திங்கள், ஜூலை 04, 2016

ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - முன்னுரை

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த  பாரத தேசமெங்கும்  நிலைநிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி "ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்" ஆகும். இந்த துதி பிறந்த வரலாற்றை இந்தப் பதிவிலும் அதன் பொருளை பின்வரும் பதிவுகளிலும் காண்போமாக.

முதலில் இந்த துதியின் பெயர் காரணத்தை அறிவோம். வடமொழியில் 'கரம்' என்றால் 'கை' என்று பொருள் (இன்று நடைமுறைத் தமிழிலும் இச்சொல் கை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது). 'அவலம்ப' என்றால் 'ஆதாரம்' அல்லது 'தாங்குதல்' என்று பொருள். 'கராவலம்பம்' என்றால் 'நம்மைக் கைக்கொடுத்துத் தாங்குதல்' அல்லது 'நமக்குக் கைக்கொடுத்து உதவுதல்' என்று பொருள் கொள்ளலாம். இந்த துதியில் ஆதிசங்கரர், இந்த சம்சாரத்தில் விளையும் துன்பங்களை எடுத்துக்கூறி, பகவான் 'ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை' இந்த சம்சாரத் தளையிலிருந்து காப்பாற்ற தனக்குக் கைக்கொடுத்து உதவும்படி வேண்டுகிறார். இதன்  மூலம், ஆதிசங்கரர் நமக்கெல்லாம் பிரதிநிதியாக பகவானிடம் வேண்டிக் கொள்கிறார்.

துதி பிறந்த வரலாறு:
இந்த துதி பிறந்ததற்கு காரணமாக ஆதிசங்கரரின் வாழ்விலிருந்து இருவேறு நிகழ்ச்சிகள் பெரியோர்களால் வழங்கப்படுகின்றன. இவை இரண்டையும் சுருக்கமாகப் பார்ப்போம்.


1. மண்டன மிஸ்ரருடன் வாதிட்டது, பின்னர் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தது:
அத்வைத கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு, ஆதிசங்கரர் பலருடன் (மற்ற கொள்கைகளை பின்பற்றுவோருடன்) வாதம் புரிந்து அவர்களை வென்றார். அவற்றுள் தலையானவர் பிற்காலத்தில் 'சுரேஷ்வராச்சார்யார்' என்று பெயர்பெற்று விளங்கிய மண்டன மிஸ்ரர் ஆவார். இவர் பூர்வ மீமாம்சை என்ற கொள்கையைச் சார்ந்திருந்தார். ஆதிசங்கரர் இவருடன் அத்வைதமே சிறந்த கொள்கை என்று வாதிட வந்தார். இந்த வாதத்தின் பொழுது, மண்டன மிஸ்ரரின் மனைவியான உபாயபாரதி நடுவராக இருந்தார்.

நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததோடு அல்லாமல், ஆதிசங்கரர் மற்றும் தமது கணவர் வாதிடும் பொழுது அதற்கு நடுவராக இருந்தும், பின்னர் ஆதிசங்கரருடனேயே வாதிடும் அளவிற்கு நமது சனாதன தர்மத்தின் பெண்கள் அன்று விளங்கினர். ஏதோ, நமது மதத்தில்பெண்களுக்கு உரிமைகள் இல்லை,அவர்களை அடுப்படியில் வைத்து அடிமைப் படுத்தவேண்டும் என்று மனுஸ்மிருதி கூறுவதாகப் பிதற்றுபவர்கள் இதை இருமுறை படிக்கட்டும். 

வாதத்தில் மண்டன மிஸ்ரர் தோல்வி  அடைந்தார். அன்றைய பழக்கத்தின் படி அவர் ஆதிசங்கரரைத் தமது குருவாக ஏற்று துறவறம் பூணவேண்டும். தனது கணவன் துறவறம் ஏற்பதை தாங்கவொண்ணாத உபயபாரதி, 'கணவனும் மனைவியும் இணைபிரியாதவர்கள். ஒருவரை மட்டும் வாதத்தில் வெல்வது ஏற்க முடியாது. எனவே, தன்னையும் வாதத்தில் வெல்லவேண்டும்' என்று ஆதிசங்கரரிடம் கூறினாள். இதை ஏற்ற சங்கரர், உபயபாரதியுடன் வாதம் புரிந்தார். ஆதிசங்கரரை மறை ஞானத்தில் வெல்லமுடியாது என்று உணர்ந்த உபயபாரதி அவரிடம் கணவன்-மனைவி சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, துறவியான அவரால் அதற்கு பதில் உரைக்க இயலவில்லை (அனைத்தையும் அறிந்த அவருக்கு இதற்கான பதில் தெரிந்திருப்பினும், தமது துறவறத்திற்கு களங்கம் வரும் என்பதால் நேரடியாக பதில் உரைப்பதைத் தவிர்த்தார் என்றே நாம் பொருள் கொள்ளவேண்டும்). இதற்கு பதில் கூறுவதற்கு தமக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆதிசங்கரர், தான் இல்வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்து இதை அறிவதே சிறந்ததாகும் என்று தீர்மானித்தார். அவ்வாறே, வேட்டைக்கு வந்து அங்கு உயிர் நீத்த ஒரு அரசனின் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து உட்புகுந்தார். தமது சீடர்களிடம், தனது உடலைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு அரசனின் அரண்மனைக்குச் சென்றார்.

அந்த அரசனோ ஒரு கொடுங்கோலன்;  அவனது ஆட்சியில் மழையின்றி, வளமின்றி அவன் நாடு தவித்தது (திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்). ஆதிசங்கரர் அந்த நாட்டில் கால்வைத்ததுமே, மழைப் பொழியத் துவங்கியது, வளம் பெருகியது. இந்த மாற்றங்களையும், தம்முடன் பழகுவதில் உள்ள மாற்றங்களையும் உணர்ந்த அந்நாட்டின் அரசி ஐயம்கொண்டாள். தமது அமைச்சருடன் ஆலோசித்த அவள், வந்திருப்பது தன் கணவன் அல்ல, வேறு ஏதோவொரு சிறந்த ஆன்மா; இவர் தமது  நாட்டை விட்டு நீங்கினால் மீண்டும் பஞ்சமும்,  துன்பமும் ஏற்படுமென்று அஞ்சினாள். எனவே, மந்திரியும், அரசியும் ஆதிசங்கரரை அரசனின் உடலிலேயே இருக்க வைப்பதற்கு திட்டம் தீட்டினர். அனைத்துப் படைவீரர்களையும் அழைத்து, நாட்டில் ஏதோவொரு துறவியின் உடல் இருந்தால், அதை உடனே எரித்துவிடுமாறு  கூறினர். அதன்படி, வீரர்களும் ஆதிசங்கரரின் உடலுக்குத் தீவைத்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் உடனே அரசனின் உடலை விடுத்து தன்னுடலுக்குள் புகுந்தார். ஆனால், அதற்குள் தீயானது அவரது கைகளை எரித்துவிட்டது. தமக்கு 'கரங்கள்' (கைகள்) கொடுத்தருள, ஆதிசங்கரர் பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரிடம் வேண்டிய துதியே இந்த 'கராவலம்ப ஸ்தோத்திரம்' என்பது முதல் வரலாறு.
இந்த துதியின் முடிவில் கைகள் கிடைக்கப்பெற்ற ஆதிசங்கரர் உபயபாரதியிடம் வாதம் செய்ய  சென்றார். இனி தன்னால் அவரை வாதத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி வாதம் புரியாமலேயே தன் கணவர் துறவறம் பூண அனுமதி அளித்தார். அந்த உபயபாரதியே, சிருங்கேரி சாரதா பீடத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பிகை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

2. காபாலிகன் நரபலி கொடுக்க முனைந்தது:
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த (சில இடங்களில் ஸ்ரீசைலத்தை அடுத்த) காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நரபலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நரபலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை). அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார். தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார். அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது  இரண்டாவது வரலாறு.

வரலாறு எவ்வாறு இருப்பினும், பகவானின் குணங்களைப் போற்றியும், இந்த சம்சாரத் தளையிலிருந்து விடுதலை வேண்டியும் ஆதிசங்கரர் இயற்றிய இந்த அரிய துதியையும் அதன் பொருளையும் பின்வரும் பதிவுகளில் காண்போம்.

1 கருத்து: