வியாழன், ஜூலை 28, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 8 (பிறவியென்னும் காட்டுத்தீ)

ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு 
ஜ்வாலா வலீபி ரதிதக்த தனூருஹஸ்ய |
த்வத்பாத பத்ம ஸரஸீ ருஹமாகதஸ்ய 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (8)


ஸம்ஸார - இந்தப் பிறவியென்னும், தாவ - சுட்டெரிக்கும், தஹநாதுர - துன்புறுத்தும் நெருப்பு, பீகரோரு (பீகர உரு) - கொடூரமாக எனது துடைகள், ஜ்வாலா - தீப்பிழம்புகள், வலீபிர் - எனது மேனி, அதிதக்த - மிகவும் துன்புறுத்தப்பட்டு, தனு - உடல், உருஹஸ்ய - துடைகள், த்வத்பாத பத்ம - தங்களுடைய தாமரைப் போன்ற திருப்பாதங்கள், ஸரஸீருஹம் - பொய்கையில் இறங்க, ஆகதஸ்ய - வந்துள்ளேன், லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியானது ஒரு கொடிய காட்டுத்தீப்போல என்னைத் துன்புறுத்துகிறது. தனது தீப்பிழம்புகளால் எனது மேனியையும்,  துடைகளையும் எரிக்கிறது. இதனால் துன்பமடைந்துள்ள நான், தங்களின் தாமரைப் பாதங்களாகியப் பொய்கையை நாடி வந்துள்ளேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

இந்த துதியில், ஆதிசங்கரர் இந்தப் பிறவியை ஒரு கொடிய தீயாக உருவகப் படுத்துகிறார். கொழுந்துவிட்டெரியும் தீப்பிழம்புகள் தமது (நமது) துடைகளையும், சருமத்தையும் பற்றி, தமது (நமது) உடலையும், துடைகளையும் சுட்டெரித்து துன்புறுத்துகின்றன. இந்த துன்பத்திலிருந்து விடுபட ஒரு குளிர்ந்த தடாகம் தேவை. பகவானின் தாமரைப் பாதங்களே அந்த குளிர்ந்த நீருடைய பொய்கையாகும். அந்த குளிர்ந்த திருவடிகளை தமக்குத் தந்தருள வேண்டுமென்று திருமாமகள் கேள்வனாம் லக்ஷ்மி நரசிம்மரை வேண்டுகிறார் ஆதிசங்கரர். 

புதன், ஜூலை 27, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 7 (பிறவியென்னும் நச்சரவம்)

ஸம்ஸார ஸர்ப்ப கன வக்த்ர பயோக்ர தீவ்ர 
தம்ஷ்டிராகரால விஷதக்த விநஷ்ட மூர்த்தே |
நாகாரி வாஹன ஸுதாப்தி நிவாஸ சௌரே 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (7)

ஸம்ஸார - இந்தப் பிறவி, ஸர்ப்ப - அரவம் (பாம்பு), கன - பெரிய, வக்த்ர - வாய், பயோக்ர - மிகுந்த அச்சத்தை விளைவிக்கக் கூடிய, தீவ்ர - கூரிய, தம்ஷ்டிராகரால - பெரிய பற்கள், விஷதக்த - நஞ்சு நிறைந்த, விநஷ்ட - துன்பமுற்ற, மூர்த்தே - வடிவமாய், நாகாரி - அரவங்களின் (பாம்புகளின்) எதிரியான கருடன், வாஹன - (கருடன்) மீதேறி வருவோரே, ஸுதாப்தி -பாற்கடலில், நிவாஸ - வாழும், சௌரே - சௌர எனும் பெயர் பெற்ற, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவி கூறிய நஞ்சு நிறைந்த பற்களை உடைய ஒரு அரவமாகும் (பாம்பாகும்). இந்தப் பிறவியென்னும் அரவம் என்னைத் தன் நச்சுப் பற்களால் தீண்டித் துன்புறுத்துகிறது. (பாம்புகளின் எதிரியான) கருடன் மீதேறி வருபவரே!!! பாற்கடலில் வாழும் சௌரியே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

ஆதிசங்கரர் இந்த  துதியில், இந்தப் பிறவியை ஒரு கொடிய அரவமாக (பாம்பாக) உருவகப்  படுத்துகிறார். இந்தப் பிறவியை அடைந்த அனைவரும்  இருத்தல்,  பிறத்தல், வளர்த்தல், வளர்ச்சி நிறைவுறுதல், தேய்தல் மற்றும் இறத்தலாகிய ஆறுவகைத் துன்பங்களுக்கு மீண்டும், மீண்டும் உட்படுத்தப்படுகிறோம். இந்தப் பிறவித் துன்பத்தை, நஞ்சு நிறைந்த கூறிய பற்களுடனும், அச்சமூட்டும் பெரிய வாயுடனும் கூடிய (பிறவியென்னும்) அரவம் தீண்டியதால் ஏற்படும் துன்பத்தோடு ஒப்புமை கூறுகிறார். 

அரவத்தினால் துன்பமுறும் நம்மை அந்த அரவங்களின் பகைவனான கருடன் மீதேறி வந்து நம்மைக் காக்கவேண்டும் என்று பகவானை வேண்டுகிறார். கருடனைக் கண்டவுடனே அரவங்கள் ஓடிவிடுவது இயற்கையல்லவா? அவ்வாறே, கருடன் மீதேறி வரும் லக்ஷ்மிநரசிம்மரைக் கண்டதும் இந்தப் பிறவியெனும் அரவமும் நம்மை விட்டு ஓடிவிடும்.

அரவம் ஓடிவிட்டாலும் அதனால் தீண்டப்பட்டு துன்புற்றிருக்கிறோமே, அதற்கு மருந்து உண்டா? பரமனின் திருப்பார்வையே அந்தப் பாற்கடலின் அமுதம் போன்றது. அதுவே இந்தப் பிறவியென்னும் பாம்பு தீண்டியதற்கான மருந்து. எனவே தான், பகவான் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பதை நினைவூட்டுகிறார்.

அந்த பகவான் எப்பேர்பட்டவரெனில், இவ்வாறு துன்பமடைந்திருப்போரைக் காப்பதில் வல்லவர் (சூரர்). எனவே, சௌரி என்று பெயர் பெற்றவர். அந்த திருமாமகள் கேள்வன், லக்ஷ்மிநரசிம்மன் தன்னைக் கைக்கொடுத்துக் காக்கவேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டுகிறார்.

சௌரி என்னும் சொல் 'சூர' என்ற வார்த்தையிலிருந்து உருவானது. சௌரி என்றால்  சூரன், சூரத்தன்மை உடையவன் என்று பொருள். துன்பத்திலிருப்போரைக் காப்பதில் சூரன் பகவான்.

பகவான்  ப்ரஹலாதனையும், மீராவையும் நஞ்சிலிருந்து காத்தது:
பக்தர்களில் உத்தமர்களான ப்ரஹலாதனுக்கும், மீராவிற்கும் அவர்களைக் கொல்லும் பொருட்டு அவர்களின் உறவினர்களே உணவில் நஞ்சைக் கலந்து அளித்தனர். அந்த உணவை பகவானுக்கு நிவேதனம் செய்த பின் அவர்கள் உண்டனர். பகவான், தனது அடியவர்களை அந்த நஞ்சிலிருந்துக் காத்தான்.

குருவாயூர் தல வரலாற்றிலிருந்து:
ஒரு அரசனுக்கு அவனது ஜாதகத்தின்படி மரண கண்டம் நெருங்கியது. அவனது, குலகுருவின் அறிவுரைப்படி அன்றைய தினம் முழுவதும் குருவாயூர் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண த்யானத்தில் ஆழ்ந்தான். அன்றைய தினம் முடிந்ததும், தனக்கு கண்டம் ஏதும் நிகழவில்லையே என்று தன் குருவிடம் கேட்க, அதற்கு அவர் அவனது கால்களைக்  காட்டினார். அங்கு, பாம்பு தீண்டிய வடு இருந்தது. அவனது குலகுரு 'அந்த அரசனின் ஜாதகப்படி அவனை அரவம் தீண்டியது  என்றும், குருவாயூரப்பனின் அருளால் அவனுக்கு ஒன்றும் நேரவில்லை' என்பதையும் விளக்கினார்.

திங்கள், ஜூலை 18, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்ரம் - 6 (பிறவியென்னும் பெரும் மரம்)

ஸம்ஸாரவ்ருக்ஷ மகபீஜமனந்த கர்ம
சாகாஸதம் கரணபத்ரமனங்க புஷ்பம் |
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (6)

ஸம்ஸாரவ்ருக்ஷம் - பிறவியென்னும் பெரிய மரம், அக - பாவம், பீஜம் - விதை, அனந்த கர்ம - எண்ணிலடங்கா வினைப்பயன்கள், சாகா - கிளைகள், சதம் - நூற்றுக்கணக்கான, கரண - புலனுறுப்புக்கள், பத்ரம் - இலைகள், அனங்க - (தகாத) காமம், புஷ்பம் - மலர்கள், ஆருஹ்ய - ஏறினேன், துக்க பலிதம் - துன்பமென்னும் பழங்கள், பததோ - விழுந்துக் கொண்டிருக்கிறேன், தயாளோ - கருணையே வடிவானவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

பிறவியென்னும் ஒரு கொடிய விஷ மரத்தினில் ஏறிவிட்டேன். என்னுடைய பாவம் என்னும் விதியினால் முளைத்த இந்த மரத்தில், (என்னுடைய) எண்ணிலடங்கா வினைப்பயன்கள் என்னும் நூற்றுக்கணக்கான கிளைகளும், புலனுறுப்புக்கள் என்னும் இலைகளும், (தகாத) காமம் என்னும் மலர்களும், துன்பங்கள் என்னும் பழங்களும் உள்ளன. காமத்தின் (இந்த மரத்தின் மலர்கள்) வாசனையால் தூண்டப்பட்டு, துன்பங்கள் என்னும் பழங்களை சுவைத்தேன். அதனால், மேலிருந்து கீழ்நோக்கி தலைகீழாக விழுந்துகொண்டு இருக்கிறேன். கருணையே வடிவானவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

பிறப்பும், இறப்பும் மாறி மாறி வந்து நம்மை வருத்தும் இந்தப் பிறவியை மிகப்பெரியதொரு மரமாக ஆதிசங்கரர் உருவகப்படுத்துகிறார். நாம் பற்பல பிறவிகளாய் புரிந்துள்ள பாவங்களே இந்த மரத்தின் விதையாகும். பாவமென்னும் விதையிலிருந்து முளைக்கும் எண்ணிலடங்கா வினைப்பயன்களே இந்த மரத்தின் நூற்றுக்கணக்கான கிளைகள். நமது (கண், காது முதலான)  புலனுறுப்புக்கள் இந்தக் கிளைகளில் தோன்றும் இலைகளாகும். நமது முற்பிறவிக் கருமங்களின் விளைவால் அந்தப் பிறவிகளில் என்னென்னப் புலனின்பங்களில் ஈடுபட்டிருந்தோமோ, அதே புலனின்பங்களில் இப்பிறவியிலும் நாட்டம் வரும். இதற்கு "வாசனை" என்று பெயர். மரங்களில் வாசனையைத் தருவது மலர்கள். இந்த பிறவியென்னும் மரத்தில், தகாத காமத்தில் இச்சையே மலர்கள் (இந்த மலர்கள் நம் முற்பிறவிக் கருமத்தில் வாசனையைத் தூண்டும்). துக்கமும், துன்பமுமே இந்த மரத்தில் பழுக்கும் பழங்கள். இத்தகைய மரத்தில் ஏறிய நாம், வினைப்பயன்களால் நம் வாசனைத் தூண்டப்பட்டு இந்த துக்கமென்னும் பழத்தை உண்கிறோம். அதை உண்டதனால் இந்த மரத்திலிருந்து கீழே விழுகிறோம் (அதாவது, மீண்டும் மீண்டும் கருமங்களும், அதனால் வினைப்பயன்களும், அதனால் துக்கமும், அதனால் மேலும் கருமங்களும் என இந்தப் பிறவிச் சக்கரத்தில் சுழன்று, நரகமென்னும் குழியில் விழுவதை இவ்வாறு உருவகிக்கிறார்). இவ்வாறு துன்பத்திலிருக்கும் தம்மை (நம்மை), திருமகள் கேள்வனாம், கருணையே வடிவானவராம் லக்ஷ்மி நரசிம்மர் கைக்கொடுத்துக் காக்க வேண்டுமென்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

நமது உபநிடந்தங்களிலும், பகவத் கீதையிலும் இந்தப் பிறவியானது தலைகீழாக உள்ள ஒரு மரமாக உருவகிக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீமத் பகவத்கீதை 15-வது அத்தியாயத்தின் தொடக்கத்தில் பகவான் இந்தப் பிறவியை இவ்வாறு வர்ணிக்கின்றார் (தமிழாக்கம், பாரதியாரின் பகவத் கீதை உரையிலிருந்து எடுக்கப்பட்டது).

ஊர்த்வ மூலம்  அதஹ் சாகம் அஸ்வத்தம் ப்ராஹூர் அவ்யயம் 
சந்தாம்ஸி யஸ்ய பர்னானி யஸ் தம் வேத ஸ வேதவித் (15.1)
அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளும் உடையதோர் அரசமரத்தைப் போன்றது  என்பர். இதன் இலைகளே  வேதங்கள்.அதை அறிவோனே வேதமறிவோன்.

அதஸ் சோர்த்வம் ப்ரஸ்ர்தாஸ் தஸ்ய சாகா 
குண ப்ரவ்ருத்த விஷய ப்ரவாள:
அதஸ் ச மூலான்யனுசந்ததானி 
கர்மானுபந்தீனி மனுஷ்ய லோகே (15.2)
அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி, விஷயத்  தளிர்களுடன், பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.

இதை தலைகீழான மரமாக உருவகிக்கக் காரணம்: 'இந்தப் பிறவி எவ்வாறு உண்டாயிற்று என்ற கேள்வியில் தொடங்கி இந்த மரத்தின் மூலத்தை அறிய முற்படுபவன் மேலே உயருகிறான்; தலைகீழான மரத்தின் பழங்கள் கீழே இருக்கும். அதை சுவைக்க முற்படுபவன் தன்னிலையினின்றும் கீழ்நோக்கி வீழ்கிறான்'.

புதன், ஜூலை 13, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்ரம் - 5 (பிறவிப் பெருங்கடல்)

ஸம்ஸார ஸாகர விஷால கரால கால 
நக்ரக்ரஹ க்ரஹண நிக்ரஹ விக்ரஹஸ்ய |
வ்யக்ரஸ்ய ராக ரஸனோர்மி நிபீடிதஸ்ய  
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (5)

ஸம்ஸார - இந்தப்பிறவியானது, ஸாகர - பெருங்கடல், விஷால - கரை காண இயலாது பரந்து விரிந்துள்ள, கரால - அச்சமூட்டும், கால - காலமென்னும், நக்ரக்ரஹ - முதலைகளால் கடித்தும், க்ரஹண - பீடிக்கப்பட்டும்,  நிக்ரஹ - துன்புற்ற, விக்ரஹஸ்ய - நிலையில் (உள்ளேன்), வ்யக்ரஸ்ய - அலைக்கழிக்கப்பட்டு, ராக - உணர்ச்சி, ரசன - (புலனின்பங்களில்) சுவை, ஊர்மி - பேரலைகளால், நிபீடிதஸ்ய - துன்புறுகிறேன், லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி -  அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியென்னும் கரை காண இயலாத பெருங்கடலில் வீழ்ந்து தத்தளிக்கிறேன். காலமென்னும் முதலைகள் என்னை பீடித்து, தனது கூறிய பற்களால் கடித்துத் துன்புறுத்துகிறது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, புலனின்பங்களின் சுவை என்னும் பேரலைகளால் அலைக்கழிக்கப்பட்டு மிகுந்த துன்பம் அடைந்துள்ளேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

நமது இந்தப் பிறவியை வர்ணிக்க இந்த துதியை விட வேறு பொருத்தமான துதி கிடைப்பது அரிது. இந்தப் பிறவியானது அச்சமூட்டும், கரை காண முடியாத  பெருங்கடலாகும். காலமென்னும் முதலைகள் நம்மைக் தினமும் கடித்துக்கொண்டிருக்கின்றன.

இதனால் பீடிக்கப்பட்டிருக்கும் நாம், அதை உணர்வது கூட கிடையாது. அடக்க முடியாத உணர்ச்சிகள், புலனின்பங்களை சுவைத்துக் கொண்டு, அவற்றிலேயே பொழுதைப் போக்கிக்கொண்டு  இருக்கிறோம். ஆனால், இந்த உணர்ச்சிகளும், சுவையும் இந்தக் கடலில் உள்ள பேரலைகளாகும். அவற்றால் நாம் இங்கும், அங்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய ஆபத்தான கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தம்மை (நம்மை), ஒரு படகு போன்று வந்து காக்கவேண்டும் என்று லக்ஷ்மிநரசிம்மரை ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார் (பகவானை "பவாப்தி போத" என்று தொடக்கத்திலேயே ஆதிசங்கரர் கூறியுள்ளார்).

திங்கள், ஜூலை 11, 2016

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்திரம் - 4 (பிறவியென்னும் பாழுங்கிணறு)

ஸம்ஸார கூபம் அதிகோரம் அகாதமூலம் 
ஸம்ப்ராப்ய துக்க ஸதஸர்ப்ப ஸமாகுலஸ்ய |
தீனஸ்ய தேவ க்ருபணா பதமாகதஸ்ய  
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (4)

ஸம்ஸார - இந்தப்பிறவியானது, கூபம் - பாழுங்கிணறு (அல்லது குழி என்றும் கொள்ளலாம்), அதிகோரம் - அச்சமூட்டும், அகாதமூலம் - ஆழங்காணமுடியாத, ஸம்ப்ராப்ய - அதில் விழுந்துள்ள எனக்கு, துக்க சத ஸர்ப்ப - துன்பங்கள் எனப்படும் நூற்றுக்கணக்கான அரவங்கள், ஸமாகுலஸ்ய - குழுமி இருக்கின்றன, தீனஸ்ய - (இவற்றால்) துன்பமடைந்துள்ள நான், தேவ - கடவுளே, க்ருபாணா - துன்பமான, பதம் - நிலையை அடைந்து, ஆகதஸ்ய - வருந்தும் என்னை, லக்ஷ்மிநரசிம்ம -  திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியானது ஆழம் காண இயலாத ஒரு பாழுங்கிணறு. இதன் உள்ளே நூற்றுக்கணக்கான அரவங்கள் (பாம்புகள்) என்னைத் தீண்டுகின்றன. இவற்றால் துன்பமடைந்துள்ள எனக்கு திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!
  

இந்தப்பிறவியானது ஆழங்காண இயலா ஒரு பாழுங்கிணறாகும். இதில், நான் எனது வினைப்பயனால் விழுந்துவிட்டேன். அதனுள்ளே நூற்றுக்கணக்கான அரவங்கள் கூட்டம் கூட்டமாய் என்னைத் துன்புறுத்துகின்றன (நமது வினைப்பயனால் விளையும் துன்பங்களையே ஆதிசங்கரர் அரவங்களாக உருவாக்கப்படுத்துகிறார்). இவற்றால் பீடிக்கப்பட்டு, இந்த ஆழந்தெரியாத கிணற்றிலிருந்து மீண்டு வரும் வழி தெரியாது மிகவும் துன்பமான நிலையில் உள்ளேன். நாமோ ஆழந்தெரியாத கிணற்றுக்குழியில் விழுந்துள்ளோம். நம்மைக் காப்பாற்ற வேண்டுமெனில் அவர் மேலான இடத்தில் இருக்கவேண்டும். மேலும், அவருக்கு இந்தக் கிணற்றுக்குழியிலிருந்து வெளியேறும் வழிவகைத் தெரிந்திருக்க  வேண்டும். அத்தகையவர் நமது கடவுளான, கருணை வடிவான லக்ஷ்மிநரசிம்மர். எனவே, எனது கடவுளே!!! லக்ஷ்மிநரசிம்மரே!!! எனக்குக் கைக்கொடுத்து உதவி அருளுங்கள் என்று வேண்டுகிறார்.

நாம் ஏன் இந்த ஆழந்தெரியாக் கிணற்றுக்குள் விழுந்தோம்? இந்த அரவங்கள் நம்மை எவ்வாறு துன்புறுத்துகின்றன என்பதை பின்னர்  சில துதிகளில் ஆதிசங்கரர் விளக்குகிறார். நாம் இவை அனைத்தையும் ஒன்று சேர கற்று, இதன் உட்பொருளை உணரவேண்டும்.

வெள்ளி, ஜூலை 08, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 3 (பிறவியென்னும் பெருங்காடு)

ஸம்ஸார கோர கஹனே சரதோ முராரே 
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்தித்தஸ்ய |
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய  
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (3)

ஸம்ஸார - இந்தப் பிறவியென்னும், கோர - அச்சமூட்டும், கஹனே - இருண்ட காட்டினில், சரதோ - சென்றுகொண்டிருக்கிறேன், முராரே - முரன் என்னும் அரக்கனை அழித்தவரே, மார - (தகாத) காமமென்னும், உக்ர - தீவிரமான, பீகர - அச்சமூட்டும், ம்ருக - விலங்கு, ப்ரவர - கொடிய, ஆர்த்திதஸ்ய - துன்பத்தை விளைவிக்கும், ஆர்த்தஸ்ய - துன்புறுகிறேன், மத்ஸர - பொறாமை போன்ற குணங்கள், நிதாக - தீ, நிபீடிதஸ்ய - என்னை பற்றி இருப்பதால், லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

பிறவியென்னும் அச்சமூட்டும் இருண்ட காட்டினுள் நான் சென்றுகொண்டிருக்கிறேன். (தகாத) காமமென்னும் கொடிய விலங்குகளாலும், பொறாமை போன்ற காட்டுதீயாலும் நான் மிகவும் துன்புறுத்தப் படுகிறேன். முரன் போன்ற பல அசுரர்களை கொன்றொழித்தவரே, திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

இந்தத் துதியிலிருந்துத் தொடங்கி அடுத்த பல துதிகளில் நாம் இருக்கும் இந்த உலகியல்வாழ்க்கையின் உண்மை நிலையை ஆதிசங்கரர் எடுத்துரைக்கிறார். இங்கு, இந்தப் பிறவியை ஒரு அச்சமூட்டும், இருண்ட காடாக உருவகப்படுத்துகிறார் (அஞ்ஞானம் அல்லது அறியாமையே இந்த இருள்). காடு என்றால் விலங்குகளும், காட்டுத்தீயும் இருக்குமல்லவா? நம்மால் அடக்கமுடியாத தகாத காமமே இந்த காட்டில் உள்ள கொடிய விலங்கு. நாம் மற்றவர் மீது கொண்டிருக்கும் பொறாமையே நம்மை எரிக்கும் காட்டுத்தீ. இந்த இருண்டக் காட்டினுள் இவ்வாறு விலங்குகளிடமிருந்தும், காட்டுத்தீயிலிருந்தும் நம்மைக் காக்க லக்ஷ்மிநரசிம்மரால் மட்டுமே முடியும். அவர் முன்பே (எவ்வாறு காடும், விலங்கும், காட்டுத்தீயும் நம்மை துன்புறுத்துகின்றதோ, அவ்வாறே முன்பு தேவர்களைத் துன்புறுத்திய) முரன் என்ற அரக்கனை அழித்தவர். எவ்வாறு, முன்பு தேவர்களைக் கர்த்தரோ, அவ்வாறே, தனது அடியவர்கள் துன்பமடைந்து, தன்னை சரண் புகுந்தால் அவர் காத்து அருளுவார். அந்த லக்ஷ்மிநரசிம்மர் இந்த பிறவிப்பெருங்கடலிலிருந்து கைக்கொடுத்து மீட்டு அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

வியாழன், ஜூலை 07, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 2 (தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவன்)

ப்ரஹமேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீட கோடி 
சங்கட்டித்தாங்க்ரி கமலாமல காந்தி காந்த |
லக்ஷ்மீலஸத் குச ஸரோருஹ ராஜஹம்ஸ 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (2)


ப்ரஹ்ம - பிரமன் (நான்முகக்கடவுள்), இந்த்ர - இந்திரன் (தேவர்களின் தலைவன்), ருத்ர - பரமசிவன், மருத் - மருத் கணங்கள், அர்க்க - கதிரவன், கிரீட - மகுடங்கள், கோடி - கோடிக்கணக்கான, சங்கட்டித - குவிந்து, அங்க்ரி - திருப்பாதங்கள், கமல - தாமரை, அமல - தூய்மையான, காந்தி - ஒளியால், காந்த - மனங்கவர், லக்ஷ்மீலஸத் - திருமகளை அணைத்துக்கொண்டு, குச - தாயாரது திருமார்பாகிய, ஸரோருஹ - தாமரையில், ராஜஹம்ஸ - அன்னப்பறவை போன்றவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள்கராவலம்பம் - கைக் கொடுத்து.

பிரமன், இந்திரன்,  பரமசிவன், மருத் கணங்கள், கதிரவன் போன்ற கோடிக்கணக்கான தேவர்களின் மகுடங்கள் கூடி சேர்ந்து ஒளிவிடுவதால், மேலும் ஒளியூட்டப்பட்ட, தாமரை மலரைப்போன்ற சிவந்த, தூய்மையான, மனங்கவர் திருப்பாதங்களை உடையவரே!!! திருமகளை அணைத்துக்கொண்டு, தாமரை மலர் போன்ற அவரது (தாயாரது) திருமார்பகத்தில் மீது விளையாடும் ஒரு சிறந்த அன்னப்பறவையைப்போல இருப்பவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

பகவானின் பெருமைகளை முதல் துதியில் ஒருவாறு கூறிய ஆதிசங்கரர், இந்தத் துதியில் அதை மீண்டும் விரித்துரைக்கிறார். முதல் இரண்டு  அடிகளால், நரசிம்மரே தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என்கிறார். படைக்கும் கடவுள் பிரமன், அழிக்கும் கடவுள் பரமசிவனார், தேவர்களின் அரசனான இந்திரன், (அவனுக்குத்  துணையாக தேவர்களின் படையில் இருக்கும்) மருத் கணங்கள், இந்த பூமிக்கு ஒளி வழங்கும் கதிரவன் போன்ற மிகச்சிறந்த தேவர்களும் நரசிம்மரை பணிந்து வணங்குவர். அப்பொழுது அந்தக் கோடிக்கணக்கான தேவர்களின் மகுடங்களிலிருந்து வீசும் ஒளியானது, நரசிம்மரின்  தாமரைப் போன்ற சிவந்த திருப்பாதங்களுக்கு மேலும் ஒளியூட்டும். அத்தகைய தூய்மையான பாதங்களை நாம் பற்றினால் நற்பேறு பெறலாம்.

அவர் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமென்றால் நம் போன்றோர் அவரை அணுக இயலுமா? இதற்கு மூன்றாம் அடியில் விளக்கம் அளிக்கிறார். அவர் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் ஆயினும், நமக்கெல்லாம் தாயான திருமகள் கேள்வன். எவ்வாறு ஒரு அன்னமானது தாமரை மலரில் விளையாடுமோ, அவ்வாறே பகவான் தாயாரான திருமகளுடன் போகம் தூய்ப்பவர். திருமகளை முன்னிட்டு நாம் அவரைப் பணிந்தால் நம்மைக் கைவிடமாட்டார். எனவேதான், இந்த துதி முழுவதிலும் நரசிம்மரை மட்டும் குறிக்காது 'லக்ஷ்மீநரசிம்மரை' வணங்குகிறார் ஆதிசங்கரர்.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 1 (லக்ஷ்மிநரசிம்மரே சரணம்!!!)

ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ரபாணே 
போகீந்த்ர போக மணிரஞ்சித புண்யமூர்த்தே |
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத 
லக்ஷ்மிநரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || (1)

ஸ்ரீமத் - செல்வம் நிறைந்த, பயோநிதி - பாற்கடலில், நிகேதன -இருக்கின்ற, சக்ரபாணே - (சுதர்சனம் என்னும்) சக்கரத்தை கையில் ஏந்தியவரே, போகீந்த்ர - அரவங்களின் அரசன், போகமணி - (அரவங்களின் தலையில் இருக்கும்) நாக மணி, ரஞ்சித - ஒளியினால் ஒளியூட்டப்பட்ட, புண்யமூர்த்தே - நற்கருமமே வடிவானவரே, யோகீச - யோகங்களுக்குத் (யோகிகளுக்கு) தலைவரே, சாஸ்வத - என்றென்றும் நிலைநின்று இருப்பவரே, பவாப்தி - பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப்பெருங்கடலை, போத - கடக்க உதவும் தோணி போன்றவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமாமகள் துணைவரே நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி -அருளுங்கள், கராவலம்பம் - கைக் கொடுத்து.

செல்வங்கள் சேர் பாற்கடலில் இருப்பவரே, கையில் சுதர்சனம் என்னும் சக்கரப் படையை தாங்கியுள்ளவரே, அரவங்களின் அரசனான ஆதிசேடன் தலையிலிருக்கும் நாகமணி உமிழும் ஒளியினால் ஒளியூட்டப்படுபவரே, நற்கருமமே  வடிவானவரே, யோகங்களுக்கும், யோகிகளுக்கும் தலைவரே, என்றென்றும் நிலைநின்று பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப்பெருங்கடலை கடக்க உதவும் தோணி போன்றவரே, திருமாமகள் தன்னோடு பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்துஅருளுங்கள்!!!

இங்குள்ள (இந்த சம்சாரத்தில் உள்ள) செல்வங்கள் நிலையற்றவை; அங்குள்ள செல்வங்களுடன் ஒப்பிடுகையில் இவை வெறும் தூசுக்கு நிகரானவை. எனவே, செல்வம் சேர் பாற்கடலில் இருப்பவரே என்று அழைக்கிறார். 

பகவான் சக்கரம் (சுதர்சனம்), சங்கு (பாஞ்சசன்யம்), கதை (கௌமோதகம்), வாள் (நந்தகம்) மற்றும் வில் (சார்ங்கம்) ஆகிய ஐந்து ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். அவர் நமது எதிரிகளை விரைந்து வந்து ஒட்டிவிடுவார் என்பதால் சக்கரம் ஏந்தியவரே என்று அழைக்கிறார் (இங்கு சக்கரம் மற்ற நான்கு ஆயுதங்களுக்கும் பிரதிநிதியாகும். சக்கரம் என்று சொல்லும்பொழுது ஐந்து ஆயுதங்களையும் சேர்த்துக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்). 

நாம் அறியாமை என்னும் இருளால் சூழப்பட்டிருக்கிறோம். அவரோ, அரவின் மணியில் ஒளிவீசுகிறார். நமது அறியாமை இருளை அகற்றும் ஒளியாகவும் உள்ளார்.

நாம் நல்ல, மற்றும் தீய கருமங்களினால் தீண்டப்பட்டிருக்கிறோம். இவற்றின் வாயிலாகத்தான் நமக்கு இந்த பிறவியே ஏற்படுகிறது. அவரோ, நற்கருமமே வடிவானவர். நமது கர்ம பலன்களை அடியோடு அறுத்து நம்மைக் காப்பார்.

கர்ம, ஞான, பக்தி மற்றும் சரணாகதி ஆகிய வழிமுறைகளைக்  (யோகங்களைக்) கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவரை அடைய முடியும். ஏனெனில், அவர் அனைத்து யோகங்களுக்கும், அதை முறையாகக் கடைப்பிடிக்கும் யோகிகளுக்கும் (அவர்களை) ஆணையிட்டு வழிநடத்தும் தலைவராக உள்ளார்.

இத்தகைய நற்குணங்கள் நிறைந்த நரசிம்மப் பெருமான், என்றோ ஒரு குறிப்பிட்ட காலத்தில்தானே அவதரித்தார். அவர் எவ்வாறு இன்று நம்மைக் காப்பார்? என்ற ஐயம் எழுந்துவிடாமல் இருக்க, 'என்றென்றும் நிலைநின்று இருப்பவர்' என்று குறிப்பிடுகிறார்.

தொடக்கமே காண முடியாத அனாதி காலமாய் சேர்த்து வைத்திருக்கும் கர்மங்களின்படி நாம் மீண்டும் மீண்டும் இந்த பிறவிப்பெருங்கடலில் பிறக்கிறோம் (இறக்கிறோம்). இந்த தொடர்ச்சியிலிருந்து பகவான் ஒரு தோணியாய் வந்து நம்மைக் கரையேற்றுகிறார்.

அத்தகைய பெருமானை நாம் நேரடியாக சென்று வேண்டுவதை விட, கருணையே வடிவான திருமகளை முன்னிட்டு வேண்டினால், வேண்டுவது கிடைப்பது திண்ணம். பெருமான் கருணையற்றவர் அல்லர். எனினும், கணக்கற்ற பிறவிகள் தோறும் நாம் அவர் கூறியதை கேட்காமல் கர்ம வினைகளால் உந்தப்பட்டு பல பாவங்களை சேர்த்திருக்கிறோம். எவ்வாறு தவறிழைத்த ஒரு குழந்தை தன் தாயை முன்னிட்டுக்கொண்டு தந்தையிடம் மன்னிப்பு கேட்குமோ, அவ்வாறே நாமும் திருமகளை முன்னிட்டுக்கொண்டு இறைவனை அடிபணிவதே சிறந்தது. எனவே, நரசிம்மரை மட்டும் வேண்டாது, திருமகளையும் சேர்த்து 'லக்ஷ்மிநரசிம்மரின்' அடி பணிகிறார்  ஆதி சங்கரர்.

இந்த முதல் துதியிலேயே, ஆதிசங்கரர்  தான் வேண்டுவது தனது உடலில் உள்ள கையை அல்ல; மாறாக, இந்த பிறவிப்பெருங்கடலில் இருந்து விடுதலையையே என்பதை தெளிவாகக் கூறுகிறார். இந்த துதி முழுவதும், நம் கர்மவினை காரணமாக பிறக்கும் இந்த சம்சாரத்தை கொடிய மிருகங்கள் நிறைந்த காடாகவும், கொடிய நச்சு மரமாகவும், நஞ்சினை உமிழும் அரவாகவும், நெருப்பாகவும், நீர்ச்சுழல்கள் நிறைந்த கடலாகவும் உருவகப்படுத்தி  இதில் உள்ள துன்பங்களை நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

திங்கள், ஜூலை 04, 2016

ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - முன்னுரை

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த  பாரத தேசமெங்கும்  நிலைநிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி "ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்" ஆகும். இந்த துதி பிறந்த வரலாற்றை இந்தப் பதிவிலும் அதன் பொருளை பின்வரும் பதிவுகளிலும் காண்போமாக.

முதலில் இந்த துதியின் பெயர் காரணத்தை அறிவோம். வடமொழியில் 'கரம்' என்றால் 'கை' என்று பொருள் (இன்று நடைமுறைத் தமிழிலும் இச்சொல் கை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது). 'அவலம்ப' என்றால் 'ஆதாரம்' அல்லது 'தாங்குதல்' என்று பொருள். 'கராவலம்பம்' என்றால் 'நம்மைக் கைக்கொடுத்துத் தாங்குதல்' அல்லது 'நமக்குக் கைக்கொடுத்து உதவுதல்' என்று பொருள் கொள்ளலாம். இந்த துதியில் ஆதிசங்கரர், இந்த சம்சாரத்தில் விளையும் துன்பங்களை எடுத்துக்கூறி, பகவான் 'ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை' இந்த சம்சாரத் தளையிலிருந்து காப்பாற்ற தனக்குக் கைக்கொடுத்து உதவும்படி வேண்டுகிறார். இதன்  மூலம், ஆதிசங்கரர் நமக்கெல்லாம் பிரதிநிதியாக பகவானிடம் வேண்டிக் கொள்கிறார்.

துதி பிறந்த வரலாறு:
இந்த துதி பிறந்ததற்கு காரணமாக ஆதிசங்கரரின் வாழ்விலிருந்து இருவேறு நிகழ்ச்சிகள் பெரியோர்களால் வழங்கப்படுகின்றன. இவை இரண்டையும் சுருக்கமாகப் பார்ப்போம்.


1. மண்டன மிஸ்ரருடன் வாதிட்டது, பின்னர் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தது:
அத்வைத கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு, ஆதிசங்கரர் பலருடன் (மற்ற கொள்கைகளை பின்பற்றுவோருடன்) வாதம் புரிந்து அவர்களை வென்றார். அவற்றுள் தலையானவர் பிற்காலத்தில் 'சுரேஷ்வராச்சார்யார்' என்று பெயர்பெற்று விளங்கிய மண்டன மிஸ்ரர் ஆவார். இவர் பூர்வ மீமாம்சை என்ற கொள்கையைச் சார்ந்திருந்தார். ஆதிசங்கரர் இவருடன் அத்வைதமே சிறந்த கொள்கை என்று வாதிட வந்தார். இந்த வாதத்தின் பொழுது, மண்டன மிஸ்ரரின் மனைவியான உபாயபாரதி நடுவராக இருந்தார்.

நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததோடு அல்லாமல், ஆதிசங்கரர் மற்றும் தமது கணவர் வாதிடும் பொழுது அதற்கு நடுவராக இருந்தும், பின்னர் ஆதிசங்கரருடனேயே வாதிடும் அளவிற்கு நமது சனாதன தர்மத்தின் பெண்கள் அன்று விளங்கினர். ஏதோ, நமது மதத்தில்பெண்களுக்கு உரிமைகள் இல்லை,அவர்களை அடுப்படியில் வைத்து அடிமைப் படுத்தவேண்டும் என்று மனுஸ்மிருதி கூறுவதாகப் பிதற்றுபவர்கள் இதை இருமுறை படிக்கட்டும். 

வாதத்தில் மண்டன மிஸ்ரர் தோல்வி  அடைந்தார். அன்றைய பழக்கத்தின் படி அவர் ஆதிசங்கரரைத் தமது குருவாக ஏற்று துறவறம் பூணவேண்டும். தனது கணவன் துறவறம் ஏற்பதை தாங்கவொண்ணாத உபயபாரதி, 'கணவனும் மனைவியும் இணைபிரியாதவர்கள். ஒருவரை மட்டும் வாதத்தில் வெல்வது ஏற்க முடியாது. எனவே, தன்னையும் வாதத்தில் வெல்லவேண்டும்' என்று ஆதிசங்கரரிடம் கூறினாள். இதை ஏற்ற சங்கரர், உபயபாரதியுடன் வாதம் புரிந்தார். ஆதிசங்கரரை மறை ஞானத்தில் வெல்லமுடியாது என்று உணர்ந்த உபயபாரதி அவரிடம் கணவன்-மனைவி சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, துறவியான அவரால் அதற்கு பதில் உரைக்க இயலவில்லை (அனைத்தையும் அறிந்த அவருக்கு இதற்கான பதில் தெரிந்திருப்பினும், தமது துறவறத்திற்கு களங்கம் வரும் என்பதால் நேரடியாக பதில் உரைப்பதைத் தவிர்த்தார் என்றே நாம் பொருள் கொள்ளவேண்டும்). இதற்கு பதில் கூறுவதற்கு தமக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆதிசங்கரர், தான் இல்வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்து இதை அறிவதே சிறந்ததாகும் என்று தீர்மானித்தார். அவ்வாறே, வேட்டைக்கு வந்து அங்கு உயிர் நீத்த ஒரு அரசனின் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து உட்புகுந்தார். தமது சீடர்களிடம், தனது உடலைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு அரசனின் அரண்மனைக்குச் சென்றார்.

அந்த அரசனோ ஒரு கொடுங்கோலன்;  அவனது ஆட்சியில் மழையின்றி, வளமின்றி அவன் நாடு தவித்தது (திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்). ஆதிசங்கரர் அந்த நாட்டில் கால்வைத்ததுமே, மழைப் பொழியத் துவங்கியது, வளம் பெருகியது. இந்த மாற்றங்களையும், தம்முடன் பழகுவதில் உள்ள மாற்றங்களையும் உணர்ந்த அந்நாட்டின் அரசி ஐயம்கொண்டாள். தமது அமைச்சருடன் ஆலோசித்த அவள், வந்திருப்பது தன் கணவன் அல்ல, வேறு ஏதோவொரு சிறந்த ஆன்மா; இவர் தமது  நாட்டை விட்டு நீங்கினால் மீண்டும் பஞ்சமும்,  துன்பமும் ஏற்படுமென்று அஞ்சினாள். எனவே, மந்திரியும், அரசியும் ஆதிசங்கரரை அரசனின் உடலிலேயே இருக்க வைப்பதற்கு திட்டம் தீட்டினர். அனைத்துப் படைவீரர்களையும் அழைத்து, நாட்டில் ஏதோவொரு துறவியின் உடல் இருந்தால், அதை உடனே எரித்துவிடுமாறு  கூறினர். அதன்படி, வீரர்களும் ஆதிசங்கரரின் உடலுக்குத் தீவைத்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் உடனே அரசனின் உடலை விடுத்து தன்னுடலுக்குள் புகுந்தார். ஆனால், அதற்குள் தீயானது அவரது கைகளை எரித்துவிட்டது. தமக்கு 'கரங்கள்' (கைகள்) கொடுத்தருள, ஆதிசங்கரர் பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரிடம் வேண்டிய துதியே இந்த 'கராவலம்ப ஸ்தோத்திரம்' என்பது முதல் வரலாறு.
இந்த துதியின் முடிவில் கைகள் கிடைக்கப்பெற்ற ஆதிசங்கரர் உபயபாரதியிடம் வாதம் செய்ய  சென்றார். இனி தன்னால் அவரை வாதத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி வாதம் புரியாமலேயே தன் கணவர் துறவறம் பூண அனுமதி அளித்தார். அந்த உபயபாரதியே, சிருங்கேரி சாரதா பீடத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பிகை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

2. காபாலிகன் நரபலி கொடுக்க முனைந்தது:
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த (சில இடங்களில் ஸ்ரீசைலத்தை அடுத்த) காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நரபலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நரபலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை). அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார். தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார். அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது  இரண்டாவது வரலாறு.

வரலாறு எவ்வாறு இருப்பினும், பகவானின் குணங்களைப் போற்றியும், இந்த சம்சாரத் தளையிலிருந்து விடுதலை வேண்டியும் ஆதிசங்கரர் இயற்றிய இந்த அரிய துதியையும் அதன் பொருளையும் பின்வரும் பதிவுகளில் காண்போம்.