ஞாயிறு, ஜனவரி 22, 2012

திருவள்ளூர் மாஹாத்மியம்

இன்று தை அமாவாசை (22 ஜனவரி 2012). இன்றும், ஆடி அமாவாசையிலும் எங்கள் குல தெய்வமான திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றுவது வழக்கம். அந்த பூஜையை முடித்துவிட்டு இன்றையை இடுகையை தொடங்குகிறேன். இந்த நன்னாளில் திருஎவ்வுள் என்ற திருவள்ளூரின் ஸ்தல புராணத்தையும், வீரராகவரின் பெருமைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருவள்ளூர் வீரராகவர் மூலவர்
ஸ்தல பெயர்: திருஎவ்வுள் 
பெருமாள் பெயர்: எவ்வுள் கிடந்தான் என்னும் ஸ்ரீ வைத்திய வீரராகவர்
தாயார் பெயர்: கனகவல்லி, வஸுமதி
தீர்த்தம்: ஹ்ருத்தாபநாசினி 
விமானம்: விஜய கோடி விமானம்

ஸ்தல புராணம்:
இந்த ஸ்தலத்தில் சாலிஹோத்ர மகரிஷி பகவானை ஆராதித்து வந்தார். அவர் வருடம் முழுதும் பகவானை வழிபடுவார். வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே உண்பார் (அந்த நாள் தை அமாவாசை என்று கூறுவர்). ஒரு அமாவாசை அன்று அவர் உணவு உண்பதற்கு முன் ஒரு முதியவர் அவரிடம் உணவு கேட்டார். வந்தவருக்கு இல்லை என்று கூறாமல் தன்னிடம் இருந்த உணவு அனைத்தையும் அந்த முதியவருக்கு வழங்கி விட்டு மீண்டும் ஒரு வருடம் ஆராதனத்தில் கழித்தார். அடுத்த வருடமும் அமாவாசை அன்று அதே முதியவர் வந்து உணவு கேட்க, இருந்தது அனைத்தையும் மீண்டும் வழங்கினார் சாலிஹோத்ர முனிவர். அந்த முதியவர் உணவு உண்ட பிறகு, ஓய்வு எடுக்க "எவ்வுள்" என்று வினவினார் (அதாவது நான் எந்த உள்ளில் படுக்க? என்று கேட்டார்). சாலிஹோத்ர முனிவரும் தனது ஆஸ்ரமத்தில் இடம் காட்டினார். பின்னர் முதியவராக வந்த பகவான் தனது சுய ரூபத்தை முனிவருக்கு காட்டி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். சாலிஹோத்ர முனிவரும், தங்கள் இதே கோலத்தில் இங்கேயே பள்ளி கொண்டு அடியவருக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டார். அந்த சாலிஹோத்ர மகிரிஷியின் ஆஸ்ரமமே திருஎவ்வுள் ஸ்தலம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் திருஎவ்வுளூர் என்பது திருவள்ளுராக மருவியது. பகவானும் வீர சயனத்தில் பள்ளி கொண்டு, சாலிஹோத்ர மகரிஷியை தனது அருகிலேயே வைத்துகொண்டு அருள் பாலிக்கிறார்.

உற்சவர் ஸ்ரீவீரராகவர்
பின்னர் இராஜா தர்மசேனனின் புதல்வியாக வஸுமதி என்ற பெயரில் தோன்றிய மகாலக்ஷ்மியை இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டு இங்கேயே (மாமனார் வீட்டிலேயே) வசிப்பதாக வாக்கு கொடுத்து, அதன் படி இங்கே எழுந்தருளி இருப்பதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.

தீர்த்த மஹிமை:
இத்தலத்தின் தீர்த்தம் "ஹ்ருத்தாபநாசினி" என்று அழைக்க படுகிறது. நமது பாவங்களினால் மனதில் எழும் தாபங்களையும் தீர்க்க வல்லது இந்த தீர்த்தம். தக்ஷனை அழித்த சிவபெருமான், தனது பிரம்மஹத்தி தோஷத்தை இந்த தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை வணங்கி தீர்த்துக்கொண்டதாக புராணம். இந்த தீர்த்தத்தின் கரையில் "தீர்தேஸ்வரர்" என்ற பெயரில் ஒரு சிவஸ்தலமும் உள்ளது. பாரத போர் முடிந்து பாண்டவர்களும் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது தாபம் தீர பெற்றதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.

பாசுரங்கள்:
இந்த திவ்ய தேசத்தை திருமங்கை ஆழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும் பாடி உள்ளனர். திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். அதில் அவர் பகவானின் பெருமைகளை இராமனாகவும், அவனது எளிமையை கண்ணனாகவும் பாடி உள்ளார்.
காசை ஆடை மூடி ஓடி காதல் செய்தானவன் ஊர்
               நாசமாக நம்ப வல்ல நம்பி நம்பெருமான்
வெயினன்ன தோள் மடவார் வெண்ணை உண்டான் இவனென்று
               ஏச நின்ற எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே!!

காஷாயம் மூலம் (காசை ஆடை) தன்னை மூடிக்கொண்டு சீதை மேல் தவறான காதல் கொண்டு ஓடி வந்த இராவணின் ஊர் நாசமாக போகும் வண்ணம் போர் புரிந்தான் இராமன். அந்த பரம்பொருளே, ஆய்ச்சிமார்களால் வெண்ணை திருடன் என்று அழைக்கும் வண்ணம் எளியவனாகவும் உள்ளான் (ஸ்ரீ கிருஷ்ணா அவதாரத்திலே). 

இன்னொரு பாசுரத்தில், 
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
              மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூதாகி மன்னர்காகி பெரு நிலத்தார்
             இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே!!

இராமானாக ஹனுமான் மூலமாக இராவணனிற்கு தூது அனுப்பிய பகவான், தன்னை அண்டி வந்த பாண்டவர்க்காக, தானே தூதனை சென்றான் (கௌரவர்கள் அவனை கிருஷ்ணன் என்று கூட கூறவில்லையாம் - பாண்டவர் தூதன் வந்திருக்கிறான் என்றார்களாம்). இன்று கூட காஞ்சிபுரத்தில், திருப்பாடகம் என்னும் திவ்ய தேசத்தில், பகவான் பாண்டவர் தூதன் என்னும் திருநாமத்தில் எழுந்தருளியுள்ளார்.

தவறு இழைத்தால், தவறு செய்தவனின் ஊரையும் அழிக்க வல்ல பரம்பொருள், தனது அடியவர்களின் பக்திக்கு இரங்கி எளியவனாக வருகிறான், ஏச்சுக்கள் கேட்கிறான், அனைத்தையும் பொறுக்கிறான். இதன் அர்த்தம், நாம் இராவணனாக இல்லாமல் கோபியர்கள், கோபர்கள் போல தூய மனதுடன் அவனை நினைத்தால், அவன் நமக்காக இரங்கி, நம் அளவிற்கும் இறங்கி வருகிறான்.

வைத்திய வீரராகவர்:
இத்தலத்தில் பகவான், நமது நோய்களை போக்கும் வைத்தியராக இருக்கிறார். இங்கே, உப்பு மிளகு கொட்டுதல், ஹ்ருத்தாபனாசினியில் வெல்லம் கரைத்தல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக அடியவர்களால் செய்ய படுகிறது. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் தீராத வயிற்று வலியால் துன்பப்பட்டார். பின்பு வீரராகவ சுவாமியை வணங்கி தன் வயிற்று நோய் தீர்ந்து, சுவாமிக்கு பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

எனக்கு தெரிந்த நண்பன் ஒருவனுக்கு நடந்த உண்மை நிகழ்ச்சி: அவனுக்கு கைக்கு அடியில் ஒரு கட்டி வந்து, பனியன் கூட அணிய முடியாமல் இருந்தான். பல சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் போனது. அவனது உறவினர் ஒருவர் கூறியபடி, திருவள்ளூர் வந்து, வேண்டி கொண்டான். ஒன்று இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே அவனது கட்டி மறைந்து விட்டது.

இந்த தை அமாவாசை நன்னாளில், வீரராகவர் நமது உடல் நோய் மட்டும் அல்லாது, காமம், கோபம் முதலிய மன நோய்களையும் அழிக்க வேண்டுவோம்!!! 

ஞாயிறு, ஜனவரி 15, 2012

கேசவன் தமர்...

கேசவன் தமர் என்று தான் சுவாமி நம்மாழ்வாரின் பன்னிரு திருநாம பாசுரங்கள் தொடங்குகின்றன. பன்னிரு திருநாமங்களில் முதன்மையானது கேசவ நாமம். கேசவ மூர்த்தி தனது நான்கு கரங்களிலும் சக்கரம் ஏந்தி நம்மை கிழக்கு திசையில் காக்கிறார். இவர் நாகப்பழம் போன்ற நிறம் உடையவர் (புரஸ்தாத் கேசவ: பாது சக்ரி ஜாம்பூனத: பிரப:). ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரனாமமே கேசவனது பெருமைகளை சொல்ல வந்தது என்கிறார் பீஷ்மாச்சர்யர் (இதீதம் கீர்தநீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன:). சந்த்யாவந்தன முடிவில் கூட நாம் "ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி" என்று சொல்கிறோம். இதன் பொருள் "எவ்வாறு ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையானது கடலையே சென்று அடைகிறதோ அதை போல அனைத்து தெய்வங்களுக்கு செய்யும் நமஸ்காரமும் கேசவனையே சென்று அடைகிறது.  மற்றொரு பிரபலமான ஸ்லோகம் "சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ஸ்ரிஜ்ய புஜம் உச்யதே, வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்".  (இது உண்மை உண்மை என்று கைகளை உயர்த்தி சொல்லுங்கள் - வேதங்களை காட்டிலும் உயர்ந்த சாஸ்திரம் இல்லை, கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் ஒன்று இல்லை).

வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களின் உபன்யாசத்தில் கேட்டது: ஒரு திருநாமம் என்றால் கீழ்கண்ட நான்கு வகைகளில் தான் பகவானை குறிக்கும்:
1. ரூபம்
2. ஸ்வாபாவிக தன்மை
3. குணம்
4. லீலை (திருவிளையாடல்)

பொதுவாக திருநாமங்களுக்கு பல பொருள்கள் உண்டு. பல திருநாமங்கள் மேற்கண்ட நான்கில் எதாவது ஒரு வகையை மட்டும் சேரும். சில திருநாமங்கள் 2 அல்லது 3 வகைகளில் பகவானது மேன்மையை சொல்லும். கேசவ நாமம் மட்டுமே பகவானது மேன்மையை மேற்கண்ட நான்கு வகைகளிலும் கூற வல்லது.


அழகிய கேசங்களை உடையவன்
1. ரூபம்: அழகிய முடி கற்றைகளை (கேசங்களை) உடையவன் என்பதால் பகவானுக்கு கேசவன் என்று பெயர். ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்படத்தை பார்த்தால் போதும், இந்த அர்த்தம் எளிதில் விளங்கிவிடும்.

2. ஸ்வாபாவிக தன்மை: பகவானே பரம்பொருள்.
"கா இதி ப்ரஹ்மனோ நாம இஷோஹம் சர்வ தேஹினாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான்"

பரமசிவன் கேசவ நாமத்திற்கு அர்த்தமாக இந்த ஸ்லோகத்தை கூறுகிறார். க என்றால் பிரம்மதேவரை குறிக்கும், ஈச என்றால் நான் (சிவபெருமான்). நாங்கள் இருவரும் உங்களது உடலில் இருந்து தோன்றியதால், உங்களுக்கு கேசவன் (க + ஈச = கேசவன்) என்று பெயர்.

3. குணம்: துன்பங்களை அழித்தல்
கேசவ: க்லேஷ நாசன:
கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)

4. லீலை (திருவிளையாடல்):
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை வதம் செய்ததால் கேசவன்.

கஜேந்திர மோக்ஷம்
கேசவ நாமத்தை விளக்கும் ஒரு முக்கிய சரித்திரம் கஜேந்திர மோக்ஷம். இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அகஸ்த்ய மகரிஷியின் சாபத்தினால் அடுத்த பிறவியில் யானையாக பிறக்கிறான். ஒரு நாள் ஒரு பொய்கையில் நீராடும் பொழுது ஒரு முதலை அந்த யானையின் காலை பிடித்தது. ஆயிரம் வருடங்கள் போராடிய பிறகு தனது முற்பிறவி பயனால். பகவானை துதிக்க, அவரும் கருட வாஹனத்தில் எழுந்தருளி முதலையை கொன்று யானையை காக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அட்டபுயக்கரத்தில் பகவானுக்கு ஆதி கேசவன் என்று திருநாமம். பேயாழ்வருக்கு பகவான் இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷ லீலையை காட்டியதாக தல வரலாறு.

திருவட்டாறு என்னும் தலத்திலும் பகவான் ஆதிகேசவனாக அருள்பாலிக்கிறார். பொதுவாக இடமிருந்து வலமாக சயனிக்கும் பெருமாள், இத்தலத்தில் வடமிருந்து இடமாக சயனதிருக்கிறார். நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை நமது பிறப்பு தளையை முக்தி கொடுப்பவனாக பாடியுள்ளார் (வாற்றாட்டான் அடி வணங்கி மாஞால பிறப்பறுப்பான்...). திருமயிலையிலும் பகவான் மயூரவல்லி நாயிகா சமேத ஸ்ரீகேசவஸ்வாமியாக அருள் பாலிக்கிறார். இன்று தை பொங்கல் (15-01-2012). இந்த மகர சங்கராந்தி நன்னாளில் பகவான் கேசவன் நம் அனைவரையும் காக்கட்டும். கேசவனை பாடி அனைவரும் நலம் பெறுவோம்!!!

வாழி கேசவா!!!

வெள்ளி, ஜனவரி 06, 2012

நாம சங்கீர்த்தனம்!!!

நமோ நாராயணா!!!



பரம்பொருளான பகவானை அடைய பல வழிகள் உண்டு. அவற்றுள் கலியுகத்திற்கு நாம சங்கீர்த்தனம் மிக சிறந்த வழியாக நமது ஆசார்யர்களால் காட்டப்பட்டிருக்கிறது. நாம சங்கீர்த்தனம் செய்வதற்கு எளிமையானது ஆனால் பெரிய பலன்களை அளிக்க வல்லது. நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை சொல்லி மாளாது.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பீஷ்மாச்சர்யர் பகவானின் நாம ஜபமானது "பவித்ரானாம் பவித்ரம்யோ மங்களனாஞ்ச மங்களம்" - பகவத் நாம சங்கீர்த்தனம் நம்மை புனிதமாக்கி நற்பலன்களை கொடுக்கும் என்கிறார். 

பல வழிகள் இருந்தும் ஏன் ஆசார்யர்கள் நாம சங்க்கீர்தனத்திற்கு அதிக முக்யத்வம் தருகிறார்கள்? இதை ஆதிசங்கரர் தனது விஷ்ணுசஹாஸ்ரநாம பாஷ்யத்தில் விளக்குகிறார்.

"அஸ்ய ஸ்துதி லக்ஷனர்ஸ்யார்சநஸ்யாதிக்யே கிம் காரணம் உச்யதே?". ஸ்துதி (ஜபம் / நாம சங்கீர்த்தனம்) மற்றும் அர்ச்சனை மார்க்கம் ஏற்றம் பெற என்ன காரணம்?

"ஹிம்ஸாதி புருஷாந்தர த்ரவ்யாந்தர தேஷ காலாதி நியமானபேக்ஷத்வம் ஆதிக்யே காரணம்". இடம், காலம், உபயோக படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றில் ஹிம்ஸைக்கோ பாவத்திற்கோ இடம் இல்லை. எனவே ஸ்துதி மற்றும் அர்ச்சனை மார்க்கம் ஏற்றம் பெற்றது.

வேறு சில மேற்கோள்களை காண்போம்:

கீதையிலே பகவான் ஸ்ரீகிருஷ்ணர்: "யஜ்ஞானாம் ஜப யஜ்ஞோ'ஸ்மி" - அனைத்து வகை யஜ்ஞங்களிலும் நான் ஜப (நாம சங்கீர்த்தன) யஜ்ஞமாக இருக்கிறேன்

ஸ்ரீ விஷ்ணுபுராணம்: "த்யாயன் கிருதே யஜன் யஜ்ஞைஸ் த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்" - கிருத யுகத்தில் த்யான மார்க்கத்திலும், த்ரேதா யுகத்தில் யஜ்ஞங்களாலும், த்வாபர யுகத்தில் அர்ச்சா வடிவை பூஜிப்பதாலும் கிடைக்கும் பலன் (அதாவது பகவத் அனுக்ரஹம்) கலி யுகத்தில் நாம சங்கீர்த்தனத்தேலேயே எளிதில் கிடைத்துவிடும்.

திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி: "நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்"

நம்மாழ்வாரின் திருவாய்மொழி: "கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் நாமம் திண்ணம் நாரணமே"


பிருஹத் நாராதீய புராணம்: "ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம், கலௌ நாஸ்தியேவ நாஸ்தியேவ நாஸ்தியேவ கதிர் அன்யதா" - ஹரி நாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே எனது ஜீவனம். கலியுகத்தில் வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது!!   

ஆண்டாளின் திருப்பாவை: "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி", "பாற்கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி", "மாயனை மன்னு வட மதுரை மைந்தனை .... வாயினால் பாடி",  "கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ"

சரி. பகவானின் திருநாமங்களை சொல்வதால் என்ன கிடைக்கும்? முன்னமே சொன்னபடி (பவித்ரானம் பவித்ரம்யோ ...) பகவத் நாமம் நம்மை புனிதபடுத்தும். ஸ்ருதி, ஸ்ம்ருதி மற்றும் புராணங்களில் நாம சங்கீர்தனத்தின் எண்ணற்ற பலன்கள் கூறப்பட்டுள்ளன.

ஆண்டாளின் திருப்பாவை: "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகு தருவான் நின்றதுவும் தீயினில் தூசாகும்..."

நம்மாழ்வாரின் திருவாய்மொழி: "கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்". பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்களை யம தூதர்கள் நெருங்கவும் அஞ்சுவர், நமது துயர்கள் அனைத்தும் விலகும்.

"ரூபமாரோக்யமர்தாம்ஸ்ச போகாம்ஷைவானுஷங்கிகான்| ததாதி த்யாயதோ நித்யம் அபவர்கப்ரதோ ஹரி:" - ஹரியை துதித்தால் அவர் அவ்வுலகத்திற்கு முக்தி கொடுப்பதோடு, இவ்வுலகில் ரூபம் (அழகு), ஆரோக்யம், போகம் ஆகியவற்றையும் அருள்கிறார்.


"ஹரிர் ஹரதி பாபானி துஷ்டசித்தைர் அபி ஸ்ம்ருதஹ அணிச்சயாபி ஸம் ஸப்ருஷ்டோ தஹத்யேவஹி பாவகஹ" - ஹரி என்ற திருநாமம் நமது பாவங்களை அபஹரிக்கிறது. நாம் தெரியாமல் கூறினால் கூட பலன் கொடுக்கவல்லது. எவ்வாறெனில், அது சுடும் என்று தெரியாமல் ஸ்பரிசித்தால் கூட நெருப்பு நம்மை சுடுகின்றதே அதைப்போல.

"ஸம்ஸார ஸர்ப்ப ஸந்தஷ்ட நஷ்டசேஷ்டைக பேஷஜம்| கிருஷ்னேதி  வைஷ்ணவ மந்த்ர ஷ்ருத்வா முக்தோ பவேந்நரஹ||" -  ஸம்ஸாரமென்னும் பாம்பு தீண்டுவதால் துன்பத்தில் இருக்கும் ஆத்மாவிற்கு மருந்து போன்றது கிருஷ்ணா என்னும் நாமம். இதை கேட்பதாலேயே (ஷ்ருத்வா) ஒருவர் ஸம்ஸார துன்பத்திலிருந்து முக்தி அடைகிறார். இதை சொல்பவர் அடையும் பலன்களை கேட்கவும் வேண்டுமா??



இனி வரும் இடுகைகளில் பகவத் நாம மேன்மைகளையும் அவன் புகழை விளக்கும் புராணங்களையும் அனுபவிப்போம்.


நமோ நாராயணா!!!