செவ்வாய், செப்டம்பர் 10, 2013

வழிப்பறியில் வல்லவர்!!!

ஆலி நாடு! நீர் வளம், நகர் வளம், நற்குடிமக்கள், இறைப்பண்பு என்று அனைத்திலும் செழித்திருக்கும் இடம் அது. அந்த நாட்டின் மன்னர் கலியன். திருமாலின் சார்ங்கம் எனும் வில்லின் அம்சமாகத் தோன்றியவர் இவர். அழகிய முரண் சுவையாக, இந்த வில்லான கலியன் வேல் வீச்சிலும், வாள் வீச்சிலும் சிறந்து விளங்கினார். பின்னாளில் தனது சொல் வீச்சிலும் அனைவரையும் வென்றார் இவர். 

அந்த ஆலி நாட்டில், ஒரு தேவ கன்னிகை, சாபத்தினால் மானிடப் பெண்ணாகப் பிறந்தார். அவர் குமுதவல்லி எனும் பெயருடன் ஒரு வைணவப் பெரியோரால் வளர்க்கப்பட்டு வந்தார். அவரது அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட கலியன் அவரை மணம்புரிய விழைந்தார். குமுதவல்லி தன்னை மணம்புரிய பல நிபந்தனைகளை விதித்தார். அவற்றில் ஒன்று தினமும் ஆயிரம் வைணவ அடியார்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் - அவ்வாறு ஒரு வருடத்திற்கு செய்யவேண்டும் என்பதே. இதற்கு ஒத்துக்கொண்ட கலியனும் அன்னதானம் செய்யத்தொடங்கினார். சிறிது சிறிதாக அவரது செல்வம் குறையத் தொடங்கியது. தனது பேரரசனிற்குக் கட்ட வேண்டிய கப்பத் தொகையையும் செலவழித்து விட்டார். அன்னதானத்திற்கும், கப்பத்தொகை கட்டுவதற்கும் வழிப்பறியில் ஈடுபடத் தொடங்கினார் கலியன். 

இவரை ஆட்கொண்டு அவரது அவதார நோக்கமாகிய பாடல்களைப் பாட வைக்கத் திருமால் திருவுள்ளம் கொண்டார். ஒரு நாள் இரவு, திருமாலும், திருமகளும் திருமணக்கோலத்தில் வந்தனர். கலியனும் அவரது ஆட்களும் இவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களை அபகரித்தனர். அனைத்தையும் பறித்த பின்பு, கலியன் திருமாலின் திருவடியில் ஒரு கழஞ்சினைக் கண்டார். அதைப் பறிக்க எண்ணி திருமாலின் பாதத்தைப் பற்றினார். எந்த வழியில் பற்றினால் என்ன, பற்றற்றத் தன்மையை கொடுக்க வல்லதல்லவா அந்தப் பற்றற்றவனின் பாதங்கள்!!! கலியனால் அந்தக் கழஞ்சைக் கழற்ற முடியவில்லை. சரி திருடிய வரையில் கொண்டு செல்லலாம் என்றால் அவரால் அந்த நகை மூட்டையையும் தூக்க முடியவில்லை. கோபத்துடன் கலியன் திருமாலைப் பார்த்து "நீர் என்ன மந்திரம் வைத்திருக்கிறீர்?" என்று கேட்டார். இந்த தருணத்தை எதிர்ப்பார்த்திருந்த திருமாலும் "உமது செவியைக் கொடும். அந்த மந்திரத்தைக் கூறுகிறேன்" என்றார். கலியனும் செவிகொடுக்கத் திருமாலே அவருக்கு திருவெட்டெழுத்து மந்திரத்தையும் அதன் பொருளையும் உபதேசித்தார். 

திருமாலால் ஆட்கொள்ளப்பட்ட கலியன் திருமங்கையாழ்வாராக மாறினார். தான் கண்டுகொண்ட நலம் தரும் சொல்லான "நமோ நாராயணாய" என்ற திருவெட்டெழுத்தின் பெருமையை தனது முதல் பத்துப் பாசுரங்களில் கூறினார். பின்னர் ஆடல்மா எனும் தனது குதிரையில் ஏறி திருப்பிரிதி தொடக்கமாக 88 திவ்யதேசங்களுக்கு மங்களாசாசனம் செய்தார். ஆழ்வார்களில் கடைசியாகத் தோன்றினாலும், மிக அதிகமான திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்தவர் திருமங்கையாழ்வார். மேலும், ஸ்ரீரங்கம் ஆலயத்தின் மதில்களை அமைத்தவரும் இவரேயாவார். திருமங்கையின் தாள்களைப்பணிந்து அவரது பாசுரங்களை வாயாரப் பாடி, மனமார மகிழ்வோம்.

பின் குறிப்பு: தான் ஒரு க்ஷத்ரியன் ஆதலாலும், தன்னை இறைவன் ஆட்கொள்வதற்கு முன் செய்த (வழிப்பறி) முதலிய பாவ செயல்களை நினைத்து வருந்தியும், தனது பல திருமொழிகளுக்கு (இந்த பூமி, மற்றும் அந்த ஸ்ரீவைகுண்டம் ஆகிய நாடுகளை) அரசாள்வதையும், பாவங்கள் கழிவதையுமே பலனாகக் கூறியுள்ளார் (அண்டம் ஆள்வது ஆணை, பாவங்கள் பயிலாவே...).