளர்ந்தான்.  எனவே, நாரத மஹரிஷி அவனுக்கு குருவாகிறார்.

பராசரர்: வசிஷ்டரின் பெயரான பராசரர் தனது சீடரான மைத்ரேயர் கேட்ட கேள்விகளுக்கு பதிலுரைக்கையில் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அருளியவர். மேலும், மீனவப் பெண்ணான சத்யவதியின் மூலம் கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வ்யாஸரைப்  பெற்றெடுத்தவர்.

புண்டரீகர்: இந்த மஹரிஷியைப் பற்றி புராணங்களில் அதிகக் குறிப்புகள் இல்லை. மாமல்லபுரத்தில் உள்ள (திருக்கடல்மல்லை என்ற புராணப் பெயர் கொண்ட) 108 திவ்யதேசத்தில் ஒன்றான ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் ஸ்தல புராணத்தில் புண்டரீகர் என்னும் மஹரிஷிக்கு பகவான் காட்சி தந்ததாக அந்தக் கோயிலின் ஸ்தல புராணம் கூறுகிறது.

வ்யாஸர்: இவர் பெருமையை இந்த சிறு பதிவில் கூறிவிட முடியாது. இவர் பகவானின் ஆவேச அவதாரம் (வ்யாஸாய விஷ்ணு ரூபாய, வ்யாஸ ரூபாய விஷ்ணவே). வைவஸ்வத மன்வந்தரத்தில் நமக்காக வேதங்களை வகுத்துக் கொடுத்தவர். ஐந்தாவது வேதம் என்றழைக்கப்படும் மஹாபாரதத்தை இயற்றியவர். பதினென் புராணங்களை அளித்தவர் (விஷ்ணு புராணம் போன்ற ஒரு சில புராணங்களை மற்றவர்கள் இயற்றி இருப்பினும் அவற்றையெல்லாம் தொகுத்து தன் சீடர்கள் மூலம் எங்கும் பரப்பியவர் வேத வ்யாஸரே).
வ்யாஸர் என்பவர் நாம்  நினைப்பதைப் போல ஒரு தனிப்பட்ட நபர் அல்ல. வ்யாஸர் என்பது ஒரு பதவியாகும். ப்ரஹ்மாவின் ஒரு நாளில் 14 மனுக்கள் ஆட்சி செய்கின்றனர். (மன்வந்தரம் என்றழைக்கப்படும் ) ஒவ்வொரு மனுவின் காலத்திலும் ஒவ்வொருவர் "வ்யாஸராகத்" தேர்வு செய்யப்படுகின்றனர். இன்றைய (வைவஸ்வத) மன்வந்தரத்தில், கிருஷ்ண த்வைபாயனர் வ்யாஸராக உள்ளார். இதற்கு முந்தைய மன்வந்தரத்தில் கிருஷ்ண த்வைபாயனரின் தந்தை ஸ்ரீபராசர மஹரிஷியே வ்யாஸராக இருந்து வேதங்களைத் தொகுத்தளித்தார்.     

மேற்சொன்ன பாகவதோத்தமர்கள் மட்டுமல்லாது நம் போன்றோரையும் பகவான் காக்கிறார். தேவலோகத்துத் தோட்டங்களில் பாரிஜாத மரம் என்ற மரம் ஒன்று உண்டாம். அதன் அடியில் நின்று நாம் என்ன நினைக்கின்றோமோ அதை அந்த மரம் வழங்குமாம்அவ்வாறுஅடியவர்கள் விரும்புவதை பாரிஜாத மரம்போல பகவானே அள்ளி வழங்குகிறார் (இங்கு விருப்பம் என்பது, தர்ம சாஸ்திரங்களுக்கு உட்பட்ட நியாயமான விருப்பங்களைக் குறிக்கும்).

இவ்வாறு, திருமகளுடன் என்றும் இணைபிரியாதுதன்னை அண்டிய அடியவர்களை காக்கும் பகவான் லக்ஷ்மிநரசிம்மர், தமக்கு (நமக்குகைக்கொடுத்து இந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுவித்து அருள வேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார். 

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 13 (பகவானின் திருநாமங்கள் - நாமாவளி)

லக்ஷ்மீபதே! கமலநாப! சுரேஷ! விஷ்ணோ!
வைகுண்ட்ட! க்ருஷ்ண! மதுசூதன! புஷ்கராக்ஷ! |
ப்ரஹ்மண்ய! கேசவ! ஜனார்தன! வாஸுதேவ!
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம்* ||

* - "தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்" 
(ஒரு சில பதிப்புக்களில் கடைசி வரி இவ்வாறு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது)


திருமகள் கேள்வனே! உந்தித் தாமரை உடையோனே! தேவர்களின் தலைவரே! எங்கும் நிறை பரம்பொருளே! வைகுண்டத்தில் உறைவோனே! கார்மேகக் கண்ணனே! மது என்ற அசுரனை அழித்து தேவர்களைக் காத்தவரே! செந்தாமரைக் கண்ணனே! ப்ரஹ்மத்தை உணர்ந்தோரின் உற்ற தோழரே! அழகிய திருமுடி உடையவரே! தீயோரை அழிப்பவரே (அடியவருக்கு நேரும் தீங்கினை போக்குபவரே)! எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே! திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!

லக்ஷ்மீபதே - திருமாமகள் கேள்வரே, கமலநாப - தாமரையைப் போன்ற திருவயிற்றை உடையவரே (அல்லது, தனது உந்தியிலிருந்து உதித்தத் தாமரையில் நான்முகனைப் படைத்தவரே), சுரேஷ - தேவர்களின் (அடியவர்களின்) தலைவரே, விஷ்ணோ - எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவரே, வைகுண்ட்ட - வைகுண்டத்தைத் தமது இருப்பிடமாக உடையவரே, க்ருஷ்ண - கார்மேகக் கண்ணனே, மதுசூதன - மது என்ற அசுரனை வதைத்தவரே, புஷ்கராக்ஷ - தாமரை இதழ் போன்ற அழகிய திருக்கண்கள் உடையவரே, ப்ரஹ்மண்ய - ப்ரஹ்மத்தை உணர்ந்தவர்களுக்கு உற்றத் தோழரே, கேசவ - அழகிய திருமுடியை உடையவரே (அல்லது, கேசி என்னும் அசுரனை அழித்தவரே), ஜனார்தன - தீய மனிதர்களை அழிப்பவரே (அல்லது, மனிதர்களிடம் உள்ள தீயதை அழிப்பவரே), வாஸுதேவ - அனைத்து உயிர்களுக்குள்ளும் நிறைந்து வசிப்பவர், லக்ஷ்மி நரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து. 

கடைசி வரியின் மாற்றுப் பதிப்பின் விளக்கம்:
தேவேச - தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமே, தேஹி - அருளுங்கள், க்ருபணஸ்ய - தங்களின் கருணையின் வடிவாக, கராவலம்பம் - கைக்கொடுத்து.

ஸம்ஸாரமென்னும் இப்பிறவியில் நமக்கு நேரும் துன்பங்கள் அனைத்தையும் மற்றும் இந்தப் பிறவியே ஒரு துன்பமென்பதையும் விவரித்த ஆதிசங்கர பகவத்பாதர் இந்தத் துதியில் லக்ஷ்மி நரசிம்மரை அவரது பல திருப்பெயர்களை இட்டழைத்து, நான் கூறவேண்டிய அனைத்தையும் கூறிவிட்டேன். இனி, தமக்கு (நமக்கு) வேறு சரண் இல்லை என்று உணர்த்துகிறார். பல்லாலும், கைகளாலும் தனது புடைவையைப் பிடித்துக்கொண்டிருந்த திரௌபதி முடிவில் அனைத்தையும் விட்டு, கைகளை மேலே உயர்த்தி "த்வாரக நிலையாச்யுதா கோவிந்தா புண்டரீகாக்ஷா ரக்ஷ மாம் சரணாகதம்" என்று கூறியதுபோலவே இந்த ஸ்லோகமும் உள்ளது என்றால் அது மிகையாகாது (அவ்வாறு, அவள் கை தூக்கிய உடனே அவளது புடவை முடிவின்றி சுரந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்).

பகவான் திருமகள் கேள்வன் (லக்ஷ்மிபதி). எவ்வாறு ஒரு தாயின் பரிவான வார்த்தைகளால் கட்டுண்ட தந்தை தமது குழந்தையின் தவறுகளைப் பொறுத்துக் கொள்கிறாரோ அவ்வாறே பகவானும், திருமகள் நமக்காகப் பரிந்துரைக்க, அதனை ஏற்று நம்மைக் காக்கிறார். அவர் தனது உந்தித் தாமரையில் நான்முகனையும், அவர் மூலம் இவ்வுலகனைத்தையும் படைத்தவர் (கமலநாபர்). படைத்த அவருக்கு நம்மைக் காத்து, இந்த ஸம்ஸாரத் தளைகளிலிருந்து எளிதில் விடுவிக்க இயலும். அவர் நல்லோர்களின் தலைவர் (சுர+ஈச = சுரேஷ), எங்கும் உறைபவர் (விஷ்ணு). 

வைகுண்ட - வைகுண்ட நாதர். இந்தத் திருநாமத்திற்கு பல பொருட்கள் உண்டு. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 405வது திருநாமம் 'வைகுண்ட'. இதற்கு உரை எழுதியுள்ள ஆதிசங்கரர் "விவிதா குண்டா கதே: ப்ரதிஹதி:', அதாவது பக்தர்களில் (அவர்களது ஆன்மீகப்) பாதையில் வரும் தடைகளை நீக்குபவர் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பொருளும் இந்த துதிக்கு நன்றாகப் பொருந்துகிறது. இந்த ஸம்ஸாரத் தளைகளிலிருந்து நாம் முக்தியை நோக்கி முன்னேறும் வழியில் வரும் தடைகளையெல்லாம் பகவான் தகர்த்து விடுகிறார்.

அவரே, கிருஷ்ணனாக அவதரித்தார். கிருஷ்ணாவதாரத்தில் பகவான், நண்பன், பகைவன் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் நற்கதியை அளித்துள்ளார். காமத்தால் கோபியரும், பயத்தால் கம்சனும், வெறுப்பால் (த்வேஷத்தால்) சிசுபாலன் முதலியவர்களும், உறவுமுறையால் யாதவர்களும், நட்பால் பாண்டவர்களும், பக்தியால் நாரதர் முதலியோரும் பகவானைப் பற்றியே நினைத்து நற்கதி அடைகின்றனர் (ஸ்ரீமத் பாகவதம் 7.1.31). 

மது என்ற அசுரனை அழித்து, தேவர்களைக் காத்து, மதுசூதனன் என்ற பெயர் பெற்றவர். தனது பக்தர்களின் துன்பங்களையும் போக்கி நம்மை காப்பார். அவர் தாமரைக் கண்களோடும் (புஷ்கராக்ஷர்), அழகிய திருமுடியோடும் (கேசவன்), ப்ரஹ்மத்தைத் தேடும் முமுக்ஷுக்களுக்கு உற்ற தோழராய் இருப்பவர் (ப்ரஹ்மண்யர்), அடியவர்களின் துன்பங்களை அழிப்பவர் (ஜனார்தனர்), அனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்து, நிறைந்திருப்பவர் (வாஸுதேவர்) - எனவே, அவருக்கு நாம் படும் துன்பங்கள் அனைத்தும் தெரியும்.

திருமாமகளோடு என்றும் இணைபிரியாதிருக்கும் லக்ஷ்மிநரசிம்மர் தமக்கு (நமக்கு) கைக்கொடுத்து இந்த ஸம்ஸாரத் தளைகளிலிருந்து தம்மை (நம்மை) விடுவித்து அருளவேண்டும் என்று வேண்டுகிறார் ஆதிசங்கரர்.

புதன், ஆகஸ்ட் 24, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 12 (காலனால் நேரும் துன்பங்கள்)

பத்வாகளே யமபடா பஹு தர்ஜயந்த 
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர்யுதம் மாம் |
ஏகாகினம்* பரவசம் சகிதம் தயாளோ 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (12)
* - ஏகாகினம் என்பதற்கு பதிலாக ஆகாமினம் என்று சில பதிப்புக்களில் உள்ளது  


பத்வா - மிகுந்த (மிக அதிக அளவில்), களே - கழுத்தை, யமபடா - யமனின் தூதர்கள், பஹு தர்ஜயந்த - பயமுறுத்தியும், திட்டித் துன்புறுத்தியும், கர்ஷந்தி யத்ர - இங்கும், அங்கும் இழுத்து, அலைக்கழித்து, பவபாச - இந்த ஸம்ஸாரத்தில் நான் கொண்டுள்ள பற்றுதல் எனும் கயிற்றால், சதைர்யுதம் - நூற்றுக்கணக்கான, மாம் - என்னை, ஏகாகினம் - (துணையின்றி) தனியே, பரவசம் - மற்றவர்களின் (யம தூதர்களின்) கட்டுப்பாட்டில், சகிதம் - நடுங்குகிறேன், தயாளோ - கருணையே வடிவான, லக்ஷ்மி நரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.  

காலனின் தூதர்கள், மரணமடையும் தருவாயில், என்னை பற்றுதல் என்னும் கயிற்றினால் கட்டி, திட்டித் துன்புறத்தி, இங்கும் அங்கும் அலைக்கழித்து இழுத்துச் செல்கின்றனர். யம தூதர்களில் கட்டுப்பாட்டில், எவ்வித உதவியும் இன்றி தனித்து விடப்பட்டுள்ள நான், மிகவும் அச்சத்தில் உள்ளேன். கருணையே வடிவானவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

இந்த ஸ்லோகத்தை இரு விதமாய் பொருள் கொள்ளலாம். ஒன்று - இந்த ஸம்ஸாரத்தை விட்டு நம் உயிர் பிரியும் தருணத்தில் நாம் படும் துன்பங்களை விவரிப்பது. மற்றொன்று - இந்தப் பிறவியே நமக்கு மரணகாலத்தில் யம தூதர்களால் வரக்கூடியத் துன்பத்தைப் போன்றது.

முதல் பொருள்: 
இந்தப் பிறவியில் நாம்  பற்பல இன்பங்களை அனுபவிக்கிறோம் (அனுபவிப்பதாக எண்ணிக்கொள்கிறோம்). ஆனால் இந்த உடலைவிட்டு உயிர் பிரிந்து யமனின் உலகத்தை அடையும் வரை நாம் பற்பல துன்பங்களை அனுபவிக்கிறோம் (யமனின் உலகை அடைந்த பின்னும் துன்பங்கள் தொடரும்). ஆத்ம ஞானம் அடைதலே முக்திக்கு வழி. அவ்வாறு, ஆத்மஞானம் அடையாது அகக்கண்களைத் தொலைத்த நம்மை, யம தூதர்கள், ஸம்ஸாரத்தில் நாம் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பற்றுதல்களைப் போன்ற நூற்றுக்கணக்கான பாசக் கயிற்றுக்களை நம் கழுத்தினில் கட்டி, நம்மை திட்டியும், அங்கும், இங்கும் இழுத்துக் கொண்டு துன்புறுத்தியும் அழைத்துச் செல்வர். உதவிக்கு யாருமின்றி தனியே அந்த யம தூதர்களின் கட்டுபாட்டினில் துன்புறுவோம். முக்தியை அடைந்த ஆத்மாக்கள் இந்த துன்பங்களை அடைவதில்லை. எனவே, கருணையே வடிவான திருமகள் நாதன் லக்ஷ்மி நரசிம்மர் தமக்கு (நமக்கு) இந்த துன்பங்கள் நேராது முக்தியை தந்தருள வேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

மற்றொரு பொருள்: 
இந்தப் பிறவியே நமக்கு யம தூதர்கள் தருமாப் போல் பற்பல இன்னல்களைத் தருகிறது. இந்த ஸம்ஸாரத்தில் நாம் கொண்டுள்ள நூற்றுக்கணக்கான ஆசைகளும், பற்றுக்களுமே யம தூதர்களும், அவர்களின் பாசக்கயிறுமாகும். இவற்றால் நமது கழுத்து இறுக்கப்பட்டு, இந்த ஆசாபாசங்களினால் இங்கும், அங்கும் அலைக்கழிக்கப்படுகிறோம். பிறரின் தேவைகளை தீர்க்காத போது வசைமொழிகளையும் கேட்க நேரிடுகிறது. நாம், நம்மை சுற்றி பலர் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் நாம் தனித்தே இருக்கிறோம். நாம் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கின்றோம். ஆனால், இந்த ஆசாபாசங்களின் கட்டுப்பாட்டிலேதான் உழல்கிறோம். இதிலிருந்து விடுபட முக்தி ஒன்றே வழி. அதை அதுவும், பகவானின் கருணையினால் தான் நமக்குக் கிடைக்கும். எனவே, கருணையே வடிவான திருமகள் நாதன் லக்ஷ்மி நரசிம்மர் தமக்கு (நமக்கு) இந்த ஸம்ஸாரத் தளையிலிருந்து முக்தியை தந்தருள வேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 11 (பிறவிக் குருடர்கள் நாம்)

அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதனஸ்ய 
சோரை: ப்ரபோ பலிபிரிந்த்ரிய நாமதேயை: |
மோஹாந்த கூப குஹரே வினிபாதிதஸ்ய 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (11)


அந்தஸ்ய மே - குருடனான நான், ஹ்ருத விவேக - மனதை அடக்கும் "விவேகம்" என்னும், மஹாதனஸ்ய - பெரிய சொத்தை, சோரை: - திருடிவிட்டதால்,  ப்ரபோ - அனைத்து சராசரங்களையும் ஆளும் நாதனே, பலிபி: - திருடர்கள், இந்த்ரிய நாமதேயை: - புலன்கள் என்னும் பெயர் கொண்ட, மோஹ - மோஹமென்னும், அந்த கூப - இருண்ட பாழுங் கிணற்றுக்குள், குஹரே - பள்ளத்துக்குள், வினிபாதிதஸ்ய - விழுந்து விட்டேன், லக்ஷ்மி நரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

புலன்கள் என்னும் திருடர்கள் எனது அறிவையும், விவேகமென்னும் சொத்துக்களைத் திருடிவிட்டனர். இதனால், அகக்கண் குருடாகி, பிறவியென்னும் இருண்ட பாழும் கிணற்றினுள் விழுந்துத் தவிக்கின்றேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

முன்பே நான்காவது ஸ்லோகத்தில் ஆதிசங்கர பகவத்பாதாள் இந்த பிறவியென்னும் பாழுங்கிணற்றைப் பற்றி வர்ணித்திருக்கிறார். நஞ்சு தோய்ந்த பற்களுடன் கூடிய பாம்புகள் நிறைந்துள்ள ஆழம் காண இயலா பெரும்பள்ளம் இது. இந்தக் கிணற்றினுள் நாம் எவ்வாறு விழுந்தோம் என்று ஆச்சார்யர் இங்கே விளக்குகிறார்.

நாம் புறக்கண்கள் இல்லாதவர்கள்தான் குருடர்கள் என்று தவறாக நினைத்துள்ளோம். நாம் இந்த உடல் அல்ல, அதனுள் வினைப்பயனால் சிக்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆத்மா என்ற உண்மையான ஆன்மீக அறிவு (அகக்கண்கள்) இல்லாத நாம் அனைவருமே பிறவிக் குருடர்களே. இந்த அகக்கண்கள் மூலமாகவே பகுத்தறிவைப் பெறுகிறோம்.
"உண்மையில் நாம் யார்? அறிவுள்ள (சித் தத்துவமான) இந்த ஆத்மா ஏன் அறிவற்ற (அசித் தத்துவமான) உடலுக்குள் சிறைப்பட்டுள்ளது? இதிலிருந்து விடுதலைப் பெறுவது எவ்வாறு? நாம் கடைத்தேற உதவுபவை யாவை? நாம் கடைத்தேற தடையாயிருப்பவை யாவை?" என்று பகுத்தறிந்து கொள்வதையே பகுத்தறிவு என்று இங்கு குறிப்பிட்டுள்ளேன். போலியாக நாத்திக வாதம் பேசிக்கொண்டு ஸனாதன தர்மத்தை (இந்து மதத்தை) மட்டும் இழிவுபடுத்தும்  ஈனப் பிழைப்பைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை.

எவ்வாறு நாம் நமது அகக்கண்களை இழந்தோம்? அவற்றை நாமாக இழக்கவில்லை. மாறாக, நம்மிடமிருந்து அவை திருடப்பட்டுள்ளன. புலன்கள் என்னும் திருடர்கள் அதை நம்மிடமிருந்து திருடிவிட்டனர். நமக்கு அடங்கி நாம் இட்ட வழக்கில் நடக்கவேண்டிய புலன்கள், நம் அறிவை திருடுவது ஏன்? ஏனெனில், நாம் மனதை அடக்கத் தவறிவிட்டோம். கட்டுப்பாடற்றுத் திரியும் மனம், புலன்களுக்கு .அடிமையாகிறது. புலன்கள் நமது மனதை கைக்கொண்டு, "எது நன்மை? எது தீமை?" என்று பிரித்தறிய வேண்டிய நமது அகக்கண்களை மூடிவிடுவதன் மூலம் நம் அறிவைத் திருடுகிறது. இவ்வாறு, அகக்கண்களையும், அதினின்று வரும் பகுத்தறிவையும் இழந்த நாம், இந்தப் பிறவியென்னும் பாழுங்கிணற்றுக்குள் விழுந்து தவிக்கிறோம்.

பகவான், ஸ்ரீமத் பகவத் கீதை இரண்டாம் அத்தியாயத்தில் இதைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் (கீழ்க்கண்டவை பாரதியாரின் பகவத்கீதை தமிழாக்கத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளன): 
2.62: மனிதன் விஷயங்களைக் கருதும்பொழுது அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
2.63: சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.

இந்த புத்தி நாசத்தையே ஆதிசங்கரர் இந்த ஸ்லோகத்தில் விவரித்துள்ளார்.

இந்த ஆழங்கான இயலா பாழுங்கிணற்றுக்குள்ளிருந்து நம்மைக் காப்பது யார்?
நாம் (அவனது) குடிமக்கள் - பகவான் ப்ரபு (ஆள்பவன்)
நாம்  குருடர்கள் - பகவான், (தன் இயற்கையான ஞானத்தால்) அனைத்தையும் உள்ளபடி அறிபவன்
நாம் இருண்ட கிணற்றில் உள்ளோம் - பகவான், தனது அறிவு ஒளி வீச, மேலான இடத்தில் உள்ளவன்.

அனைத்தையும் அடக்கி ஆளும் அந்தப் பரம்பொருளால் மட்டுமே நம்மைக் காக்க இயலும். அந்தப் பரம்பொருளான லக்ஷ்மி நரசிம்மரை, நம் அறிவுக்கண்களைத் திறந்து, நாம் இழந்த சொத்தான பகுத்தறிவை மீட்டுத்தந்து, நம்மை பிறவியென்னும் இந்த இருண்ட கிணற்றிலிருந்து கைக்கொடுத்து வெளியேற்றுமாறு ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 10 (பிறவியென்னும் மத யானை)

ஸம்ஸார பீகர கரீந்த்ர கராபி காத 
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷ  ஸகலார்த்தி நாச |
ப்ராண ப்ரயாண பவ பீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (10)

ஸம்ஸார - இந்தப் பிறவியென்னும், பீகர - அச்சமூட்டும், கரீந்த்ர - மத யானை, கராபி காத - தனது துதிக்கை மற்றும் தந்தங்களால், நிஷ்பிஷ்ட - முட்டி, மிதித்து (என்னைத் துன்புறுத்தி), மர்ம வபுஷ - எனது மர்ம உறுப்புக்களைத் தாக்கி, ஸகலார்த்தி நாச - அனைத்துத் துன்பங்களையும் போக்குபவரே, ப்ராண ப்ரயாண பவ பீதி - மரணமடையும் தறுவாயில், ஸம ஆகுலஸ்ய - (உள்ளது போன்ற) துன்பத்தை அனுபவிக்கின்ற என்னை, லக்ஷ்மி நரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியென்னும் மத யானை ஒன்று, என்னை தனது துதிக்கை மற்றும் தந்தங்களால் முட்டி, மிதித்து எனது மர்ம உறுப்புக்களைத் தாக்கித் துன்புறுத்துகிறது. மரண தசையைப் போன்று துன்பத்தில் பீடிக்கப்பட்டுள்ள என்னை திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே!!! கைக்கொடுத்து அருளுங்கள்!!!  

ஆதி சங்கரர், இந்த ஸ்லோகத்தில் நமது பிறவியை ஒரு மதம் கொண்ட யானையாக உருவாக்கப்படுத்துகிறார். இந்த யானையின் தோற்றமே மிகுந்த அச்சத்தை விளைவிப்பதை உள்ளது. தனது பெருத்த துதிக்கைகளாலும், கூறிய தந்தங்களாலும் அது நம்மை முட்டி, மிதித்துத் துவைக்கிறது. மேலும் நமது மர்ம உறுப்புக்களைத்* தாக்கித் துன்புறுத்துகிறது.

* மர்ம உறுப்புக்களைத் தாக்கினால் நமக்கு அதிக துன்பம் விளையும். மேலும், மர்ம உறுப்புக்களைக் காத்துக்கொள்வது என்பது கடினம். இந்த ஸம்ஸாரத்தில் நாம் இதில் மிகுந்த பற்று வைக்கின்றோமோ, அதுவே நம் துயரத்திற்குக் காரணமாய்  அமைகின்றது. "பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு" என்றாரே திருவள்ளுவரும். இவ்வாறு நாம் கொள்ளும் பற்றையே நமது மர்ம உறுப்புக்களாக ஆதிசங்கரர் உருவகித்துள்ளார் என்றே நான் நினைக்கிறேன்.

இந்த (பிறவியென்னும்) யானையிடம் நாம் படும் துன்பமானது மரணத் தருவாயில் உள்ளவன் படும் துன்பத்தை ஒத்துள்ளது. இதைத் தாங்க முடியாது மரணமடைந்து விட்டால் இதிலிருந்து விடுதலைப் பெறுவோமோ? என்று எண்ணினால், அதுவும் கைகூடுவதில்லை. (புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று ஆச்சார்யர் தமது பஜ கோவிந்தத்தில் கூறியுள்ளதைப் போல) நமது வினைப்பயன்கள் நம்மை மீண்டும், மீண்டும் இந்தப் பிறவி சுழற்சியில் கொண்டு தள்ளுகிறது. இதனால், துயருற்றிருக்கும் நம்மை, தன் அடியவர்களின் அனைத்துத் துயரங்களையும் களைந்தெறிவதில் வல்லவரான லக்ஷ்மிநரசிம்மரே தன்னைக் கைக்கொடுத்துக் காக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார் ஆதிசங்கர பகவத்பாதாள்.

லக்ஷ்மிநரசிம்மர் யானையிடமிருந்து தன் அடியவனை காத்தருளிய வரலாறு:
பக்தர்களுக்குள் மிகச் சிறந்தவனாக ப்ரஹலாதனை கொல்வதற்கு அவன் தந்தை பல வழிகளில் முயன்றான். இந்தப் ப்ரபஞ்சத்தை எட்டு திக்குகளில் தாங்கும் அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகளைக் கொண்டு ப்ரஹலாதனை மிதிக்க வைத்தான். இந்தப் ப்ரபஞ்சங்களையே தாங்கும் சக்தி வாய்ந்த யானைகள் மிதித்தும், பகவான் ஹரியையே எப்பொழுதும் த்யானித்துக் கொண்டிருந்த ப்ரஹலாதனுக்கு, பகவானின் அருளால் ஒன்றும் நேரவில்லை.

அவ்வாறே, நம்மையும் பகவான் லக்ஷ்மி நரசிம்மர், இந்தப் பிறவியென்னும் யானையிடமிருந்து காத்தருள்வார்.

வியாழன், ஆகஸ்ட் 04, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 9 (பிறவியென்னும் மாய வலை)

ஸம்ஸார ஜால பதிதஸ்ய ஜகந்நிவாஸ 
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாக்ர ஜஷோபமஸ்ய |
ப்ரோத்கண்டித ப்ரசுரதாலுக மஸ்தகஸ்ய 
லட்சுமிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (9)


ஸம்ஸார - இந்த பிறவியென்னும், ஜால - மாய வலையில், பதிதஸ்ய - விழுந்துவிட்டேன், ஜகந்நிவாஸ - இவ்வுலகனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே, ஸர்வேந்த்ரியார்த்த - ஐம்புலன்களென்னும், படிஷாக்ர - கூரிய தூண்டில் முனையில், ஜஷ - மீன், உபமஸ்ய - போன்று உள்ளேன், ப்ரோத் - குத்தி, கண்டித - துண்டிக்கப்பட்ட, ப்ரசுரதாலுக - பிரித்தெடுக்கப்பட்டு, மஸ்தகஸ்ய -  தலை, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

புலனின்பங்கள் என்னும் புழுவைத் தன் தூண்டிலில் வைத்து, இந்தப் பிறவி விரித்த மாய வலையில் நான் சிக்கித் தவிக்கின்றேன். புலனின்பங்களை நாடி, தூண்டிலில் விழுந்து தன் தலையை இழந்துள்ள ஒரு மீனைப் போன்று தவிக்கிறேன். இவ்வுலகனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

இந்தப் பிறவி ஒரு மாய வலையை விரிக்கிறது. நமது ஐம்புலன்களுக்கும் இன்பம் தரவல்ல புலனின்பங்களே அந்தத் தூண்டில் நுனியில் உள்ள புழுவாகும். எவ்வாறு ஒரு மீனானது தூண்டிற்ப் புழுவைக்கண்டு, அதை சுவைக்கப் போய், தூண்டிலில் சிக்கித் தன்னையே இழக்கிறதோ, அவ்வாறே, நாமும் புலனின்பத்தை நாடி, அந்த மாய வலையில் வீழ்ந்து, தூண்டிலில் சிக்கி, தலை துண்டிக்கப்பட்ட மீனைப்போன்று துடித்துக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய துயரமான நிலையில் இருக்கும் நம்மை திருமகள் கேள்வனான நரசிம்மர் கைக்கொடுத்துக் காக்கவேண்டும் என்று அழைக்கிறார்.

ஜகந்நிவாஸ: பகவான் உலகனைத்திலும் உள்ளான். உலகனைத்தும் அவனுள் உள்ளது.   ஆனால், அனைத்து அவதாரங்களிலும், நரசிம்ம அவதாரத்தில் தான் இந்த உண்மை அனைவரும் அறியும் வகையில் வெளிப்பட்டது. பகவான், சிறுவனான ப்ரஹலாதன், "ஹரி எங்கேயுள்ளான்?"  என்ற கேள்விக்கு எந்த இடத்தைக் கைகாட்டுவானோ என்று தெரியாது, பகவான் நரசிம்மர் அனைத்து இடங்களிலும் நிறைந்து மறைந்திருந்தார். ப்ரஹ்லாதன் ஒரு தூணைத்தான் கைக்காட்டினான். 'இன்றும் நரசிம்மர் அனைத்து இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். ஆனால், கைக்காட்டத்தான் ப்ரஹ்லாதன் இல்லை' என்று ஆன்றோர் கூறுவார். எனவே, 'அனைத்திலும் நிறைந்திருக்கும் பகவானுக்கு, நான் இந்த வலையில் சிக்கி தவிப்பது தெரியாமல் போகுமா?' என்ற பொருளிலேயே இங்கு "ஜகந்நிவாஸ" என்று அழைக்கிறார் ஆதிசங்கரர்.