செவ்வாய், ஏப்ரல் 17, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 33

அனைவருக்கும் வணக்கம். பயணம் காரணமாக சிறிது நாட்கள் நமது "ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது" பாகங்களை வெளியிட முடியாமல் போயிற்று. தாமதத்திற்கு வருந்துகிறேன்.

நாம் கடந்த 19 பாகங்களாக (14ஆம் பாகம் தொடங்கி 32ஆம் பாகம் வரை)

'கிமேகம் தைவதம் லோகே?' என்ற முதல் கேள்விக்கு ஸ்ரீபீஶ்மாச்சார்யார் அளித்த

"பவித்ரானாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் | 
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" 

என்ற ஸ்லோகத்திற்கு ஆச்சார்யாள் அளித்த மிக நீண்ட உரையை அனுபவித்தோம். மிக நீண்ட பகுதியானதாலும், பகவந்நாம ஸங்கீர்த்தனத்தின் மேன்மையையும், அத்வைத தத்துவத்தையும் விளக்கும் மிக முக்கியமான பகுதியானதாலும், அதன் ஸாரத்தை இன்று மீண்டும் அளிக்கிறேன் (இது பகவத்பாதாளின் மூல உரையில் இல்லை).

பகவான் பவித்ரமானவைகளைக் காட்டிலும் மிகவும் பவித்ரமானவர். அனைத்து புண்ணிய தீர்த்தங்களைக் காட்டிலும் புனிதமானவர். தன்னை த்யானிப்பவர், தரிசிப்பவர், (தனது புகழை) பாடுபவர், துதிப்பவர், பூஜிப்பவர், ஸ்மரிப்பவர் (அவரை நினைப்பவர்), மற்றும் வணங்குபவர்களின் அனைத்து பாவங்களையும் அடியோடு அழிக்கிறார். மேலும் (பிறப்பு இறப்பென்னும் இந்த) ஸம்சார பந்தம் உருவாவதற்கு காரணமாயுள்ள புண்ய பாப கர்மங்களை, அவை உருவாவதற்குக் காரணமாயுள்ள அஞ்ஞானத்துடன் சேர்த்து அடியோடு தனது ஸ்வரூப ஞானத்தின் மூலம் அழிக்கிறார். இதற்கு பகவத்பாதாள் பற்பல ஸ்ருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸ, புராணங்களிலிருந்து மேற்கோள்களை அளித்துள்ளார்.

சுகம் மங்களம் என்று கூறப்படுகிறது (இங்கு சுகம் என்பது மோக்ஷத்தைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்). அடையும் வழியாகவும், அதை தருபவராகவும், மங்களமே உருவெடுத்தது போல பரமானந்த வடிவினராய் இருப்பதால் (பகவான் ஸ்ரீ விஶ்ணு) மங்களமானவைகளை காட்டிலும் மங்களமானவர் என்று ஆச்சார்யாள் உரை அளித்திருந்தார். இதற்கு சில உபநிஶத்துக்களிலிருந்து மேற்கோள் அளித்திருந்தார். அந்த மேற்கோள்களின் ஸாரம் 'பகவான் ஒருவரே' என்பது.

இவ்விடத்தில் பகவத்பாதாள் தானே "ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபட்டவர்கள்; அவ்வாறிருக்க, கடவுள் ஒருவரே என்று எவ்வாறு கூறமுடியும்?" என்று ஒரு கேள்வியாக கேட்டு அதற்கு விடையாக ஜீவாத்மா-பரமாத்மா அபேதத்தை உரைக்கும் பற்பல ஸ்ருதி, ஸ்ம்ருதி, ஸ்ரீமத்பகவத்கீதை ஆகியவற்றிலிருந்து மேற்கோள்களை அளித்தார். மேலும் மும்மூர்த்திகள் (குறிப்பாக பரமசிவனும், நாராயணனும்) ஒன்றே என்று விளக்கும் இதிஹாஸ (ஹரிவம்ஶம்) மற்றும் (ஸ்ரீவிஶ்ணு) புராண மேற்கோள்களைக் கொண்டு விளக்கினார்.

பின்னர் மீமாம்ஸை வாதிகளின் ப்ரதிவாதங்களுக்கு ஸமாதானம் அளித்தார். அர்த்த வாதமான விஷயங்களைக் கூறும்பொழுதும், மந்திரங்களின் ப்ரமாணத்தை (அதிகாரத்தை) நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும் சில பிரமாணங்களை அளித்தார். எனவே, ஆத்மஞானத்தை நாம் நம்பிக்கையுடன் ஒத்துக்கொள்ளவேண்டும் என்றும் , பகவான் விஶ்ணுவை நினைப்பதே (ஸ்மரணையே) நமது ஆத்மாவின் குளியல் (அதை தூய்மையாக்க வல்லது) என்றும் கூறினார்.

முடிவாக,

அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோSபி வா |
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி: ||  
(ஸ்ரீ பத்ம புராணம் 9.80.12)

ஸ்ரீ பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
தூய்மையாக இருக்கின்றானோ அல்லவோ, அவன் எத்தகைய நிலையில் இருந்தாலும், தாமரைக்கண்ணன் பகவான் ஸ்ரீ விஶ்ணுவை நினைத்த மாத்திரத்திலேயே ஒருவன் உள்ளும் புறமும் தூய்மையடைகிறான்.

என்று கூறி இந்த ஸ்லோகத்தின் உரையை நிறைவு செய்கிறார். இனி பகவானின் குணாதிசயங்களை அடுத்த ஸ்லோகத்தில் ஸ்ரீபீஶ்மாச்சார்யார் வர்ணிப்பதையும், அதற்கு பகவத்பாதாளின் உரையையும் அடுத்த பதிவில் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக