புதன், மார்ச் 27, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 107

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:
114. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
119. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பாப்போம்.

114. ஓம் ருத்ராய நம:
ஸம்ஹாரகாலே இந்தப் ப்ரபஞ்சம் அழியும் ப்ரளய காலத்தில் 
ப்ரஜா: அனைத்து ஜீவராசிகளையும் 
ஸம்ஹரன் அவர்களை அழித்து 
ரோதயதீதி (அவ்வாறு அழிக்கும் காலத்தில் அவர்களை) அழவைப்பதால் 
ருத்ர: பகவான் 'ருத்ரன்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரோதயதி என்றால் அழவைத்தல். ப்ரளய காலத்தில் (ப்ரஹ்மாவின் ஆயுள்காலத்தின் முடிவில்) அனைத்து ஜீவராசிகளையும் அழிக்கும்பொழுது பகவான் அவர்களை அழவைக்கிறார். எனவே, அவர் 'ருத்ரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருதம் வாக்கு அல்லது ஒலி 
ராதி ததாதீதி வா 'ராதி' என்றால் தருபவர் 
ருத்ர: பகவான் 'ருத்ரன்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் வாக்கை (அல்லது ஒலியை) வழங்குவதால் பகவான் 'ருத்ரன்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ருதம் - வாக்கு + ராதி - தருபவர் = ருத்ர

ருர்துக்கம் "ரு" என்றால் துக்கம் மற்றும் துன்பத்தைக் குறிக்கும் 
துக்ககாரணம் வா (அனைவரின் துன்பங்களையும் அவற்றை உருவாக்கும் அஞ்ஞானம், மோஹம் போன்ற) காரணங்களையும் த்ராவயதி வா (அவற்றை அழித்துத்) துரத்திவிடுவதால் 
ருத்ர: பகவான் 'ருத்ரன்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் (அனைத்துத்) துன்பங்களையும், அஞ்ஞானம், மோஹம் போன்ற அவற்றின் காரணங்களையும் அழித்து விரட்டி விடுவதால் பகவான் 'ருத்ரன்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ரு - துக்கம், துன்பம் + த்ராவயதி - ஓட்டிவிடுபவர் = ருத்ர

ரோதனாத் அழவைப்பதாலும் 
த்ராவணாத்வாபி தூர விரட்டுவதாலும் 
ருத்ர இதயுச்யதே பகவான் 'ருத்ரன்' என்று அழைக்கப்படுகிறார்.

அழவைப்பதாலும், தூர விரட்டுவதாலும் பகவான் 'ருத்ரன்' என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு ஆதிசங்கரர் எவரை அழவைப்பவர், எதை ஓட்டுபவர் என்று கூறவில்லை. எனவே, இதை மேற்சொன்ன துக்க காரணங்களை அழவைத்தும், ஒட்டியும் விடுகிறார் என்று சேர்த்து பொருள் கொள்ளலாம். ஏனெனில், அடுத்து அவர் அந்த காரணத்தை விளக்கும் சிவபுராண ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

'ருர்துக்கம் துக்கஹேதும் வா தத் த்ராவயதி ய: ப்ரபு: |
ருத்ர இதயுச்யதே தஸ்மாச்சிவ: பரமகாரணம்’ || (ஸம்ஹிதா 6 அத்யாயம் 9.14)
'ரு' என்றால் துன்பங்களும், அதன் மூலகாரணங்களுமாகும். அவற்றை தூர ஓட்டுவதால் அனைத்திற்கும் காரணமான பகவான் சிவன் 'ருத்ரன்' என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஶிவபுராணவசனாத் இவ்வாறு ஶிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பல இடங்களில் குறிப்பிட்டுள்ளபடி அத்வைதத்தில் சிவ-விஶ்ணு பேதங்கள் இல்லை. அனைத்தும் பரப்ரஹ்மமே. ஆதிசங்கரர் இதை முன்பே பூர்வ பாகத்தில் பல மேற்கோள்களைக் காட்டி ஸ்தாபித்துள்ளார். எனவே, சிவனைக் குறிக்கும் அனைத்தும் நாராயணனையேக் குறிக்கும்.

115. ஓம் பஹுஶிரஸே நம:
பஹுனி எண்ணிலடங்கா 
ஶிராம்ஸி தலைகள் 
யஸ்யேதி உடையவராதலால் 
பஹுஶிரா: பகவான் 'பஹுஶிரா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸஹஸ்ரஶீர்ஶா புருஶ:’ (புருஶ ஸூக்தம் 1)
புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:
(பரப்ரஹ்மமான புருஶருக்கு) பல்லாயிரக்கணக்கானத் தலைகள் உள்ளன.

இதி மந்த்ரவர்ணாத்  இந்த (புருஶ ஸூக்த மந்திரத்தில்) கூறியுள்ளபடி.

(புருஶ ஸூக்த மந்திரத்தில் கூறியுள்ளபடி) எண்ணிலடங்கா தலைகள் கொண்டவராதலால் பகவான் ' பஹுஶிரா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைத்துமாக இருப்பதால் அனைத்துமே பகவானின் தலைகளாகும். எனவே, அவருக்கு எண்ணிலடங்கா தலைகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக