செவ்வாய், மார்ச் 30, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 153

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

209. குரு:, 210. குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |

214. நிமிஶ:, 215. அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம். 

213. ஓம் ஸத்யபராக்ரமாய நம:

ஸத்ய: அவிதத: உண்மையான, என்றும் வீணாகாத 

பராக்ரமோ யஸ்ய ஸ

வீரத்தை உடையவராதலால் 

ஸத்யபராக்ரம: பகவான் 'ஸத்யபராக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்தியும், வீரமும் என்றும் மாறாதவை (நித்தியமானவை). அவை ஒரு நாளும் வீண்போவதில்லை. எனவே, அவர் 'ஸத்யபராக்ரம:' (உண்மையான வீரமுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

214. ஓம் நிமிஶாய நம:

நிமிலிதே மூடியுள்ளன 

யதோ நேத்ரே எவரது (அவரது) கண்கள் 

யதோ யோக நித்ராரதஸ்ய யோக நித்திரையின் பொழுது 

அதோ நிமிஶ: எனவே, பகவான் 'நிமிஶ:' (கண்களை மூடியுள்ளவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் யோக நித்திரைக் கொள்ளும் பொழுது அவரது கண்கள் மூடியுள்ளன. எனவே, அவர் 'நிமிஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, மார்ச் 21, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 152

 23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

209. குரு:, 210. குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |

214. நிமிஶ:, 215. அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம். 

211. ஓம் தாம்னே நம:

தாம ஜ்யோதி: தாம என்றால் ஒளி (ஜ்யோதி) என்று பொருள்

'நாராயண பரோ ஜ்யோதி:' (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாராயணரே உன்னதமான ஒளியாவார்

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி

தாம: பகவான் ' தாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 தாம என்றால் ஒளிமிக்கது என்று பொருள். மிகச்சிறந்த ஒளிவடிவினராக இருப்பதால் பகவான் 'தாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸர்வகாமானாமாஸ்பதத்வாத்வா அனைத்து ஆசைகளும் சென்றடையும் இடமாக இருப்பதால் 

தாம: பகவான் 'தாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

நம் அனைத்து ஆசைகளும் பகவானின் கருணையாலேயே நிறைவேறுகின்றன. அனைத்து ஆசைகளும் முடிவில் பகவானையே சென்றடைகின்றன. எனவே, பகவான் 'தாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பரம் ப்ரஹ்ம பரம் தாம' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரப்ரஹ்மமே அனைத்தும் சென்றடையும் இடமாக இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

212. ஓம் ஸத்யாய நம:

ஸத்யவசன உண்மைக் கூற்றுக்களாகவும் 

தர்மரூபத்வாத் அறமே வடிவானவராயும் இருப்பதால் 

ஸத்ய பகவான் 'ஸத்ய' (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கெங்கெல்லாம் உண்மையும், அறமும் நிலைத்திருக்கிறதோ, அங்கெங்கெல்லாம் பகவான் இருக்கிறார். மேலும், அவர் (வேதங்களின் வடிவில்) உண்மையான கூற்றாகவும் இருக்கிறார். எனவே, பகவான் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புராணங்கள், அறத்தை நான்கு கால்கள் கொண்ட ஒரு எருதாக உருவகப்படுத்துகின்றன. அந்த நான்கு கால்களில் உண்மையும் ஒன்றாகும். முதல் யுகமான க்ருத யுகத்தில் நான்கு கால்களுடன் இருந்த அறமானது, இந்தக் கலியுகத்தில் வாய்மை என்னும் ஒரே காலில் மட்டும் நின்று கொண்டிருக்கிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.


 

108 திவ்யதேசங்களில் ஒன்றான திருமெய்யம் என்னும் திருத்தலத்தில், பகவான் 'ஸத்யமூர்த்தி', 'மெய்யன்' என்ற திருநாமத்துடனே எழுந்தருளியிருக்கிறார்.

'தஸ்மாத் ஸத்யம் பரம் வதந்தி'

வேதங்களிலும், உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ளது: ஆகவே, அந்த (என்றும் மாறாது இருக்கும்) உண்மையான தத்துவத்தையே பரம்பொருள் என்று கூறுகின்றனர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

ஸத்யஸ்ய உண்மையான பொருட்கள் அனைத்திற்குள்ளும் 

ஸத்யமிதி வா உண்மையின் வடிவாய் இருப்பதால் 

ஸத்ய பகவான் 'ஸத்ய' (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உண்மை எங்கிருந்தாலும், எதனில் இருந்தாலும் அதில் பகவான் உறைகிறார் என்றே கொள்ளவேண்டும். பகவான் அல்லது வேறு உண்மை எதுவுமில்லை. அவர் மாறாத அனைத்திற்குள்ளும் உறைந்து அவற்றிற்கு மாறாத தன்மையை அளிக்கிறார். எனவே, பகவான் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ராணா வை ஸத்யம் தேஶாம் ஏஶ ஸத்யம்' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஜீவாத்மா என்றும் மாறாத உண்மைப் பொருளாகும். அதற்குள்ளும் (அதனிலும் மேம்பட்ட) உண்மையாக பரமாத்மாவே இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

செவ்வாய், மார்ச் 02, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 151

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

209. குரு:, 210. குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |

214. நிமிஶ:, 215. அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம். 

209. ஓம் குரவே நம:

ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும் 

ஸர்வேஶாம் அனைவரையும் (அனைத்தையும்

ஜனகத்வாத்வா தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் 

குரு: பகவான் 'குரு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும், அனைவரையும் (அனைத்தையும்) தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் 'குரு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

210. ஓம் குருதமாய நம:

விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோருக்கும் 

ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால் 

குருதம: பகவான் 'குருதம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார். அந்த ப்ரஹ்மாவே, ப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார். இவ்வாறு, ப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால், பகவான் 'குருதம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தம என்றால் 'உயர்ந்த' அல்லது 'சிறந்த' என்று பொருள். குருதம: என்றால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று பொருள்.

'யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதன்முதலில் நான்முகனைப் படைத்தாரோ

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி பகவான் 'குருதம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.