ஸம்ஸாரவ்ருக்ஷ மகபீஜமனந்த கர்ம
சாகாஸதம் கரணபத்ரமனங்க புஷ்பம் |
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (6)
ஸம்ஸாரவ்ருக்ஷம் - பிறவியென்னும் பெரிய மரம், அக - பாவம், பீஜம் - விதை, அனந்த கர்ம - எண்ணிலடங்கா வினைப்பயன்கள், சாகா - கிளைகள், சதம் - நூற்றுக்கணக்கான, கரண - புலனுறுப்புக்கள், பத்ரம் - இலைகள், அனங்க - (தகாத) காமம், புஷ்பம் - மலர்கள், ஆருஹ்ய - ஏறினேன், துக்க பலிதம் - துன்பமென்னும் பழங்கள், பததோ - விழுந்துக் கொண்டிருக்கிறேன், தயாளோ - கருணையே வடிவானவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.
பிறவியென்னும் ஒரு கொடிய விஷ மரத்தினில் ஏறிவிட்டேன். என்னுடைய பாவம் என்னும் விதியினால் முளைத்த இந்த மரத்தில், (என்னுடைய) எண்ணிலடங்கா வினைப்பயன்கள் என்னும் நூற்றுக்கணக்கான கிளைகளும், புலனுறுப்புக்கள் என்னும் இலைகளும், (தகாத) காமம் என்னும் மலர்களும், துன்பங்கள் என்னும் பழங்களும் உள்ளன. காமத்தின் (இந்த மரத்தின் மலர்கள்) வாசனையால் தூண்டப்பட்டு, துன்பங்கள் என்னும் பழங்களை சுவைத்தேன். அதனால், மேலிருந்து கீழ்நோக்கி தலைகீழாக விழுந்துகொண்டு இருக்கிறேன். கருணையே வடிவானவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!
பிறவியென்னும் ஒரு கொடிய விஷ மரத்தினில் ஏறிவிட்டேன். என்னுடைய பாவம் என்னும் விதியினால் முளைத்த இந்த மரத்தில், (என்னுடைய) எண்ணிலடங்கா வினைப்பயன்கள் என்னும் நூற்றுக்கணக்கான கிளைகளும், புலனுறுப்புக்கள் என்னும் இலைகளும், (தகாத) காமம் என்னும் மலர்களும், துன்பங்கள் என்னும் பழங்களும் உள்ளன. காமத்தின் (இந்த மரத்தின் மலர்கள்) வாசனையால் தூண்டப்பட்டு, துன்பங்கள் என்னும் பழங்களை சுவைத்தேன். அதனால், மேலிருந்து கீழ்நோக்கி தலைகீழாக விழுந்துகொண்டு இருக்கிறேன். கருணையே வடிவானவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!
பிறப்பும், இறப்பும் மாறி மாறி வந்து நம்மை வருத்தும் இந்தப் பிறவியை மிகப்பெரியதொரு மரமாக ஆதிசங்கரர் உருவகப்படுத்துகிறார். நாம் பற்பல பிறவிகளாய் புரிந்துள்ள பாவங்களே இந்த மரத்தின் விதையாகும். பாவமென்னும் விதையிலிருந்து முளைக்கும் எண்ணிலடங்கா வினைப்பயன்களே இந்த மரத்தின் நூற்றுக்கணக்கான கிளைகள். நமது (கண், காது முதலான) புலனுறுப்புக்கள் இந்தக் கிளைகளில் தோன்றும் இலைகளாகும். நமது முற்பிறவிக் கருமங்களின் விளைவால் அந்தப் பிறவிகளில் என்னென்னப் புலனின்பங்களில் ஈடுபட்டிருந்தோமோ, அதே புலனின்பங்களில் இப்பிறவியிலும் நாட்டம் வரும். இதற்கு "வாசனை" என்று பெயர். மரங்களில் வாசனையைத் தருவது மலர்கள். இந்த பிறவியென்னும் மரத்தில், தகாத காமத்தில் இச்சையே மலர்கள் (இந்த மலர்கள் நம் முற்பிறவிக் கருமத்தில் வாசனையைத் தூண்டும்). துக்கமும், துன்பமுமே இந்த மரத்தில் பழுக்கும் பழங்கள். இத்தகைய மரத்தில் ஏறிய நாம், வினைப்பயன்களால் நம் வாசனைத் தூண்டப்பட்டு இந்த துக்கமென்னும் பழத்தை உண்கிறோம். அதை உண்டதனால் இந்த மரத்திலிருந்து கீழே விழுகிறோம் (அதாவது, மீண்டும் மீண்டும் கருமங்களும், அதனால் வினைப்பயன்களும், அதனால் துக்கமும், அதனால் மேலும் கருமங்களும் என இந்தப் பிறவிச் சக்கரத்தில் சுழன்று, நரகமென்னும் குழியில் விழுவதை இவ்வாறு உருவகிக்கிறார்). இவ்வாறு துன்பத்திலிருக்கும் தம்மை (நம்மை), திருமகள் கேள்வனாம், கருணையே வடிவானவராம் லக்ஷ்மி நரசிம்மர் கைக்கொடுத்துக் காக்க வேண்டுமென்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.
நமது உபநிடந்தங்களிலும், பகவத் கீதையிலும் இந்தப் பிறவியானது தலைகீழாக உள்ள ஒரு மரமாக உருவகிக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீமத் பகவத்கீதை 15-வது அத்தியாயத்தின் தொடக்கத்தில் பகவான் இந்தப் பிறவியை இவ்வாறு வர்ணிக்கின்றார் (தமிழாக்கம், பாரதியாரின் பகவத் கீதை உரையிலிருந்து எடுக்கப்பட்டது).
ஊர்த்வ மூலம் அதஹ் சாகம் அஸ்வத்தம் ப்ராஹூர் அவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்னானி யஸ் தம் வேத ஸ வேதவித் (15.1)
அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளும் உடையதோர் அரசமரத்தைப் போன்றது என்பர். இதன் இலைகளே வேதங்கள்.அதை அறிவோனே வேதமறிவோன்.
அதஸ் சோர்த்வம் ப்ரஸ்ர்தாஸ் தஸ்ய சாகா
குண ப்ரவ்ருத்த விஷய ப்ரவாள:
அதஸ் ச மூலான்யனுசந்ததானி
கர்மானுபந்தீனி மனுஷ்ய லோகே (15.2)
அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி, விஷயத் தளிர்களுடன், பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.
இதை தலைகீழான மரமாக உருவகிக்கக் காரணம்: 'இந்தப் பிறவி எவ்வாறு உண்டாயிற்று என்ற கேள்வியில் தொடங்கி இந்த மரத்தின் மூலத்தை அறிய முற்படுபவன் மேலே உயருகிறான்; தலைகீழான மரத்தின் பழங்கள் கீழே இருக்கும். அதை சுவைக்க முற்படுபவன் தன்னிலையினின்றும் கீழ்நோக்கி வீழ்கிறான்'.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக